கம்பராமாயணம் (உரைநடை) - அயோத்தியாகாண்டம்
மன்னன் உரைத்த உரைகள் அவனுக்கு உவகையை ஊட்டவில்லை; அதே சமயத்தில் பொறுப்புச் சேர்கிறதே என்று சோர்வும் காட்டவில்லை. சுக துக்கங்களைச் சமமாகப் பார்க்கின்ற மனநிலை அவன் தகவாக இருந்தது; இடுக்கண் அது என்று அவன் நடுக்கம் கொள்ள வில்லை. வடுக்கள் மிக்கது என்று அதனை விடுவதாகவும் இல்லை.
பதவி என்பது பிறர்க்கு உதவி செய்வதற்கு அமையும் வாய்ப்பே தவிர, அதை வைத்துக் கோடிகள் குவித்துக் கேடுகளை வளர்ப்பதற்கு அன்று; அரச பதவி என்பது மக்களுக்குத் தொண்டு செய்யும் அரிய வாய்ப்பு; மாந்தர் வாழத் தலைமை ஏற்க ஒருவருக்கு ஏற்படும் நிலைமை; அரசன் என்பதால் உலகம் புகழ்மாலை சூட்டுகிறது; அதற்காக அவன் தலை சாய்க்கவில்லை; தந்தையிட்ட கடமை; அதைத் தள்ளக் கூடாது என்பதால் ஏற்க ஒப்புக் கொண்டான்.
முடிசூட்டு விழா முடிவு செய்யப்பட்டது. அவ் விழா நடத்துதற்குமுன் உலக மன்னர்க்கு ஒலை அனுப்பி அழைப்பு விடுத்தான். அவன் பெருநில மன்னன்; மற்றைய குறுநில மன்னர்களை அழைத்து அவர்தம் கருத்தைக் கேட்டான்.
“மகன் என்ற பாசத்தால் நான் மற்றைய நலன்களைக் கருதாமல் அவசரப்பட்டு எடுத்த முடிவாக இருக்கலாம்; அது தவறாகவும் அமையலாம்; உங்கள் கருத்தை அறிவித்தால் அது பொருத்தமாய் இருந்தால் இதை நிறுத்திக் கொள்ளக் காத்திருக்கின்றேன்” என்றான்.
அரசர் கருத்துரை
அவர்கள் இராமனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துகளை வரிசைப்படுத்தி உரைத்தனர்.
“தானம், தருமம், ஒழுக்கம், ஞானம், நல்ல வரைப் போற்றும் நயம், தீயவரை ஒறுக்கும் தூய்மை, பகைவரை அழிக்கும் தகைமை இவை எல்லாம் இராமனிடம் நிரம்ப உள்ளன”.
ஊர்ப் பொதுக்கிணறு பலருக்கும் பயன்படு கின்றது; பயனுள்ள மரம் பழுத்தால் நயம் உள்ளதாகப் பலருக்குப் பழங்கள் தருகின்றன. வானத்து மழை பயிர்களைப் பசுமையாக்குகிறது. கழனிகளில் நதிப்புனல் பெருகிப் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகிறது. இவற்றை எல்லாம் யாராலும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. மக்கள் இராமனை எல்லா வகையிலும் நேசிக்கின்றனர். அவனும் அவர்களிடம் அன்பும், பரிவும் காட்டுகிறான். அதனால், அவனே தக்கவன்” என்று ஒருமித்த கருத்தை உரைத்தனர்.
தான் எடுத்த முடிவு ஏற்றம் உடையது என்பதால் தசரதன் மகிழ்வு கொண்டான். “இவன் என் மகன் என்பதைவிட உங்கள் ஏற்பு மகன் என்பதில் பெருமைப் படுகிறேன். இவன் உலகக் குடிமகன்” என்று கூறிப் பெருமிதம் கொண்டான்.
கோசலைக்கு அறிவித்தல்
நாள் குறிக்கக் கோள்கள் அறிந்த கணக்கரை அரசன் கூட்டினான். இச் செய்தி சூறைக்காற்று போல நகர் முழுவதும் பரவியது. இராமன்பால் அன்பு கொண்ட அணங்கு அனைய நங்கையர் கோசலை பால் தலை தெறிக்க ஓடினர்.
“மன்னன், உன்மகனுக்கு மணிமுடி சூட்டுகிறான்” என்று மனம் மகிழ்ந்து உரைத்தனர். தென்றலின் சுகத்தை அச்சொற்கள் தேடித் தந்தன. அதே சமயத்தில் வாடையின் சூடும் அவளைச் சுட்டது. வடவைக் கனல் அவளைத் தீண்டியது, தசரதன் ஆட்சியை விட்டு நீங்குகிறான் என்பதால்.
“ஈன்றபொழுதிற் பெரிது உவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
என்ற குறட்பாவுக்கு அவள் விளக்கமாக மாறினாள். தன் மகன் மூத்தவன்; அறிவு முதிர்ந்தவன்; பொறுப்பு ஏற்கத் தக்கவன் என்பதால் தேர்வு சரி எனப்பட்டது. இவற்றோடு நால்வருள் இராமனைப் பெற்றதால் அவள் பேருவகை அடைந்தாள். தனக்கு நெருக்கமான சுமத்திரையை அழைத்துக்கொண்டு நாரணன் கோயிலை நண்ணிப் பூசனைகளும் வழிபாடுகளும் செய்தாள்.
வசிட்டர் அறிவுரை
அடுத்த நாளே முடிசூடும் நாள்” எனக் கணித்து உரைத்தனர். தசரதன் வசிட்டரிடம் முடிசூட்டுதற்கு முன் இராமனைச் சந்தித்து நல்லுரைகள் நல்க வேண்டினார்.
ஆட்சிக்கு வரும் இளவரசனுக்கு நல மிக்க வாசகங்களை வடித்துத் தந்தார்; பட்டம் தாங்கும் விழாவுக்கு முன் பார்வேந்தன் அறிய வேண்டியவை இவை என எடுத்து ஒதினார்.
“நாட்டுக்குக் கேடு விளைவிப்பது உட்பகையும் வெளித்தாக்குதலும் ஆகும்; பகை இல்லாவிட்டால் போர் இல்லை; போர் இல்லை எனில் அழிவு இல்லை; அமைதி நிலவினால்தான் மக்கள் ஆக்கப் பணிகளில் ஊக்கம் காட்டுவர்; செல்வம் செழிக்கும்; அறங்கள் தழைக்கும்”.
“நாட்டு ஆட்சிக்குப் பொருள்வருவாய் தேவை; தேவைக்குமேல் மக்களிடமிருந்து வரித்தொகை பெறக் கூடாது. ஈட்டும் பொருளை நாட்டு வளர்ச்சிப் பணிகளுக்கே செலவிட வேண்டும்; சொந்த சுகங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது”.
“நீதித் துறையில் அரசன் இரு தரப்பினரையும் விசாரித்து நடுவுநிலை பிறழாமல் நீதி வழங்க வேண்டும்; கொடியவரை ஒறுப்பது களைகளை நீக்குவதற்கு நிகர் ஆகும். அப்பொழுதே ஏனைய மக்கள் அச்சமின்றி வாழ முடியும்”.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயோத்தியாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - என்பதால், உரைத்தனர், இல்லை, அவன், மகன், தசரதன், கொண்டான், அரசன், மக்கள்