கன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்
கயிற்றுத் தொழில்:
தென்னையின் ஓலை, நார் ஆகியவற்றிலிருந்து கயிறு முறுக்கும் தொழில் இம்மாவட்டம் முழுவதும் காணப்படுகிறது. கொல்லங்கோடு, வைகாலூர், தேங்காய்ப்பட்டினம், பூந்துறை, குளச்சல், மணவாளக் குறிச்சி, பழைய கடை, ஈத்தாம்பொழி, மணக்குடி, மண்டைக்காடு, இராஜாக்கமங்கலம் முதலிய இடங்களில் இத்தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பனைத் தொழில்:
வாழை மரம், தென்னை மரம் போல பனை மரத்தின் ஒவ்வொரு பொருளும் தமிழகத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரஷ்கள் செய்வதற்கு பனந்தும்பு வெளிநாட்டில் தேவை இருப்பதால் விளவங்கோடு, கல்குளம் வட்டங்களிலிருந்து பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் துணைத் தொழில்களாக பனந்தும்பு செய்வது, பனைவெல்லம் காய்ச்சுவது, பனை ஓலைக் கூடைகள் முடைவது, விசிறி, முறம் தயாரிப்பும், பனம்-நுங்கு, கிழங்கு, காய், சர்பத், பதநீர் தயாரிப்பதும் தொழில்களாக விரிவடைந்துள்ளன.
எண்ணெய் தொழில்:
தென்னை மிகுந்திருப்பதால் எண்ணெய் ஆட்டும் தொழில் வளர்ந்துள்ளன. புல் தைலம் நறுமணப் பொருட்களில் சேர்க்கவும், மருந்துகள் செய்யவும் பயன்படுகிறது. பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உப்பளங்கள்:
உப்பு உற்பத்தி இம்மாவட்டத்தின் கடல்தொழிலில் முக்கியமானது. ஏறத்தாழ 6000 தொழிலாளர் இதில் ஈடுபட்டுள்ளனர். கேரளத்தின் தேவையை இம்மாவட்டம் நிறைவு செய்கிறது. புத்தளம், பால்குளம், கோவளம் தட்டாரிருப்பு, தாமரைக்குளம், குளச்சல் முதலிய ஊர்களில் இத்தொழில் சிறந்து விளங்குகிறது.
மீன்பிடிப்பு:
இம்மாவட்டத்தில் நடைபெறும் பெருந்தொழில்களில் மீன்பிடிதொழில் முக்கியமானது. 40 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்ட படகுகளும், 5000 மேற்பட்ட கட்டுமரங்களும் கொண்டு மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்பிடிதொழில் முக்கிய ஊர்களாக கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகள் விளங்குகின்றன. இம்மாவட்டத்தில் பிடிக்கப்படும் மீனின் அளவு ஏறத்தாழ 21,500 மெட்ரிக் டன்கள் ஆகும்.
மீன் பண்ணை:
தமிழக அரசின் முயற்சியால் மணக்குடி காயலில் 350 ஏக்கர் பரப்பில் ஒரு மீன் பண்ணை நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் பல வகை ஆய்வுகளை நடத்தி வருகிறது. சங்கு குளிக்கும் தொழிலும், மீன் எண்ணெய் எடுக்கும் சிறுதொழில் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. இனையம் என்னும் கிராமத்தில் மீனுலர்த்தும் கூடம் கட்டப்பட்டு, கருவாடுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திருவாங்கூர் மினரல்ஸ் லிமிடெட்:
இம்மாவட்டத்தில் அரசு நடத்தும் மிகப்பெரிய தொழில் இதுவாகும். இத்தொழிற்சாலை மணவாளக் குறிச்சியில் அமைந்துள்ளது. அணு ஆராய்ச்சி துறையின் ஆளுகையின் கீழ் நடைபெறுகிறது. இதில் தமிழக அரசுக்கு 5 விழுக்காடு பங்கு உள்ளது. இங்கு எடுக்கப்படும் மண்ணில் இல்மனைட்டும், மோனசைட்டும் அணு ஆய்வுக்குப் பயன்படுவதால் மும்பையிலுள்ள டிராம்பேக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் இந்நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ):
இதுவரை டிட்கோ நிறுவனம் 45 தொழிற்பிரிவுகளைத் தோற்றுவித்துள்ளது. அதில் 10 தொழிற்பிரிவுகள் பொதுத்துறையின் கீழும், மீதமுள்ள 35 தொழிற்பிரிவுகள் கூட்டுத் துறையின் கீழும் நிறுவப்பட்டுள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், தமிழக, கன்னியாகுமரி, மீன், tamilnadu, மாவட்டங்கள், வருகிறது, குளச்சல், ஏற்றுமதி, இம்மாவட்டத்தில், எண்ணெய், தகவல்கள், தமிழ்நாட்டுத், ஈடுபட்டுள்ளனர், நடைபெறுகிறது, மேற்பட்ட, மீன்பிடிதொழில், துறையின், கீழும், | , தொழிற்பிரிவுகள், டிட்கோ, ஆராய்ச்சி, இதில், பண்ணை, பனந்தும்பு, மணவாளக், மணக்குடி, இம்மாவட்டம், information, kanniyakumari, districts, முதலிய, இத்தொழில், தொழில்களாக, முக்கியமானது, செய்யப்படுகிறது, தென்னை, மரம், ஏறத்தாழ