கம்பராமாயணம் (உரைநடை) - பாலகாண்டம்
அவன் சமதக்கனி முனிவர் மகன்; அம் முனிவரைக் காத்த வீரியார்ச்சுனன் என்ற அரசன் கொன்றுவிட்டான். தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்க, அந்த அரசனை மட்டும் அன்றி அவன் வாரிசுகளையும் தீர்த்துக் கட்டினான் பரசுராமன். மன்னரே அவனுக்கு நேர் எதிரிகனாய் மாறினர். தனிப்பட்ட பகை, சாதிப் பகையாய் உருக் கொண்டது. இருபத்தொரு தலைமுறைகளாய் அவன் மன்னன் இளைஞர்களைக்களை அறுத்து வந்தான்; அவர்கள் சிந்தும் குருதியைக் குளமாக்கி, அதில் நீராடித் தந்தைக்கு ஈமக்கடன் செய்து, அவருக்கு ஏம நெறி வகுத்துத் தந்தான்; ஒருவாறு சினம் அடங்கித் தவத்தில் கருத்தைச் செலுத்தினான்; வல்லவனுக்கு வல்லவன் தோன்றாமல் இருப்பது இல்லை.
தேவர் திருமாலுக்கும் சிவனுக்கும் பகையை மூட்டி விட்டு, யார் பெரியவர்? என்று குரல் எழுப்பினர். ஆரம்பத்தில் புகழ்மொழிக்குச் செவி சாய்த்துத் தம் நிலை மறந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். “இவர்கள் வில்களில் எது ஆற்றல் உடையது?” என்று வினா எழுப்பினர். தங்களைத் துண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்” என்பதை அறிந்து கொண்டு அவர்கள் தம் கேளிக்கையை நிறுத்திக் கொண்டனர். போரைத் தவிர்த்து அமைதி காட்டினர்.
சிவதனுசு கைமாறி இறுதியில் சனகன் வசம் வந்து சேர்ந்தது; மாலின் வில் சமதக்கினி முனிவரிடம் ஒப்புவிக்கப்பட்டது; பின்பு அவர் மகன் பரசுராமன் அதற்கு வாரிசு ஆயினான். மாலின் வில் தன்னிடம் இருப்பதால் அவன் தருக்கித் திரிந்தான்.
பரசுராமன் பல மன்னர்களைப் புறமுதுகிடச் செய்தவன்; மூத்தவன்; தவத்தில் தலை சிறந்தவன்; ஆணவம் மிக்கவன்; அவன் பெயரைச் சொன்னாலே அரசர் நடுங்கினர்; அவன் முன் வராமல் ஒடுங்கினர். இராமன் வில்லை முறித்த ஒலி விண்வரை எங்கும் அதிர்ந்து சென்றது. இப்பேரொலியைக் கேட்டுப் பரசுராமன் கிளர்ந்து எழுந்தான்; சிவதனுசினை, முறித்து இராமன் அங்கு இருப்பதை உணர்ந்தான்; ‘அவனை வழியில் மடக்கி இடக்கு செய்வது, என்று முடிவுக்கு வந்தான். மணம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில் அவனை நிறுத்தித் தன்னோடு போருக்கு அழைப்பது என்று முடிவெடுத்தான்.
மழுப்படை ஏந்திய இராமன் பரசுராமன்; விற்படை ஏந்தியவன் கோதண்டராமன்; படைக் கருவிகளால் இவர்கள் வேறுபடுத்தி உணரப்பட்டனர். இராமன் அயோத்தி திரும்பினான். சுற்றமும் படைகளும் சூழத் தேர் ஏறி வந்து கொண்டிருந்தான், மழுப் படை ஏந்திய இராமன் வழிபறிக் கொள்ளையன் போல் குறுக்கே வந்து நின்றான்.
“இவன் யார்? ஏன் இங்கு வந்தான்?” என்பது இராமனுக்கு விளங்கவில்லை. தசரதன் முதியோன் ஆதலின், அவன் சரிதம் அறிந்தவனாய் இருந்தான். அவன் கூடித்திரியர் பகைவன்; அவர்களை வேர் அறுத்துப் போர் செய்தவன் என்பதை அறிந்தன். “அடப்பாவி! நீயா?” என்று குரல் கொடுத்து அலறிவிட்டான்; அவன்முன் தான் நிற்க முடியாது என்பதால் அலறி விழுந்தான்; நாப்புலர உயிர்ப்பிச்சை கேட்டான்.
இந்தக் கிழவனைப் பரசுராமன் ஒர் எதிரியாக ஏற்கவில்லை; மறுபடியும் சாதிவெறி அவனைத் தலைக் கொள்ளவில்லை. மதவெறி அவனை மடுத்தது; சிவதனுசா? மாலின் வில்லா? எது உய்ர்ந்தது? என்பது தலைக் கொண்டது; அற்பச் சிறுவன் சொற்பவில்லை சொகுசாக வளைத்துவிட்டான். மாலின் வில்லைக் கண்டு அவன் மலைவது உறுதி” என்று நம்பினான்.
தசரதனுக்குப் பரசுராமனை எதிர்க்கத் துணிவு இல்லை. எங்கே தன் மகனைப் பகையாக்கித் தம் வாழ்வை நகையாக்கி விடுவானோ? என்று திகைத் தான்; செயல் மறந்து நினைவு இழந்து மயக்கமுற்றுத் தரையில் விழுந்து விட்டான்.
இராமனைச் சந்தித்துப் பரசுராமன் தன் கை வில்லைக் காட்டி, இதை வளைப்பது இருக்கட்டும்; முறிப்பது கிடக்கட்டும், எடுத்துத் தூக்க முடியுமா?” என்று கூறி அவன் வீரத்தைத் துண்டி ஊக்குவித்தான்.
“தூக்கவும் முடியும்; அதைக் கொண்டு தாக்கவும் முடியும்” என்றான் இராமன்.
“முதலில் இதனைத் தூக்கி வளை” என்று அந்த இளைஞனை அழைத்தான் பரசுராமன்.
இராமன் அந்த வில்லைத் தன்கையில் வாங்கி, வளைத்துக் காட்டி, அதன் நாணையும் ஏற்றி, அம்பும் குறி வைத்தான்.
“இதற்கு இலக்கு யாது?” என்று கேட்டான்.
“வல்லவன் என்று செருக்கித் திரிந்த புல்லன் யான்; என்னை இலக்கு ஆக்குக” என்றான் பரசுராமன்.
“பகையற்ற உன்மீது மிகை அற்ற நான், அம்பு ஏவமாட்டேன்” என்றான் இராமன்.
“வம்புக்கு இழுத்தேன்; அதற்குரிய விலை தந்துதான் ஆகவேண்டும்” என்றான் பரசுராமன்.
அவன் விட்ட அம்பு அவன் ஈட்டிய தவத்தை வாரிக் கொண்டு இராமனிடம் சேர்ந்தது. முனிவன் தன் தவமும் வல்லமையும் இழந்து, அடங்கிச் சினமும் ஆணவமும் நீங்கித் திருந்தி அமைந்தான்.
பரசுராமன் அரசுராமனிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு கால் சென்றவழித் தவம் செய்ய இமயமலைச் சாரலை நோக்கிச் சென்றான். இராமன் எனறால் கோதண்டராமன்தான் எனறு உலகம் பேசும்படி அவன் புகழ் பன்மடங்காகியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், பரசுராமன், இராமன், என்றான், மாலின், கொண்டு, அந்த, வந்தான், வந்து