கம்பராமாயணம் (உரைநடை) - ஆரணியகாண்டம்
இராமன் முன்னிலையில் அம் முனிவனும் அவன் மனைவியும் தீக்குளிக்க விரும்பினர். மற்றவர் நம்பிக்கைகளை இராமன் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. மற்றைய முனிவரும் தவசியரும் இதை ஒரு பெரு விழாவாக மதித்துப் பாராட்ட அவர்கள் முத்தி நிலை அடைய முந்திக் கொண்டனர். இராமன் தீயோரைத் தீண்டி, அவர்களுக்கு விடுதலை அளித்தைப் போலவே நல்லோர் நயப்புகளையும் கேட்டு அருள் செய்தான். சரவங்கன் தெய்வத் திருமகன்முன் உயிர்விட்டதால், பிறப்பு ஒழிந்த இறப்பு, அவனுக்குக் கிட்டியது. அவன் மனைவியும் அப் பெருநிலையை விருப்புடன் ஏற்றுக் கொண்டாள்.
தமிழ் முனிவர் அகத்தியர் சந்திப்பு
சரவங்கன் இறுதி யாத்திரை இராம இலக்குவரைத் துயரத்தில் ஆழ்த்தியது. சரவங்கனது ஆசிரமத்தைவிட்டுச் சுமை நீங்கிய உணர்வோடு மெதுவாய் அவர்கள் நடந்தனர்; விண்ணை முட்டும் மலைகளையும், பசுமை நிறைந்த மரங்களையும், கடுமையான பாறைகளையும், ஒடும் நதிகளையும், சரியும் சாரல்களையும், நீர்த் தடாகங்களையும் கடந்தனர்; வழி நெடுக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்தித்தவர் தாம் அடைந்து வரும் இன்னல்களை எடுத்துரைத்தனர். அரக்கர் இழைக்கும் அநீதிகளை எடுத்துக் கூறி, அவர்களை அழித்து அறம் தழைக்கச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.
“நாட்டை விட்டுக் காட்டை அடைந்ததும் ஒரு வகையில் நல்லதாயிற்று” என்று இராமன் கருதினான். வருந்தி வாடும் அருந் தவசியர் இடையில் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை மகிழ்வித்தான். எந்தவித இடையூறும் இன்றி, இனிமையாய்ப் பத்து ஆண்டுகள் அவர்களைக் கேளாமலே கழிந்து சென்றன.
வேதம் கற்ற முனிவரிடைப் பழகிய இராமன், தமிழ் கற்ற அகத்தியரைக் காண விரும்பினான். அகத்தியர் இருக்கும் இடம்தேடி நடந்தான். கதீக்கணன் என்னும் முனிவனைச் சந்தித்து, அகத்தியர் வாழும் மலையை அறிய விரும்பினான்.
அகத்தியர் செய்த அரிய செயல்கள், கதைகளாகப் பேசப்பட்டன. அவற்றுள் இது ஒன்று. தேவர்களை எதிர்த்துத் தப்பி ஓடிய அவுணர் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டனர். அவர்களைத் தேடித் தரும்படி தேவர் வேண்டினர். கடலைக் குடித்து அகத்தியர் அவர்களைக் காட்டிக் கொடுத்தார் என்பது ஒரு கதை.
வாதாவி என்பவன், முனிவர்களில் வயிற்றில் ஆட்டிறைச்சியாகப் புகுந்து, அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான். அக் கொடியவனை விழுந்கி, வயிற்றின் உள்ளே உருத்தெரியாமல் சீரணித்து அழித்த கதை அடுத்த கதையாகும்.
பார்வதி திருமணத்தில் இம்ய மலையில் தேவர் குவிய வடக்கு உயர்ந்தது. தெற்கு தாழ்ந்தது. அதைச் சமன்படுத்த அகத்தியர் தென் திசை அனுப்பப்பட்டார். அது முதல் பொதிகை மலையில் அவர் தங்கினார் என்பது அடுத்த கதை.
“சிவபெருமான் வடமொழி இலக்கணத்தைப் பாணினிக்கும், தமிழ் இலக்கணத்தை அகத்தியருக்கும் அருள் செய்தார்” என்பது மற்றொரு கதை. ‘அகத்தியரே தமிழ் மொழிக்கு முதன்முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்தார்’ என்று பேசப்படுகிறது. இத்தகைய பெருமைமிக்க தமிழ் அறிஞரைச் சந்திப்பதில் இராமனுக்குப் பேரரர்வம் ஏற்பட்டது. இதனை ‘ஒரு பண்பாட்டுக் கலப்பு’ என்று கூறலாம். வடமொழி காவியத்தில் தமிழுக்குட் பெருமைதரும் செய்தியாய் இது அமைந்துள்ளது.
அகத்தியரும் இராமனது வருகையை, எதிர் நோக்கி இருந்தார்; அகம், குளிர இராமன் அகத்தியரைச் சந்தித்தான்; அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் தான் கொண்ட மதிப்பை வெளிப் படுத்தினான்.
‘அரக்கர் செய்யும் இரக்கமற்ற செயல்களைத் தடுத்துத் தீமைகளைக் களைய வேண்டும்’ என்று அகத்தியரும் வேண்டினார். அதனோடு நில்லாமல் தான் வைத்திருந்த ஆயுதங்கள் சிலவற்றை இராமனுக்கு அளித்தார்; திருமால் வைத்திருந்த வில் ஒன்றனையும், ஒப்புயர்வற்ற வாள் ஒன்றையும், சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில் மேருவை வில்லாக வளைத்துப் பூட்டிய அம்பு ஒன்றனையும் தந்தார்.
இராமன் சீதையோடு தங்குதற்கு, உரிய இனிய சூழல் அமைந்த இடம் பஞ்சவடி என்றும், அதன் அருகில் மலைச்சாரல் ஒன்று உள்ளது என்றும், அந்தப் பஞ்சவடியில் கனிகளைத் தரும் வாழை மரங்களும் பசிய செந்நெற்கதிர்களும், தேன் சிந்தும் பொழில்களும் மிக்க கவின்மிகு நதிகளும் உள்ளன என்றும், நீர் வளமும் நில வளமும் மிக்க அந்தச் சோலை தங்கு வதற்கு ஏற்றது என்றும் அகத்தியர் கூறினார்.
மேகநிற வண்ணனாகிய இராமன் அறிவுக் கடலாய் விளங்கிய அகத்திய முனிவரிடமிருந்து பிரியா விடை பெற்றுப் பஞ்சவடி நோக்கி நடந்தான்; பாகு அனைய சொற்களைப் பேசிய பாவையாகிய சீதை யும், வீரம் காட்டிய தம்பியும் பின் தொடரப் பயணம் தொடர்ந்தது.
சடாயுவைச் சந்தித்தல்
காவதம் பல கடந்தனர்; நதிகள் மலைகள் சோலைகள் அவர்களுக்கு வழிப்பட்டன. புதிய புதிய இடங்களைக் கண்டு அவர்கள் இறும்பூது எய்தினர். எதிர்பாரமல் அங்கே கழுகின் வேந்தைக் கண்டு தொழுது வணங்கினர்.
அரசிளங்குமரர்களைத் தவசிகளின் கோலத்தில் காண அப்பறவை வேந்தனுக்கு வியப்பு விஞ்சியது.
“நீவிர் யாவிர்”? என்று வினவினான்.
“தசரதனின் மைந்தர்” என்று பதில் இறுத்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரணியகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - இராமன், அகத்தியர், தமிழ், அவர்களுக்கு, என்றும், என்பது