கரூர் - தமிழக மாவட்டங்கள்
திருவெஞ்சமாக்கூடல் :
இது கரூர் இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கில் உள்ளது. இறைவன்-விகிர்த நாதேசுவரர், இறைவி-விகிர்தநாயகி. சுந்தரர் பதிகம் பாடிய தலம். வெஞ்சன் என்னும் வேட மன்னன் வழிபட்ட தலம். திருக்கோயில் சிறிது பள்ளத்தில் காணப்படுகிறது.
முக்கிய ஊர்கள் :
கரூர் :
இவ்வூர் நகராட்சியாகவும், ஊராட்சி ஒன்றியத் தலைமையிடமாகவும் மாவட்டத் தலைநகராகவும் விளங்குகிறது. அமராவதி நதிக் கரையில் அமைந்த இவ்வூர் கைத்தறி நெசவுக்குப் புகழ்பெற்று விளங்குகிறது. சாயம் தோய்த்தலும், அச்சடித்தலும் இங்கு அதிகமாக நடை பெறுகின்றன. கால்நடை வளம் மிகுதியாயுள்ளதால் பால், வெண்ணெய், தயிர் முதலியன பல ஊர்களுக்கும் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை அலுவலகம் இங்குள்ளது. சிறந்த வணிகத் தலமாக விளங்குவதால், அரசு அலுவலகங்களும், வங்கிகள் பலவும் நிறைந்துள்ளன. முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்றனர். கம்பு, சோளம் முதலியன மிகுதியாக விளைகின்றன. எள், பருத்தி, புகையிலை ஆகியனவும் பயிராகின்றன.
அரவக் குறிச்சி :
இவ்வூர் கரூருக்குத் தென் மேற்கில் 18 மைல் தொலைவில் உள்ளது. இங்கு மைசூர் அரசரால் கட்டப்பட்ட கோட்டை இடிபாடுடன் காணப்படுகிறது. கைத்தறி நெசவு சிறப்புத் தொழிலாக நடைபெறுகிறது. பல பகுதிகளுக்கும் கைத்தறித் துணி ஏற்றுமதியாகிறது. சாயம் தோய்த்தலும் பரவலாக நடைபெற்று வருகிறது.
சின்னத்தாராபுரம் :
கரூருக்குத் தென் மேற்கில் உள்ள சிற்றுர். கல் தச்சு வேலைக்குப் பெயர் பெற்றஊராக விளங்குகிறது.
தண்ணீர்ப்பள்ளி :
குளித்தலைக்கு அருகில் உள்ள தண்ணீர்ப்பள்ளி கிராமத்தில் சாந்தி வனம் என்னும் இடம் உள்ளது. இது இந்திய கத்தோலிக்க கிறிஸ்துவ சங்கத்தினரால் நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவைச் சார்ந்த சுவாமி அருளானந்தா இதனுடைய அமைப்பாளர். இந்த ஆசிரமத்தில் இந்து முறையிலான கிறித்துவ பூசைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நெரூர் :
கரூருக்கு ஐந்து மைல் கிழக்கில் உள்ளது. புராதன சிவன் கோயில் ஒன்றும், விஷ்ணு கோயில் ஒன்றும் உள்ளன. சித்தரான சதாசிவ பிரம்மம் அவர்களின் சமாதி இவ்வூர்ச் சிவாலயத்தில் காணப்படுகிறது.
பள்ளப்பட்டி :
அரவக்குறிச்சியில் இணைக்கப்பட்டிருந்த இப்பகுதி தற்போது தனி ஊராக அந்தஸ்து பெற்றுள்ளது. ஒருகாலத்தில் இவ்வூர் தோல் வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. இங்கு முஸ்லீம்கள் மிகுதியாக வாழ்கின்றனர்.
புகளூர் :
கரூருக்கு வடமேற்கில் சுமார் பத்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. இரயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு பெரிய சர்க்கரை ஆலை நடைபெறுகிறது. இதனால் மக்கள்தொகை மிகுதியாய் உள்ளது. கரும்பு அதிக அளவில் பயிராகிறது. வாழைப்பழத்திற்கும் இவ்வூர் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது. பல மாநிலங்களுக்கும் இங்கிருந்து வாழைப்பழம் ஏற்றுமதியாகிறது. தென்னிந்திய சர்க்கரைப் பொருளாதாரத்தில் புகளூர் முக்கிய இடம் பெற்றதால் அகண்ட காவிரியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புகளூரை ஒட்டியுள்ள தவிட்டுப்பாளையத்தையும் வேலூரையும் நாமக்கல் மாவட்டத்தையும் இப்பாலம் இணைக்கிறது. வியாழக் கிழமைகளில் சந்தை கூடுகிறது. வேளாண்மை வளம் சிறந்து காணப்படுகிறது. தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள காகித ஆலையும் இவ்வூர் வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. புகளூரில் சேரர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரூர் - Karur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, கரூர், இவ்வூர், இங்கு, காணப்படுகிறது, தமிழக, tamilnadu, மாவட்டங்கள், தமிழ்நாட்டுத், விளங்குகிறது, மைல், தகவல்கள், தென், | , நடைபெறுகிறது, ஏற்றுமதியாகிறது, தொலைவில், மேற்கில், தண்ணீர்ப்பள்ளி, கரூருக்கு, கோயில், ஒன்றும், கரூருக்குத், இடம், சிறந்து, புகளூர், உள்ள, அதிகமாக, தலம், என்னும், முக்கிய, இரயில், information, karur, districts, கைத்தறி, சாயம், முஸ்லீம்கள், வாழ்கின்றனர், இங்கிருந்து, முதலியன, தோய்த்தலும், வளம், மிகுதியாக