சிங்கப்பூரில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தமிழ்க் கல்வி:
தமிழ்க்கல்வியானது சிங்கப்பூர் நிறுவப்பட்ட காலத்திலேயே தொடங்கப்பட்டது என்றாலும் அது ஒரு வகையில் ஒருமுகப்படுத்தப்பட்டு முறையாகவும் சீராகவும் இயங்கத் தொடங்கியது 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் என்றே சொல்ல வேண்டும். சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய மூத்த துணை ஆசிரியரான திரு கோ.கலியபெருமாள் பின்வருமாறு கூறுகின்றார்:- இரண்டாம் உலகப்போருக்கு முன்பே தனியார் பள்ளிகளும் மிஷன் தமிழ்ப் பள்ளிகளுமாக மொத்தம் 18 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவற்றில் சுமார் 1000 மாணவர்கள் பயின்று வந்துள்ளனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர ஆரம்பித்தது. இந்தக்காலக் கட்டத்தில்தான் அதாவது 1945க்குப் பின்னர்தான் இரண்டாம் மொழியின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்தனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதும் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் முக்கியக் கூறுகளில் ஒன்று இரண்டாம் மொழி கற்பதின் அவசியத்தை வலியுறுத்தியதாகும். அக்கல்விக் கொள்கையின்படி ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தத்தம் தாய் மொழியை இரண்டாம் மொழியாகப் பயில ஊக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் 1959ஆம் ஆண்டில் இரண்டாம் மொழி கட்டாயப்பாடமாக்கப்பட்டதால் தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தமிழைத் தவிர பிற தென்னிந்திய மொழிகளைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க முன்வந்தனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆக ஆக, பல ஆங்கிலப் பள்ளிகளில் மேலும் பல தமிழாசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு தமிழ் கற்கும் மாணவர்களது எண்ணிக்கையும் தமிழ்க்கல்வியின் தரமும் படிப்படியாக வளர்ச்சியடையவே ஆங்கில உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்க்கல்வியைத் தொடர்ந்து கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனவே 1955க்கும் 1957க்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சுமார் 150 மாணவர்கள் இங்குத் தமிழ் கற்றனர். பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல தமிழ் நிலையங்கள் தேவைக்கேற்பத் தோற்றுவிக்கப்பட்டன. தற்சமயம் சிங்கப்பூர் கல்வி அமைப்பின்கீழ் ஒன்பது தமிழ்மொழி நிலையங்கள் இயங்கி வருகின்றன. 1955இல் முதன்முறையாகத் தமிழ் மொழியை ஆங்கில உயர்நிலைப்பள்ளிகளில் கற்பிக்கத் தொடங்கியபோது தமிழை ஒரு பாடமாகப் பயின்ற சுமார் 50 மாணவர்களே கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதினர். 1961இலிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் புதுமுகத் தேர்வில் தமிழையும் ஒரு முக்கியப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுதினர்.
தொடக்க நிலைக் கல்வியோடு உயர்நிலைக் கல்வியையும் மாணவர்கள் பெற வேண்டும் என்ற காரணத்தால் 1960ஆம் ஆண்டு உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி உருவானது. செயின்ட் ஜார்ஜ் தொடக்கப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இத்தொடக்கப் பள்ளியில் போதுமான மாணவர்கள் இன்மையால் 1975இல் மூடப்பட்டது. அதுமுதல் முற்றிலும் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழி நிலையமாக இது இயங்கி வந்தது.
உமறுப்புலவரின் திருப்பெயர் நிலைத்திருக்கும் பொருட்டு 1983 ஜனவரியில் செயின்ட் ஜார்ஜஸ் தமிழ்மொழி நிலையம் என்றழைக்கப்பட்ட இந்நிலையத்திற்குக் கல்வி அமைச்சு அப்பெயரைச் சூட்டியது. அன்றிலிருந்து இந்நிலையம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் மொழி நிலையங்களுள் இந்நிலையம் பெரியதொரு நிலையமாகத் திகழ்கிறது.
சிங்கப்பூரில் பள்ளிக்கல்வியில் மாணவர்கள் அனைவரும் முதலாவதாக ஆங்கில மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும். இரண்டாவதாக சீனம், மலாய், தமிழ் ஆகிய தாய்மொழிகளில் ஒன்றைக் கட்டாயம் கற்க வேண்டும். மேல்நிலை முடிகின்ற வரை அந்நிலை உள்ளது. தமிழ் மாணவர்கள் 100க்கு 10 பங்கினர், சீன மொழி கற்கவும் 100க்கு 1 பங்கினர் மலாய் மொழி கற்கவும் செல்கின்றனர். சிங்கப்பூரில் 100க்கு 75 பங்கு மக்கள் சீனர்களே. தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் சிங்கப்பூரில் 700 இருப்பதாகவும் தமிழ் மாணவர்கள் தொடக்கப்பள்ளிகளில் 15,000 உயர்நிலைப் பள்ளிகளில் 7,500, புகுமுக வகுப்புகளில் 300 முதல் 400 வரையில் படிப்பதாகவும் தெரிகிறது என்று தி.முருகரத்தனம் கூறுகிறார்.
ஆனால் சிங்கப்பூரில் தமிழில் உயர் கல்வி இல்லை. தமிழில் பட்டம் பெறுவோர் தோன்றுதல் இல்லையாகிவிட்டது.
தமிழ்மொழி ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும் கல்விக் கழகத்தில்கூட மற்றப்பிரிவுகளில் பணியாற்றுவோரிடம் எதிர்பார்க்கப்படும் கல்வித் தகுதி இல்லாதவர்களே தமிழ் மொழி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிங்கப்பூரில் தமிழர் - Tamils in Singapore - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், இரண்டாம், சிங்கப்பூரில், மொழி, தமிழர், மாணவர்கள், உயர்நிலைப், பள்ளிகளில், பின்னர், ஆங்கில, தமிழ்மொழி, கல்வி, வேண்டும், வாழும், நாடுகள், 100க்கு, தமிழை, எண்ணிக்கை, பயிலும், சுமார், உமறுப்புலவர், தமிழ்நாட்டுத், கற்க, தகவல்கள், நிலையங்கள், சிங்கப்பூர், | , இயங்கி, கட்டாயம், தோற்றுவிக்கப்பட்டன, தமிழில், கற்கவும், பள்ளி, செயின்ட், இந்நிலையம், எழுதினர், மலாய், தேர்வு, நிலையம், பங்கினர், கேம்பிரிட்ஜ், ஆங்கிலப், countries, tamilnadu, information, living, persons, tamils, singapore, tamil, தொடங்கியது, உலகப், மொழியாகப், மாணவர்களின், மொழியாகக், மொழியை, தாய், என்றே, படிப்படியாக, கல்விக், மேலும்