கம்பராமாயணம் (உரைநடை) - பாலகாண்டம்
சேற்று நிலத்தில் கால் வைத்த எருமைகள், தம் கொட்டிவில் உள்ள கன்றுகளை நினைத்துக் கொண்டு ஊற்று எனச் சுரந்த பாலை இச் சின்னப் பறவைகள் வாய்வைத்து மடுத்தன. தேரைகள் எனப்படும் பசுமை நிறத் தவளைகள் தாலாட்டுப் பாடின. அவை அதனைக் கேட்டு மயங்கித் துயின்றன.
சேற்று நிலத்தில் எருமைகள் பாலைச் சொரிந்ததால் நாற்று நடும் வயல்கள் வளம் காட்டின. நெற்பயிர்கள் செழித்தன.
அரங்குகளில் அரிவையர், ஆடலும் பாடலும் நிகழ்த்தினர். யாழும் குழலும் இணைந்து இசை அரங்குகளில் இனிமை கூட்டின. சதங்கை ஒலிகள், பதங்களுடன் சேர்ந்து, நாட்டிய நங்கையருக்கு நளினம் சேர்த்தன. இசையும் நாட்டியமும் வசையில் கலைச் செல்வங்களாய்க் கவின் செய்தன. காவியக் கதைகளில் தேர்ச்சி மிக்கவர் சொரியும் கவி அமுதம் செவிநுகர் கனிகள் ஆயின.
நகர் வளம்
இந்நாட்டின் தலைநகர் அயோத்தி என்னும் மாநகர் ஆகும். செல்வச் சிறப்பால் அளகை நகரையும், இன்பச் சிறப்பால் பொன்னகராம் அமராவதியையும் இது ஒத்து இருந்தது. எழில்மிக்க இந் நகரைப் பொழில் சூழ்ந்த மதில்களும், குழிகள்மிக்க அகழிகளும் சூழ்ந்திருந்தன. மதில்கள் விண்ணைத் தொட்டன. அகழிகள் மண்ணின் அடித்தலத்தை அழுத்தின.
காவல்மிக்க இக் கடிநகரை நால்வகைப் படைகள் காத்துப் போற்றின. மக்கள் தம் உயிர் என மன்னனை மதித்தனர். அவனும் மக்களைக் கண்களை இமை காப்பது போல் காத்துவந்தான். ஏழையின் கந்தல், உழைப்பாளியின் ஒரே நிலம் அவர்களின் உடைமைகள்; அவற்றைப் போல அரசன் நாட்டைக் காத்தது, அவன் கடமை ஆயிற்று. பகைவர் காட்டிய பகை, அவன் முன் எரிமுன் வைத்த பஞ்சு ஆகியது. அவர்கள் அஞ்சிப் புறமுது கிட்டனர். மக்கள் பசியும், பிணியும் நீங்க, வளனும் வாழ்வும் பெற்று, அவன் குடை நிழலில் குளிர்ந்தனர்.
உட்பூசலும் வெளித்தாக்கலும் இன்றி நாட்டில் அமைதி நிலவியது; ஆக்கம் தழைத்தது; ஊக்கம் நிலவியது; செம்மைகள் நிலைத்தன. மாதரார்தம் கற்பின் திறத்தால் நாட்டின் பொற்பு உயர்ந்தது. அறத்தின் ஆக்கத்தால் துறக்கமும் தோற்றது. ஆடவர் தம் மறச் செயலால் வீரம் செறிந்தது; புகழ்மிக்க நாடு எனத் திகழ்ந்தது. கொடைச் சிறப்பால் வறுமை நீங்கியது: வள்ளல்கள் என்று ஒரு சிலர் புகழ் பெற முடியாமல் அனைவரும் பிறர் துன்பத்தைக் களைந்தனர். பிறர் கை ஏந்தாமல் பீடும் பெருமையும் பெற்று, மக்கள் வாழ்க்கை நடத்தினர். செல்வம், தனி உடைமை என்று கூற முடியாமல் அனைவர்க்கும் உரியதாய் இருந்தது. கல்வியும் மக்கள் உடைமையாக இருந்தது. கற்றவர் கல்லாதவர் என்ற பேதம் இன்றி, அனைவரும் கல்வி கற்று அறிவிற் சிறந்தவராய்த் திகழ்ந்தனர்.
மகவு வேள்வி
புறச் செல்வத்திலோ, அற வாழ்க்கையிலோ குறை காணாத மன்னன், தன் அக வாழ்வில் நிறைவு காணாத வனாய் வாழ்ந்தான். மக்கட்செல்வம் அவனிடம் வந்து அவனை மகிழச் செய்யவில்லை. யாழும் குழலும் அவனுக்குத் திகட்டிவிட்டன. அமுதமொழி பேசும் குழந்தைகளின் மழலைமொழி கேட்டு மகிழ விரும்பினான். கோடி இருந்தும் என்ன பயன்? நாடித் தன்மடியில் தவழும் நன்மக்களை அவன் பெறவில்லையே.
“ஒருத்திக்கு மூவர், அவனுக்கு மனைவியர்; எனினும் கருத்தரித்துக் காதல் நன்மகனைப் பெற்றுத் தரவில்லை” என்ற குறை அவனை அரித்தது. “சூரிய குலம் அவனோடு அத்தமித்து விடுமோ?” என்ற அச்சம் உண்டாகியது. அவனுக்குப் பின் யார் அந்த நாட்டை ஆள்வது? வாரிசு இல்லாமல் வறுமை உற்றுக் கிடந்தது அவன் வாழ்வு. இன்பம் சேர்ப்பதற்கு ஏந்திழையர் பலர் இருந்தனர்; துன்பம் துடைப்பதற்கு ஒரு மகவு இல்லையே என்ற ஏக்கம் அவனைத் தாக்கியது.
வயித்தியனைக் கேட்டான்; வழிவகை அவனால் கூற இயலவில்லை. ஆசிரியனை அணுகினான். வசிட்டர் அவன் குலகுரு; அரசியல் ஆசான்; வாழ்க்கை வழிகாட்டி: சாத்திரம் அறிந்தவர். அவரை அடைந்து தன் குறையை வெளியிட்டான்.
“பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் மாந்தர்தம் முயற்சியால் பெருகுவன; அவை ஈட்டத் தக்கன; மக்கட் செல்வம் பெறத் தெய்வ அருள் தேவைப்படுகிறது. அதற்கு மறை கற்ற மாமறையோன் நீர் தாம் வழி காட்ட வேண்டும்” என்றான்.
மழை இல்லாவிட்டால் மறையவர் வேள்விகள் இயற்றுகின்றனர்; மற்றையோர் இசை பொழிவித்து இறைவனை வேண்டுதலும் உண்டு. இந்த மரபுகளை ஒட்டி மகவு இல்லை என்றால் யாகம் எழுப்பித்தல் அக்கால மரபாகக் கொண்டிருந்தனர். அதற்குப் புத்திர காமேட்டி யாகம் என்று பெயரிட்டனர்.
“மகவினை நல்கும் மகிமை இந்தப் புத்திர காமேட்டி யாகத்துக்கு உள்ளது என்றும், தக்கவரைத் தலைமையாகக் கொண்டு இதை நடத்துக” என்றும் வசிட்டர் அறிவுரை தந்தார். தெய்வ அருளால் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் விளங்குவான் என்ற நம்பிக்கையும் சேர்ந்து கொண்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், மக்கள், மகவு, சிறப்பால்