தாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
பொதுவாகப் பல்லவர்கள் காலத்தில் இந்தியர்கள் தென்திசை வழியைப் பயன்படுத்தினார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து மார்குயி, தெனாசரீம், தாய்லாந்திலுள்ள தகுவாபா, புகட்தீவு,
திராங் முதலிய இடங்களுக்கும், மேலும் அங்கிருந்து தெற்கே உள்ள சுமத்திரா, ஜாவா,
போர்னியோ தீவுகளுக்கும் சென்றதாக சான்றுகள் கிடைத்திருக்கின்றன (Mahash Kumar
Sharan: 1974:15) இவ்வழியாகப் பல்லவர்கள் காலத் தமிழர்கள் சமயம், கலை
பரப்புவதற்காகவும் வாணிபம் செய்வதற்காகவும் சென்றார்கள் என ஓரளவு அறுதியிட்டுக்
கூறத் தொடர்புள்ள ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இராசராச சோழனின் மெய்க்கீர்த்தியும், தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயக் கல்வெட்டுகளும் சோழர்களுக்கும் தாய்லாந்துக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. சோழர்கள் கடாரத்தைக் கைப்பற்றிய பின் தாய்லாந்தின் சில பகுதிகள் சோழர்களின் மேலாட்சியின் கீழ் வந்தன என நம்பப்படுகிறது. ஏனென்றால் தென் தாய்லாந்தும் இணைந்த பகுதிதான் கடாரம் என்று ஒருசாரர் குறிப்பிடுகின்றனர். இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனுக்கு அவன் கடாரத்தை வென்றதால் 'கடாரம் கொண்டான்' என்ற பட்டப் பெயர் வந்தது. 10 ஆம் நூற்றாண்டில் தென் தாய்லாந்தில் கடாரம் என்ற பெயரில் சோழர்களின் மேலாதிக்கம் இருந்தது என புகிட்சுங்கோலா (Bukit Sungala) போன்ற பகுதிகளிலிருந்து கிடைக்கும் சான்றுகளிலிருந்து தெரிகிறது. கடாரப் படையெடுப்பு விவரங்கள் தஞ்சை பெரிய கோயிலின் உள்ளே நடு விலமைந்த மேற்குச் சுவரிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இராசேந்திரன் தன்னுடைய ஆற்றல்மிக்க கப்பற்படையைக் கொண்டு கடல் நடுவிலுள்ள கடாரத்தின் அரசனாகிய சக்கிரம விசயோதுங்கவர்மனைப் போரில் புறமுதுகிடச் செய்து, அவனது பட்டத்து யானையையும், பெரும் பொருளையும், வித்தியாதரத் தோரணத்தையும் கவர்ந்து கொண்டான். ஸ்ரீவிசயம், பன்னை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், மாபப்பாளம் (பப்பாளம்), மெவிலிபங்கம் (இளம்பங்கம்), வளைப்பந்தூர், தக்கோலம், மாடமலிங்கம் (தமாலிங்கம்), இலாமுரிதேசம், நங்காவரம், கடாரம் ஆகிய இடங்களையும் கைப்பற்றினான் என்று இராசேந்திர சோழன் புகழைப் போற்றும் வகையில் கல்வெட்டுச் செய்திகள் அமைந்துள்ளன. இதில் கூறப்பட்டுள்ள மூன்று இடங்கள் தாய்லாந்தில் உள்ளன. அவையாவன: இலங்காசோகம் (இன்றைய சொங்லா-Songla), மாடமலிங்கம் (இன்றைய நாகோன் சிதம்மாரட் - Nakkhon Sithammarat), ஸ்ரீவிசயா (இன்றைய நாகோன் பத்தோம்-Nakhon Pathom) ஆகும்.
