கம்பராமாயணம் (உரைநடை) - அயோத்தியாகாண்டம்
“உன் தந்தைக்கு வானுலகத்தினின்று அழைப்பு வந்தது; மறுக்க முடியாமல் அவர் போய்விட்டார்” என்றாள்.
மங்கலமாகச் சொன்ன அச்சொற்களை அவனால் சுவைக்க முடியவில்லை.
“இது முதலில் தோன்றிய மின்னல்; அடுத்து இடி ஒலியும் கேட்டது.
“தவத்தை நாடித் தனயன் இராமன் வனத்துக்கு ஏகிவிட்டான்; பத்தினிப் பெண் ஆகையால், சீதையும் உடன் பயணம் மேற்கொண்டாள்; தம்பி யாகையால் அண்ணனை நம்பி இலக்குவனும் உடன் சென்றான்” என்றாள்.
முகத்திரை விலகியது; முழுமதியைக் காண வில்லை; பல்லவி முடிந்தது; அனுபல்லவி தொடர்ந்தது.
“உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன்; என் வாழ்க்கை லட்சியம் நிறைவேறிவிட்டது” என்றாள்.
“பாலூட்டி வளர்த்தவள் பழிதந்து அழிப்பாள்” என்று அவன் எதிர்பார்க்கவில்லை; அமுது என நினைத்து ஆலகால நஞ்சை அவள் தந்திருப்பதை அறிந்தான்; “பாற்கடலில் அமுதம் அன்றி, நஞ்சும் பிறக்கும்” என்ற கதையை அவள் மெய்ப்பித்துவிட்டாள் என்பதை அறிந்தான்; பாசம் விளைவித்த நாசத்தை அறிந்தான்; தன் தாய் கொடுமை செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தான்; மறுபடியும் அவள் முகத்தில் விழிக்க அவன் விழிகள் அஞ்சின; கோசலையிருக்கும் இடம் தேடி ஒடலானான்; “அரவுக்கு நஞ்சு பல்லில்; அன்னைக்கு நஞ்சு சொல்லில்” என்பதை உணர்ந்தான்.
அன்னை கோசலை அடிகளில் விழுந்து வணங் கினான்; “பரதனுக்கும் இச்சூழ்ச்சியில் பங்கு உண்டு” என்று தவறாகக் கருதினாள் அவள்; பார்வையில் அவ்வினாக்குறி அமைந்திருந்தது.
அவன் விழிகளில் வழிந்த கண்ணிர் அம் மாசினைத் துடைத்தது.
“பாசத்தால் உன்தாய் தவறு செய்துவிட்டாள்; தவறு நடந்துவிட்டது; முதலிலேயே களைந்து இருக்க வேண் டும்; இப்பொழுது முள்மரம் ஆகிவிட்டது” என்றாள்.
“சூழ்ச்சிக்கு உடந்தையாய் நான் இருந்திருந்தால் நரகத்தின் கதவு எனக்காகத் திறந்திருக்கும்; அக் கொடுமைக்கு நான் காரணம் அல்லன்; அவள் வயிற்றில் பிறந்ததுதான் கொடுமை” என்றான்.
நெஞ்சு துளைக்கப்பட்டுப் பரதன் அஞ்சி அழுது அலறுவதைக் கண்டாள்; ஆறுதல் கூறி ஆற்றினாள்; இராமனை அவன் வடிவிற்கண்டு ஆறுதல் பெற்றாள்; தன் கண்ணிரைக் கொண்டு அவனைக் குளிப் பாட்டினாள்; சத்துருக்கனன்; அவள் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
“மன்னன் உயிர் நீங்கி, ஏழு நாள்கள் ஆகின்றன; இன்று நாள் எட்டு; அவனுக்கு ஈமக் கடன் செய்து முடிக்க வேண்டும்; எரி தழலில் வைத்து நெறிப்படி இறுதிக்கடன் செய்யவேண்டும்” என்றார் வசிட்டர். முனிவரோடு சென்று வாய்மை மன்னன் அறத்தின் திருஉருவைக் கண்டான்; விழுந்து அலறினான்; எண்ணெய் உண்ட எழில் மேனியைக் கண்ணிர் கொண்டு கழுவினான்.
“கருமக்கடன் செய்தல் தருமம்” என்று அவன் தொடங்கினான்; வசிட்டர் திருத்தம் கொண்டு வந்தார்.
“உனக்கு அருகதை இல்லை” என்றார்.
“அந்தச் சிறு கதை என்ன?” என்று கேட்டான்.
“நீ அவர் சடலத்தைத் தொடக்கூடாது, என்பது தசரதன் ஆணை; அவர் சாவுக்கு உன்தாய் காரணம் ஆதலின், நீ தொடக் தகாதவன் ஆகிவிட்டாய்” என்றார்.
“ஆட்சி உரிமை தந்த மன்னன் எந்த அடிப்படையில் தந்தான்? மகன் என்பதால்தானே! அதை எப்படி இப்பொழுது மறுக்க முடியும்? என்று வினவினான்.
“ஆட்சிக்கும் உரிமை இல்லை? என்பது இதனால் தெளிவாகிறது அன்றோ எனத் தெளிவுபடுத்தினான்.
“சத்துருக்கனன் எந்தத் தவற்றுக்கும் ஆளாக வில்லை; அவனே தக்கவன்” என்று வசிட்டர் கூறத் தம்பியைக் கொண்டு தணல் மூட்டித் தந்தையின் இறுதிக் கடனைப் பரதன் முடித்தான்.
நாள்கள் சில நகர்ந்தன; ஆள்கள் வந்து அவனைச் சூழ்ந்தனர்; அமைச்சர், அந்தணர், நகரமாந்தர் வசிட்டர் அவனை அணுகினர்.
“நாட்டுக்குத் தலைவன் இல்லை, என்றால், ஆட்சி செம்மையாய் நடைபெறாது; சட்டமும் ஒழுங்கும் கெட்டுவிடும்; மற்றைய அறங்களும் செம்மையாய் நடைபெறா; பகைவர் போர் தொடுப்பர்; நீதியும் நிலை குறையும்; உழவும் தொழிலும் ஒய்வு கொள்ளும்; ஆட்சி ஏற்று நடத்துக” என்று வேண்டினர்.
“அண்ணன் இருக்கத் தம்பி ஆட்சியை ஏற்பதில் நியாயம் இல்லை” என்றான் பரதன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயோத்தியாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவள், அவன், வசிட்டர், என்றாள், கொண்டு, பரதன், என்றார், என்பதை, அறிந்தான், அவர், விழுந்து