கம்பராமாயணம் (உரைநடை) - அயோத்தியாகாண்டம்
திருப்புமுனை
இராமனுடைய மணக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த தசரதன், அவனை ஆட்சியில் அமர்த்தி, மணி முடிதரித்த அரசு கோலத்தில் காண விழைந்தான். அதற்குக் காரணம் என்ன? இராமன் தக்க பருவத்தை அடைந்தான். என்பது அன்று; தசரதன் முதுமையின் நுழைவாயிலில் கால் அடி எடுத்து வைத்தான் என்பதுதான். தன் தோள் சுமையை மாற்று ஆள்மீது ஏற்ற நினைத்தான்.
நரைமுடி ஒன்று அவனுக்குத் தன் முதுமையை அறிவித்தது; தான் இனி வாழ்க்கையில் கரை ஏற வேண்டும் என்று நினைத்தான். நிலைக் கண்ணாடி முன் புதிய நினைவு தோன்றிது. பெருநிலக் காவலனின் கறுத்து இருந்த மயிர்முடி ஒன்று வாழ்க்கையை வெறுத்து வெளுத்துக் காட்டியது; அவன் செவியில் வந்து மோதியது; அவன் மூப்பைப் பற்றி ஓதியது.
“ உனக்கு வயது ஆகிவிட்டது; இனி வாய்ப்புத் தர முடியாது; ஆட்சியை மாற்று; காளைப் பருவத்து ஆளை உன் மகனாய்ப் பெற்றிருக்கிறாய்; நாளையே அவனுக்கு மணிமுடி சூட்டு; நீ காட்டுக்கு நடந்து காட்டு; இம்மைக்கு வேண்டுவன தேடிக் கொண்டாய்; மறுமை வெறுமை யாய்க் கிடக்கிறது. தவம் செய்க; வாழ்நாளை அவம் ஆக்காதே; இளமைக்கு அழகு இன்புற்று இருத்தல்; முதுமைக்கு ஆக்கம் அறிவு மிக்க நோக்கம்; இங்கே இருந்தால் ஏற்படும் தேக்கம்; அமையட்டும் தவத்தில் ஊக்கம்” என்று அறிவுறுத்தியது.
“காடு வா வா என்கிறது; வீடு போபோ என்கிறது” என்னும் நிலையைத் தசரதன் அடைந்தான். அறிவுடை அமைச்சர் இருந்தனர்; செறிவு மிக்க வேள்வியர் இருந்தனர்; அவர்கள் எடுத்து உரைக்காத அறிவுரையை ஒரு மயிர்முடி தோற்றுவித்தது. அது வரலாற்றுத் திருப் பத்துக்குத் துணை செய்தது; “மாட்சிமிக்க இராவணன் வீழ்ச்சி அடைதற்கு உரிய காலம் வந்துவிட்டது” என்று அறிவிக்கும் முன்னறிவிப்புக் காட்சியாக இது விளங்கியது. அவன் ஆற்றிய தீவினைகள் இந் நரை முடி வடிவத்தில் வெளுத்து வந்து, அவனைக் கொல்லுமாறு செயல்பட்டது.
தசரதன் மனமாற்றம்
தசரதன் அமைச்சர் அவையைக் கூட்டினான்; வசிட்டரை அழைப்பித்தான்; ஆன்று அவிந்து அடங்கிய சான்றோரை அழைத்தான்; அரசியல் சட்டம் அறிந்தவர் அமைச்சர், சாத்திர சம்பிரதாயங்கள் அறிந்தவர் குலகுரு வசிட்டர்.
எந்த முடிவையும் தானே துணிந்து எடுக்கத் தசரதன் விரும்பவில்லை; வீட்டுப் பிரச்சனையாக இருந்தால் தம் மனைவியரைக் கேட்டுச் செய்யலாம்; இதனால், ஏற்படுகின்ற பாதிப்பு நாட்டு மக்களைச் சாரும்; அதனால், அமைச்சர் அவை கூட்டி ஆலோசனை நடத்தினான்.
தசரதன் அமைச்சர் எத்தகையவர்? வள்ளுவர் காட்டும் அமைச்சியல் நன்கு அறிந்தவர்; அரசியல் நுட்பம் உணர்ந்தவர்; விலை கொடுத்து வாங்க முடியாத மனநிலை பெற்றவர்கள்.
அமைச்சர் இயல்புகள்
தசரதன் அமைச்சர் குலத் தொன்மையும், கலைச் செல்வமும், கேள்வி ஞானமும், நடு நிலைமையும் உடையவராய் விளங்கினார். குலத் தொன்மை என்பது அக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. காலம், இடம், கருவி இம் மூன்றையும் நூல் வழியும் ஒற்றர் வழியும் ஆராய்ந்து, தெய்வ அருளையும் நம்பிச் செயலாற்றினர். அரசன் சினத்துக்கு அடங்கித் தாம் சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்; அறவழிகளினின்று என்றும் பிழை செய்ய நினைக்கமாட்டார்கள். இடித்து உரைக்கும் துணைவர் இல்லாத ஆட்சி, வீழ்ச்சியுறும் என்பதை அறிந்தவராய்ப் படித்து உரைப்பர். உறுதிகளைக் கேளாத அர னதனக்கு இறுதிகளைத் தேடிக் கொள்வான். அதனால், அவனுக்கும் நாட்டுக்கும் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லது எது என்று முடிவு செய்யும் இயல்பினர். அவர்கள் மருத்துவர்போல் தக்க அறிவுரைகள் தரும் செருக்கினை உடையவர்; கசக்கும் என்பதால் அவன் இசையான் என்று நினைத்து அடங்கி இருக்க மாட்டார்கள். மனதில் பட்டதை மட்டும் கூறாமல் நன்கு ஆராய்ந்து காரண காரியங்களைக் காட்டித் தம் முடிவுகளுக்குச் சான்றுகள் தருவர். முன்னோர் காட்டிய வழி இது என்று அறிந்து, அதனால் ஏற்பட்ட ஆக்கமும் கேடும் கண்டு உரைப்பர்; பழம்பொருள் ஆராய்ச்சி செய்து அதனை நிலை நாட்டக் கருதாமல் வருபொருள் இது என்று முன்கூட்டி அறிவிப்பர். அரசுக்கு இவர்கள் தூண்களாக நின்று செயல்பட்டனர்.
புறத்தாக்கு எதுவும் நிகழவில்லை; அகநோக்கு எதுவும் அவன் அறிவிக்கவில்லை; கூட்டிய சூழ்நிலை ஏதும் அறியாத அவர்கள், அவன் வாய் திறந்து மொழி வதைக் கேட்க ஆவல் நிரம்பியவராய் அமர்ந்திருந்தனர்.
தசரதன் தன் மனநிலையை எடுத்து உரைத்தான்; அவர்கள் செவிமடுத்தனர்.
“சொல்வது புதுமை; அதனால், அது அதிர்ச்சியைத் தரலாம்; என்றாலும், அறிவு முதிர்ச்சி உடையவர் தக்கது என்று இதனை ஏற்றுக் கொள்வர். இதுவரை என் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தீர்; இனி என் தவமாட்சிக்குத் தடையாக நிற்க மாட்டீர் என்று நினைக்கிறேன்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயோத்தியாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - தசரதன், அமைச்சர், அவன், அதனால், ஆராய்ந்து, அறிந்தவர், எடுத்து