புதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்
பெருந்தொழில் வாய்ப்புகள்:
இம்மாவட்டத்தில் டிட்கோ ஆதரவில் எண்பது கோடி ரூபாய் மூலதனத்தைக் கொண்டு டிறால்விங் பல்ப் மற்றும் விஸ்கோஸ் ஸ்டேபிள் பைபர் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையால் 2000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், சுமார் 10,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.சிப்காட் ஆதரவில் ரூபாய் 292.75 இலட்சம் முதலீட்டில் ஹார்டு போர்டு தொழிற்சாலை ஒன்றும் அமையவிருக்கிறது. இதனால் சுமார் 200 பேர் வேலை வாய்ப்பு பெறலாம்.
சோளத்தைப் பக்குவம் செய்து, குழந்தை உணவுப் பொருட்களுக்கும், டெக்ஸ்ட்ரோஸ், குளூகோஸ், ஸ்டார்ச் இவைகளுக்குப் பயன்படும் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு வேளாண்மைத் தொழில் கார்ப்பரேசன் ஆய்வில் வைத்துள்ளது. இது ஆலங்குடி வட்டத்திலாவது திருமயம் வட்டத்திலாவது அமையலாம். சுமார் ஆயிரம் பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வேர்கடலை சந்தைக்குப் பெயர் பெற்ற இடம். வேர்கடலை வனஸ்பதி தயாரிக்க உதவும் அத்தியாவசிய மூலப்பொருள் ஆதலால், இங்கு 200 டன் உற்பத்தித் திறன் கொண்ட வனஸ்பதித் தொழிற்சாலை ஒன்று அமையும் வாய்ப்பு உள்ளது.
சிறுதொழில் வாய்ப்புகள்:
சிறுதொழில் சேவை நிலையம் இம்மாவட்டத்தில் கீழ்க்கண்ட சிறுதொழில்களை அமைக்க ஆலோசனை வழங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் 46,400 டன் வேர்க்கடலை பயிராகிறது. 20,000 டன்கள் எண்ணெய் உற்பத்திக்கும் பயன்படுகிறது. மீதமுள்ளதைக் கொண்டு மேலும் சில எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் அமைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. இத்துடன் மணிலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் துவங்கலாம். முந்திரிப் பருப்பு பாடம் பண்ணுவதும், முந்திரி எண்ணெய் உற்பத்தியும் சிறந்த லாபம் தரக்கூடிய தொழில்கள். கந்தர்வக்கோட்டையில் இதற்கென ஒரு தொழிற்சாலை உள்ளது. இதைத் தவிர்த்து இம்மாவட்டத்தில் வேறு தொழிற்சாலைகள் கிடையாது. ஆண்டுக்கு 2000 டன் முந்திரி பயிராகும் இம்மாவட்டத்தில் இன்னும் பல ஆலைகள் திறக்க முடியும்.
முந்திரிப் பருப்பும், முந்திரி எண்ணெயும் அந்நியச் செலாவணியை ஈட்டி தருபவனாகும். மக்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள சுமார் 1200 டன் முந்திரிப் பழங்கள் மாட்டுத் தீவனமாக உபயோகிக்கப் படுகின்றன. இவைகளைப் பதப்படுத்தி ஜாம், ஸ்குவாஷ் தயாரித்து விற்பனைக்கு அனுப்ப இயலும். குறைந்த மூலதனத்தில் நிறைந்த இலாபம் கிடைக்கும். முந்திரிக் கொட்டையில் பிரவுன் கலரில் மெல்லியத் தோல் ஒன்று மூடியிருக்கும். இது ஆடு, மாடு தோல்களைப் பதப்படுத்த மிகவும் சிறந்ததாகும். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் இதைப் பரிந்துரை செய்துள்ளது. ஆறு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்து பயன் பெறலாம்.
இம்மாவட்டத்திலிருந்து 5000 டன் புளியங்கொட்டை மாட்டுத்தீவன உற்பத்திக்காக கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இதைக் கொண்டு துணி ஆலைகளுக்கும், கைத்தறித் துணிகளுக்கும் தேவைப்படும் ஸ்டார்ச் தயாரிக்க முடியும். ஒரு இலட்சம் ரூபாய் மூலதனத்தில் நிறைந்த இலாபம் தரும் தொழிலாகும்.
மீனைப் பதப்படுத்துதல் அன்னிய செலாவணி ஈட்டித் தரும் தொழிலாகும். மீன்களையும், இறால்களையும் பதப்படுத்தி, டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்வது அதிக இலாபம் ஈட்டும் தொழிலாகும். சுமார் ஆறு இலட்ச ரூபாய் முதலீட்டில் பலருக்கு வேலை வாய்ப்பும் அதிக இலாபமும் பெறலாம். 3430 இயந்திரப் படகுகள் இருக்க வேண்டிய இம்மாவட்டத்தில் 1550 படகுகளே பயன்பாட்டில் உள்ளன.
