தாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தென்கிழக்காசியாவிலுள்ள தாய்லாந்தில் நிலையாகக் குடியேறி வாழும் தமிழர்களின்
எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தாக்கம்
பழங்காலத்திலிருந்து தாய்லாந்தில் இருந்தது, இன்றும் ஓரளவு தொடர்ந்து இருந்து
வருகிறது.
5,14,000 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள தாய்லாந்தின் வடக்கே பர்மாவும், இந்துமாப்பெருங்கடலும், கிழக்கே தாய்லாந்து வளைகுடாவும், கம்பூசியாவும் (கம்போடியா), தெற்கிலும், வடக்கிலும் லாவோஸ”ம் இருக்கின்றன. மேலும் கிரா பூசந்தி வழியாக மலேசியா தீபகற்பத்தின் எல்லை வரையிலும் தெற்கு நோக்கிச் செல்லும் தாய்லாந்து, மலேசியாவின் எல்லை அருகே இருக்கின்றது. பாங்காக் இந்நாட்டின் தலைநகரமாகும். தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் சியாம் ஆகும்.
முதல்கட்ட தமிழர் குடியேற்றம்
பண்டைக் காலத்திலும் இடைக்காலத்திலும் வங்காளம், பர்மா நிலவழியாகவும் அல்லது வங்காள விரிகுடா கடல் மார்க்கம் வழியாகவும் தாய்லாந்திற்குச் சென்று வந்துள்ளார்கள். தமிழ்நாடு- தாய்லாந்து பண்டைக் கால உறவினைப் பற்றிப் பட்டினப்பாலை, கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களில் சில குறிப்புகள் உள்ளன. தாய்லாந்துடனான தமிழரின் பண்டைய கால கலாச்சார வாணிப உறவு தொடர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்த பல்லவர் காலத்தில் நீடித்தது. மேலும் தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளைப் பல்லவர்கள் கைப்பற்றினார்கள் என நம்பப்படுகிறது. தாய்லாந்தில் தகுவா-பா என்னுமிடத்தில் ஒரு பல்வவர் காலத் தமிழ் கல்வெட்டுக் கிடைத்திருப்பதால் இக்கல்வெட்டுக் காலத்தில் தமிழ் வாணிபக் குடியேற்றங்கள் தாய்லாந்தில் இருந்திருப்பதைப் பற்றிச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
இக்கல்வெட்டில் சேனாமுகம் என்ற சொல் இருப்பதால் படைப் பிரிவுகள் உடைய வாணிபக் கூட்டுறவுச் சங்கங்கள் இருந்ததையும், பல்லவர் காலத்தில் தாய்லாந்து தீபகற்பத்தில் குடியேறியவர்களின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இப்படைகள் உதவியிருக்கலாம் என்றும் அறிய வருகிறோம். இந்தக் கல்வெட்டு பழைய தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு விசயநந்தி விக்கிரவர்மனின் திருவல்லம் கல்வெட்டோடு ஒப்புமையுடையதாகக் காணப்படுகிறது. விசயநந்திவர்மன், பல்லவப் பேரரசர்களுள் இறுதியாகச் சிறப்புற்று விளங்கிய மூன்றாம் நந்திவர்மன் ஆவான். இப்பல்லவ அரசன் கி.பி. 846 முதல் 869 வரை ஆண்டவன் ஆவான். இக்கல்வெட்டு வாசகங்கள் மூலம் தமிழகத்து 'மணிக்கிராமம்' என்ற வணிகக் குழுவினரைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தாய்லாந்திலுள்ள விஷ்ணு கோயிலில் குளம் ஒன்றை வெட்டி மூன்றாம் நந்திவர்மனின் பட்டப் பெயரையே குளத்திற்கும் பெயராய் வைத்தான் என்று அறிய முடிகிறது. தாய்லாந்தில் ஸ்ரீதெப் எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டு பல்லவ கிரந்த முறையைப் பயன்படுத்தி எழுதப் பட்டிருக்கின்றது. இக் கல்வெட்டு இன்று தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் கம்போடியா அரசர்களும் பல்லவர்களுக்குரிய 'வர்மன்' என்ற பட்டப் பெயரைப் பூண்டு