கம்பராமாயணம் (உரைநடை) - அயோத்தியாகாண்டம்
சுமந்திரன் திரும்புதல்
சுமந்திரன் தானும் தேருமாகமட்டும் திரும்பி வந்த செய்தியை அறிந்து வசிட்டரும் தசரதனும் இராமனைப் பற்றி வினவினர்.
“நம்பி சேயனோ அணியனோ?” என்று தசரதன் கேட்டான்.
“அதை நான் கவனிக்க முடியவில்லை. மூங்கில் நிறைந்த காட்டில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினர்” என்று கூறினான்.
“சென்றவர் இனி மனம் மாறி வரப் போவதில்லை; அதே போலச் செல்லும் உயிரை நிறுத்துவதனால் விளையப்போவது யாதும் இல்லை” என்ற முடிவுக்கு வந்த மன்னன் விடைபெற்றுக் கொண்டான்; அவன் சடலத்தை மட்டும் அங்கே விட்டுச் சென்றான்.
கோசலையின் துயர்
“மன்னன் உயிர் பிரிந்தான்” என்ற நிலை கோசலையைத் துடிக்க வைத்தது. முதத்தை இழந்த அமரர்களைப் போலவும், மணியிழந்த நாகம் போலவும், இளம் குஞ்சுகளை இழந்த தாய்ப் பறவை போலவும், நீரற்ற குளத்து மீன் போலவும் பிரிவால் வாடினாள்; நிலைதடுமாறினாள்.
“காக்க வேண்டிய மகன், தந்தையின் உயிர் போக்கக் காரணமாய் இருந்தானே” என்று வருந்தினாள்.
“நண்டும், இப்பியும், வாழையும், மூங்கிலும் சந்ததிக்காகத்தான் அழிகின்றன. தசரதனும் மகனுக்காகத் தன்னை அழித்துக் கொண்டான்” என்று ஆறுதல் அடைந்தாள்.
மேகத்தில் மின்னல் புரளுவதைப் போலத் தசரதன் மார்பில் கிடந்து புரண்டாள்; சுமத்திரையும் துன்பச் சுமையால் அழுது உயிர் தளர்ந்தாள். மகனைப் பிரிந்த பிரிவும், கணவனை இழந்த துயரும் அவர்களை வாட்டின.
வசிட்ட முனிவர் ஈமக் கடனைச் செய்து முடிக்கப் பரதனை அழைத்துவர நாள் குறித்து, ஆள் போக்கி ஒலை அனுப்பினார்.
வழி அனுப்பச் சென்ற நாட்டு மாந்தர், உறக்கத் தினின்று விழித்து எழுந்தனர்; தேர்ச்சுவடு கண்டு “கார்நிறவண்ணன் ஊர் திரும்பிவிட்டான்” என்று அவர்களும் அயோத்தி திரும்பினர்.
கங்கையைக் கடத்தல்
வனம் புகு வாழ்வு, மனத்துக்கு இனிய காட்சிகளைத் தந்தது. கதிரவனின் ஒளியில் அவன் கரிய மேனி ஒளிவிட்டுத் திகழ்ந்தது. சீதையும் உடன்வரக் காட்டு வழியே நடந்தான். வழியில் களிஅன்னமும் மடஅன்னமும் உடன் ஆடுவதைக் கண்டனர். மேகமும் மின்னலும் போலவும், களிறும் பிடியும் தழுவிச் செல்லுதல் போலவும் இராமன் சீதையோடு நடந்து சென்றான்; அன்னம் தங்கும் பொழில்களை யும், சங்குகள் உறையும் எக்கர்களையும், மலாகள் சிந்தும் பொழில்களையும், பொன்னைக் கொழிக்கும் நதிகளையும் கண்டு மகிழ்ந்தனர்.
வழியில் தவசிகள் அவர்களை வரவேற்றனர்; தம் தவப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்; அரும் புனலில் நீராடித் தீயை ஒம்பிப் பின் அமுது உண்ணும்படி வேண்டினர்.
சீதையின் கரம்பற்றி இராமன் கங்கையில் நீராடினான். அவள் இடையழக்குத் தோற்று வஞ்சிக் கொடி நீரில் முழுகியது. அன்னம் நடைக்குத் தோற்று ஒதுங்கியது. கயல் கண்ணுக்குத் தோற்றது; நீரில் பிறழ்ந்து ஒளிந்தது. கூந்தலின் நறுமணம் கங்கையை வெறி கொளச் செய்தது; அலைகளில் நுரை பொங்கி யதால் கங்கை மூத்துவிட்டது போல் நரை பெற்றது; இதுவரை தன்னில் நீராடுவர்களைப் புனிதப்படுத்தியது; சீதை நீராடியதால் அது புனிதம் அடைந்தது.
நீராடிய பின் நியதிப்படி நிமலனை வணங்கி வேள்விக் கடன்கன் செய்து முடித்தனர்; பின் அம் முனிவர் இட்ட உணவை ஏற்றனர்; “அமுதினும் இனியது” என அதனைப் பாராட்டினர்.
குகன் வருகை
அங்கே அவர்கள் இருக்கும் இடம்தேடித் தறுக்கு மிக்கவேடுவர் தலைவன் குகன் வில்லேந்தியவனாய் வந்து சேர்ந்தான்; அவன் கல்லினும் வலிய தோளினன். படகுகள் ஆயிரத்துக்கு அவன் நாயகன்; கரிய நிறத்தினன்; யானைக் கூட்டம் போன்ற அரிய சுற்றத்தினன்; சீற்றமின்றியும் தீயெழ நோக்கும் விழியினன்; கூற்றுவனும் அஞ்சும் குரலினன்; சிருங்கிபேரம் என்னும் நகர் மருங்கு வாழ்ந்துவருபவன், தேனும் மீனும் ஏந்தி, மானவன் ஆகிய இராமனைக் காண வந்தான்; அவன் தங்கியிருந்த தவப்பள்ளியின் வாயிலை அடைந்தான்.
“இறைவா! நின் கழல் சேவிக்க வந்தனன்” என்றான். இலக்குவன் அவனை மேலும் விசாரித்தான்.
மீனும் தேனும் இராமன் உண்டு பழக்கம் இல்லை; எனினும், அன்பன் கொண்டு வந்து அளித்தவை ஆதலின் அவற்றை வேண்டா என்று மறுக்கவில்லை.
“அன்புடன் படைத்தது; தின்பதற்கு இனியது” என்று கூறி ஏற்றுக்கொண்டான் “அமுதினும் இனியது” என்று பாராட்டினான்; “இதை யாம் ஏற்றுக்கொண்டோம்; அதுவே உண்டதற்குச் சமம்; நீர் மனநிறைவு கொள்ளலாம்” என்று கூறி அவற்றை அவர்களிடமே திருப்பித் தந்தான்; கண்ணப்பன் ஒப்பதோர் அன்பினை அவ்வேடன்பால் கண்டான்; காளத்தி வேடனாகக் கங்கை வேடனைக் கருதினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயோத்தியாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - போலவும், அவன், இனியது”, பின், இராமன், உயிர், இழந்த