தாய்லாந்திற்கு வெகு அருகில் இருக்கும் நாடு கம்போடியா. கம்போடியா அரசர் அருகே தாய்லாந்தில் அமைந்திருந்த ஸ்ரீவிசயா அரசின் தாக்குதலிலிருந்து தன்னுடைய நாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் சோழ அரசரின் உதவியை நாடியதாகவும், சோழ அரசருக்கு ஒரு தேர் அன்பளிப்பாக அனுப்பியதாகவும் தஞ்சாவூர் கரந்தை செப்பேடுகள் கூறுகின்றன. இராசேந்திரனின் எட்டாம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1020) இந்தக் கரந்தைச் செப்பேடுகள் வெளியிடப் பட்டன. கடாரம் போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலும் புத்த சமயத்தைப் பரப்புவதற்குப் பாலி, சமஸ்கிருதம் போன்ற வடமொழி களையும் தமிழையும் தொடர்பு மொழிகளாக வீரராசேந்திரன் பயன்படுத்தினான். சோழர்கள் ஆட்சி செய்த பொழுது புத்த சமயம்
தாய்லாந்தில் ஓரளவு தழைத்தோங்கத் தொடங்கியது. கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், சைவ சித்தாந்தம் நூல்கள் முதலிய தமிழ் மணம் கலந்த இலக்கியங்கள் தென்கிழக் காசியாவிற்குச் சென்று பரவின. இதனால் தென்கிழக்காசிய மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் கலந்தன. இம்மாதிரியான தமிழ்மொழி தாக்கத்தின் சூழமைவு சோழர்கள் காலத்தில் தோன்றி வளர்ந்தது எனலாம்.
தாய்லாந்து தமிழர்கள்
இன்றைய நிலை :
தாய்லாந்தில் முதற்கட்டமாக குடியேறியிருக்கும் தமிழர்களின் சந்ததியினரையும் அடுத்தடுத்த கட்டமாக குடியேறிய தமிழர்களையும் நான்கு பிரிவாக இன்று பிரிக்கலாம். (1) தாய் இனத் தமிழர்கள் (2) தாய் பிராமணர்கள் (3) தமிழ்-தாய் வழித் தோன்றல்கள் (4) தமிழ் முஸ்லீம்கள் எனப் பிரிக்கலாம்-அவர்களின் இன்றைய நிலையை இப்போது காண்போம்.
தாய் தமிழர்கள்:
பல்லவர்கள் காலத்திலும், சோழர்கள் காலத்திலும் தமிழர்கள் குறிப்பாகக் கல்தச்சர், ஸ்தபதி, பிராமணர், வணிகர் முதலியோர் தாய்லாந்தில் குடியேறினர். அவர்களில் பலர் அந்நாட்டிலேயே தங்கி நிலைத்த குடிமக்களாய் வாழ்ந்து வந்தனர். தாய்லாந்தில் குடியேறிய திராவிட பெருங்குடி மக்கள் தம் நாட்டிலிருந்து செல்லும் போது சேர நாட்டவராக, பாண்டிய நாட்டவராக, சோழ நாட்டவராக, தொண்டை நாட்டவராகச் சென்றனர். இன்னும் சொல்வதானால் பிராமிணர்களாக, ஆதிசைவர்களாக, வேளாளர்களாக, செட்டியார்களாக, அகம்படியர்களாக, மறவர்களாக, கம்மாளராக, பிற இனத்தவர்களாக அங்குச் சென்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தாய்லாந்தில், தமிழர், தமிழர்கள், கடாரம், இன்றைய, தாய், நாடுகள், வாழும், சோழர்கள், தமிழ், தகவல்கள், பல்லவர்கள், நாட்டவராக, தமிழ்நாட்டுத், காலத்திலும், நாகோன், சென்றனர், மாடமலிங்கம், இலங்காசோகம், | , ஸ்ரீவிசயா, கம்போடியா, புத்த, தன்னுடைய, தென்கிழக்காசிய, ஆட்சி, செப்பேடுகள், பிரிக்கலாம், குடியேறிய, தஞ்சாவூர், countries, tamilnadu, information, living, persons, tamils, thailand, tamil, காலத்தில், முதலிய, சோழனின், சோழர்களின், தென், இராசராச, ஓரளவு, உள்ள, சமயம், இராசேந்திர