இருந்தனர். கம்போடிய அரசர்களின் பெயர்கள் முறையே பலவர்மன், சித்திரசேசனம், மகேந்திரவர்மன், ஈசானவர்மன், இரண்டாம் பலவர்மன், ஜெயவர்மன், இரண்டாம் ஜெயவர்மன், கிருதவர்மன், சிரேஷ்டர்வர்மன், உருத்திரவர்மன், யசோவர்மன், ஐந்தாம் ஜெயவர்மன், ஹர்ஷவர்மன், சூரியவர்மன் என்று அமைந்துள்ளன. இந்தப் பெயர்களில் 'வர்மன்' எனும் பெயர்ச்சொல் 'சத்திரியரை'க் குறிக்கும் சிறப்பு பெயராக அமரகோசம் எனும் சமஸ்கிருத நிகண்டும், தமிழ்நிகண்டுகளும் தெரிவிக்கின்றன. மேலும் கி.பி.ஏழாம் நூற்றாண்டளவில் 'வர்மன்' எனும் பட்டப் பெயரைச் சூடியிருந்த இந்திய அரசர்கள் பல்லவரே ஆவர். எடுத்துக்காட்டாகக் கம்போடிய அரசர் பலவர்மனுக்குப் பிறகு சித்திரசேனன் 'மகேந்திரவர்மன்' (கி.பி 604-627) என்ற பட்டப் பெயருடன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
அதே காலத்தில் தமிழ்நாட்டில் பல்லவ அரசன் மகேந்திரவர்மன் ஆட்சி புரிந்து வந்தான். இந்திய அரசர்களுள் பல்லவ மரபினைத் தவிர, பிற அரச மரபினருள் யாரும் 'மகேந்திரன்' என்றபெயரையோ 'வர்மன்' என்ற பட்டப் பெயரையோ அக்காலத்தில் பெருவழக்காகச் சூட்டிக் கொள்ளவில்லை. இச்சான்றுகளிலிருந்து பல்லவர்களுக்கும் தாய்லாந்தை ஆட்சி செய்து வந்த கம்போடியா அரசர்களுக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டுமெனப் புலனாகிறது.
இரண்டாம் நரசிம்மன் எனும் புகழ்வாய்ந்த இராசசிம்மன் காஞ்சியில் கைலாச நாதர் கோயிலை எழுப்பியவன். இப்பல்லவ அரசன் மனைவி ரங்கபதாகை தென்கிழக்காசியாவை ஆண்டு வந்த சைலேந்திர அரசனின் மகள் என காஞ்சிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. பல்லவ காஞ்சியில் உருவாகிய 'சகா' காலக் கணிப்பு முறை(Saka era) தென்கிழக்காசிய நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. தவிர காரைக்கால் அம்மையார் வழிபாடு இருந்ததாகக் கிடைத்திருக்கும் சான்றுகள்; எட்டாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இந்தோனேசியா சென்றதாகக் கிடைக்கும் மூலங்கள்; காஞ்சியைச் சேர்ந்த வினிடாருசி கி.பி ஆறாம் நூற்றாண்டில் வியட்நாமில் ஜென்புத்த சமயத்தை அறிமுகப் படுத்தினார் எனும் செய்திகள்; காஞ்சிபுர வஜ்ரபோதி கி.பி எட்டாம் நூற்றாண்டில் வஜ்ராயன புத்த சமயத்தைத் தென் கிழக்காசியாவில் பரப்பினார் என விளக்கும் ஆதாரங்கள்; தென் கிழக்காசிய கட்டிட, சிற்பக் கலையில் உள்ள பல்லவ கட்டிடக்கலைத் தாக்கங்கள்-முதலிய வரலாற்றுக் குறிப்புகள் பல்லவர்களுக்கும் தென்கிழக்காசியாவிற்கும், குறிப்பாகத் தாய்லாந்திற்குமுள்ள தொடர்பினை உறுதிபடுத்துகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தாய்லாந்தில், தமிழர், பல்லவ, பட்டப், வாழும், தாய்லாந்து, எனும், காலத்தில், கல்வெட்டு, வர்மன்&, நாடுகள், மேலும், நூற்றாண்டில், ஆட்சி, ஜெயவர்மன், அரசன், இரண்டாம், தமிழ், கம்போடியா, தமிழ்நாட்டுத், தாய்லாந்தின், தகவல்கள், persons, tamil, thailand, மகேந்திரவர்மன், பலவர்மன், living, கம்போடிய, இந்திய, தவிர, tamils, தென், | , எட்டாம், காஞ்சியில், பல்லவர்களுக்கும், வந்த, countries, சமஸ்கிருத, information, வாணிபக், சான்றுகள், தொடர்ந்து, பல்லவர், குறிப்புகள், பண்டைக், அறிய, tamilnadu, பாங்காக், எல்லை, இப்பல்லவ, ஆவான், இக்கல்வெட்டு, மூன்றாம், முதலிய