கம்பராமாயணம் (உரைநடை) - அயோத்தியாகாண்டம்
“உன்னை இந்நிலையில் பார்த்த கண்ணைப் பிடுங்கி எறியாமல் இருக்கின்றேனே” என்று கூறி அங்கலாய்த் தான் குகன். அவன் ஆழ்ந்த அன்பு இராமனைக் கவர்ந்துவிட்டது. “யாதினும் இனிய நண்பனே என்னோடு இருப்பாயாக!” என்று குழைந்து அவனை ஏற்றுக் கொண்டான். குகன் தன் சேனையைச் சுற்றியும் காவல் செய்யுமாறு செய்து, தானும் உறங்காமல் கறங்கு போல் சுற்றி வந்து காவல் செய்தான்.
மறுநாள் பொழுது விடிந்தது; இராமன் காலைக் கடனை முடித்தான்; வேதியர் சிலர் அவனைத் தொடர்ந்து வந்தனர்; குகனைப் பார்த்து இராமன், “படகினைக் கொணர்க; “கங்கையைக்கடந்துஅக்கரைபோகவேண்டும்” என்றான்.
இராமன் மீது அக்கறை காட்டினான். “வனத்து வாழ்வை ஏற்றுத்தான் ஆகவேண்டுமா? இங்கே எங்களோடு கங்கைக் கரையிலேயே நங்கை சீதையோடு தங்கிவிடலாமே?”.
“காலமெல்லாம் இங்கே தங்கி வாழ்ந்து முடிக்கலாம்; இங்கே உங்களுக்கு என்ன குறை? நாங்கள் காட்டு மனிதர்தான்; எனினும், உம் பகைவர்க்கு உங்களைக் காட்டிக் கொடுக்கமாட்டோம்; உண்ண உணவு, உடுக்க உடை, தங்க உறையுள் இவற்றை அமைத்துத் தருகிறோம்.
“தேனும் தினையும், ஊனும் மீனும் உள்ளன; திரிந்து விளையாட விரிந்த காடுகள் உள்ளன. நீந்தி விளையாட நீர்நிறைந்த கங்கை நதி இருக்கிறது. உறுதுணையாகத் தறுகண்மை மிக்க எம் வீரர் உளர்; ஏவலுக்கும் காவலுக்கும் கணக்கற்ற வீரர்கள் இங்கே காத்துக்கிடக்கின்றார்கள்” என்று அன்பு காட்டி வேண்டினான்.
“வீரனே! இங்கு வந்தது சுற்றுலாப் பயணம் செய்ய அன்று; உண்டு உறங்கிக் களித்து விளையாட அன்று; புண்ணிய நதிகள் ஆடவும், ஞான நன்னெறி நண்ணவுமேயாகும்; இதுவே என் அன்னையின் அன்புக் கட்டளை; இது எமக்கு ஏற்பட்ட கால் தளை, பதினான்கு ஆண்டுகள் விரைவில் கழிந்துவிடும். திரும்பும்போது விரும்பி உங்களைச் சந்திப்போம்; உம் விருந்து ஏற்போம்” என்று கூறினான்.
“யாம் உடன் பிறந்தவர் நால்வர்; உன்னோடும் சேர்ந்து ஐவர் ஆகிவிட்டோம்” என்று ஆறுதல் கூறினான்.
குகன் அதற்குமேல் அதிகம் பேச, அவன் அடக்கம் இடம் அளிக்கவில்லை. அவன் கடமை செய்வதில் நாட்டம் கொண்டான். ஓடம் ஒன்று வந்து நின்றது. அதில் மூவரும் ஏறிக் கங்கையைக் கடந்து அடுத்த கரை சேர்ந்தனர்.
வனம்புகு வரலாறு
இளவேனிற் காலம் அந்தக் காட்டுக்குப் பொலிவை ஊட்டியது; இராமன் வரவும் முகில்கள் பூ மழை பொழிந்தன; வெய்யில் இளநிலவைப் போலத் தண் கதிர்களை வீசியது; மரங்கள் தழைத்து நறுநிழல் தந்தன. பனித்துளிகள் சிதறின. இளந்தென்றல் மலர்களில் படிந்து மணம் அள்ளி வீசியது; மயிலினம் நடமாடின; இத்தகைய காட்டுவழியில் இராமன் இனிதாய் நடந்து சென்றான்.
மூவரும் சித்திர கூடம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் பரத்துவாசர் ஆசிரமம் காணப் பட்டது. முனிவர் அவர்களைச் சந்தித்தார்; இராமன் துன்பக் கதையைக் கேட்டு, அன்பு மொழி பேசி ஆதரவு காட்டினார்.
“இந்த ஆசிரமத்திலேயே தங்கி, நீங்கள் அமைதியாகத் தவம் செய்துகொண்டு இருக்கலாம்; இங்கு நீரும், மலரும், காயும், கனியும் நிரம்ப உள்ளன; இது தவம் செய்யத் தக்க சூழ்நிலை உடையது. நதிகள் மூன்றும் சங்கமிக்கும் இடம் இது; அவை கங்கை, யமுனை, சரசுவதி எனும் மூன்று நதிகளின் சங்கமம்” என்றார் முனிவர்.
“இது தவம் செய்யத்தக்க இடம்தான் என்றாலும், எம் நாடாகிய கோசலை நாட்டுக்கு ஒரு யோசனை தூரத்திலேயே இது உள்ளது. இங்கு இருப்பது அறிந்து மக்கள் தொக்கு வந்து தொல்லை தருவர்; அதனால், சேய்மையில் உள்ள சித்திரகூட மலைச் சாரலே தக்கது ஆகும்” என்று கூறி, அவர் கூற்றை மறுத்தான் இராமன்.
பரத்துவாசரிடை விடை பெற்று யமுனைக் கரையை அடைந்தனர்; அதனைக் கடத்தித் தர ஒரு குகன் அங்கே இல்லை; படகும் இல்லை; என் செய்வது? இலக்குவன் அங்கிருந்த மூங்கிற் கழிகளைக் கயிற்றால் பிணைத்துத் தெப்பம் அமைந்தான்; அவர்களை அமரச் செய்தான்; துடுப்புகள் தேவைப்படவில்லை. அவன் கைகளே துடுப்புகள் ஆயின, நீரைத் துடுப்புப் போலத் தள்ளி யமுனையைக் கடந்து அடுத்த கரை வந்து சேர்ந்தான்.
அந்தக் கரையைக் கடந்து சென்றபோது அவர்கள் கல்லும் முள்ளும் கலந்த பாலை நிலத்தைக் கடக்க நேரிட்டது. காலை வைத்து நடக்க முடியவில்லை. இராமன் ஆணைக்கு அஞ்சிப் பகலவனும் பால் நிலவைப் பொழிந்தான்; தணல் வீசும் இடங்கள் தண்பொழில்களாகக் குளிர்ந்தன. கற்கள் மலரென மென்மை பெற்றன. கூரிய பற்களை உடைய புலிகள் கொலைத் தொழிலை மறந்தன. அப்பாலை நிலத்தைக் கடந்து, சித்திரகூட மலையை அடைந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயோத்தியாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - இராமன், அவன், கடந்து, குகன், இங்கே, வந்து, தவம், அன்பு, இங்கு, விளையாட