படகு கட்டும் கூடம் ஒன்று அமைக்க சுமார் ஒரு இலட்ச ரூபாய் முதலீடு போதுமானது. இக்கூடத்தில் 30 அடி நீளம் கொண்ட 18 படகுகள் கட்ட முடியும். அறந்தாங்கி வட்டத்தில் மிமிசல் பகுதி இத்தொழிலுக்கு ஏற்ற இடமாகும். சுமார் 100 பேர் வேலை வாய்ப்பும் பெறுவர். கடல் உப்பைக் கொண்டு சாப்பாடு உப்பு, பண்ணைகளுக்குப் பயன்படும் உப்பு, உயர்தரமான உப்பு, மாடுகளுக்குப் பயன்படும் உப்பு, டிஸ்டில் வாட்டருக்கு தேவைப்படும் உப்பு, மாக்னீசியம் கார்பனேட்டுக்குத் தேவைப்படும் உப்பு என்று பல வகை உப்புகள் தயாரிக்கும் தொழில் அமைக்கவும் வாய்ப்பு உள்ளது.
பவநகர் மத்திய ஆராய்ச்சி நிலையத்தை அணுகினால் இத்தொழில் பற்றிய ஆலோசனைகளைப் பெறலாம். பேப்பர், சர்க்கரை மற்றும் இரசாயனத் தொழில்களுக்குத் தேவைப்படும் ஒருவகைச் சுண்ணாம்பு கடற்கரைகளில் கிடைக்கும் கிளிஞ்சல்களிலிருந்து தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 1500 டன் கடற்சுண்ணாம்பு தேவைப்படுகிறது.
நீண்ட கடற்கரையைப் பெற்றுள்ள அறந்தாங்கி வட்டம் இத்தொழில் அமைய ஏற்ற இடம். சுமார் 1 இலட்சம் மூலதனத்தில் தொழிற்சாலை அமைக்கலாம். சலவை சோப்புகளுக்கு ஸின்தடிக் டிடர்ஜன் என்னும் கலவைப் பொருள் சேர்க்கப்படுகிறது. எண்ணெய் கொழுப்புப் பொருட்கள் கிடைக்காததால் அரிசி உமியிலிருந்து இப்பொருள் எடுக்கப்படுகிறது. சுமார் 10,000 ரூபாய் முதலீட்டில் தினசரி 50 கிலோ ஸின்தடிக் டிடர்ஜன்ட் தயாரிக்க முடியும். மாட்டுத் தீவனம் தயாரிக்கவும் மிக்க வாய்ப்புகள் இம்மாவட்டத்தில் உள்ளன சாக்பீஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருள் இம்மாவட்டத்தில் நிறைந்துள்ளதால், கல்வி நிலையங்களுக்குத் தேவையான சாக்பீஸ்களைத் தயாரித்து அளிக்க முடியும்.
இவை தவிர இம்மாவட்டத்தைச் சுற்றிலுமுள்ள பெரிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான இரும்பு வார்ப்படங்கள், இரும்பு குழாய்கள் செய்யும் தொழிற்சாலைகளைக் களத்தூர் அல்லது திருமயத்தில் அமைக்கலாம். இம்மாவட்டத்தில் புதுக்கோட்டையில் மட்டுமே தோல் பதனிடும் தொழிற்சாலை இயங்குகிறது. மேலும் சில தோல் பதனிடும் நிலையங்களை அமைக்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இம்மாவட்டத்தில், சுமார், தொழிற்சாலை, ரூபாய், உப்பு, முடியும், வேலை, புதுக்கோட்டை, எண்ணெய், தோல், வாய்ப்பும், தேவைப்படும், முதலீட்டில், வாய்ப்பு, உள்ளது, பெறலாம், தயாரிக்க, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, ஒன்று, கொண்டு, முந்திரிப், தமிழ்நாட்டுத், மூலதனத்தில், இலாபம், தொழிலாகும், தகவல்கள், அமைக்கலாம், முந்திரி, இலட்சம், பயன்படும், வாய்ப்புகள், பேர், அதிக, ஆதரவில், தரும், இதனால், கிடைக்கும், மத்திய, ஆராய்ச்சி, இலட்ச, அறந்தாங்கி, இரும்பு, பதனிடும், | , தேவையான, ஸின்தடிக், ஏற்ற, pudukkottai, இத்தொழில், படகுகள், information, தயாரிக்கும், மூலப்பொருள், கொண்ட, பொருட்கள், இடம், வேர்கடலை, ஆலங்குடி, வட்டத்திலாவது, பெறுவர், சிறுதொழில், அமைக்க, மாட்டுத், பதப்படுத்தி, தயாரித்து, தொழில், ஸ்டார்ச், ஆண்டுக்கு, districts, மேலும், பேருக்கு, நிறைந்த