அந்தமானில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தமிழரின் இன்றைய நிலை
சமயம் :
ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் செல்வாக்கே எங்கும் இருந்தது. அவர்களின் தலைமையிடமாக 'ராஸ்' என்ற சின்னஞ் சிறியத் தீவு விளங்கியது. இங்குதான் கிருஸ்த்துவ தேவாலயம் இருந்தது. அது தவிர்த்து அனுமதிக்கப்பட்ட ஒரே கோவில் தமிழர்கள் கட்டிய முருகன் கோயில்தான்!
தலைநகர் போர்ட் பிளையரின் வெற்றிமலை முருகன் கோயிலை இங்குள்ள மக்கள் அந்தமானின் திருப்பதி என்கிறார்கள். இதே போல போற்றப்படும் மற்றொரு கோயில் அலைகடல் அய்யனார் கோயிலாகும். தீவெங்கும் முருகன், வினாயகர், மாரியம்மன்
ஆலயங்களைக் கட்டி, அவை தொடர்பான விழாக்களை நடத்தி, தமிழர் பண்பாட்டினைக் காப்பாற்றுகின்றனர். காதணிவிழா, திருமணம் போன்றவை இக்கோயில்களில் நடப்பதுண்டு. இங்கு விழாக்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தாம் நடத்தப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம் முதலியவை முக்கிய விழாக்களாகும்.
உணவு :
வங்காளிகள் அதிகம் என்பதால் இனிப்பு வகைகள் சந்தைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தமிழர்களின் மரபான இட்லி, தோசை, வடைக்கும் மக்களிடம் பேராதரவு உண்டு.
உடை :
பேண்ட்-சட்டைகளையே எல்லோரும் அணிகின்றனர். இதுவே தேசிய உடையாகக் காணப்படுகிறது. பெண்கள் சேலை, ஜாக்கெட், பாவாடைகள் அணிகின்றனர்.
பிறபழக்கவழக்கங்கள் :
பெண்கள் தலையில் பூச்சூடுவதும், நெற்றியில் திருநீறும், குங்குமமும் இடுவதிலிருந்தும் தமிழர் என்பதை இனம் காணலாம். நாள்தோறும் சாணிதெளித்து கோலமிடும் வழக்கத்தைத் தமிழர் இங்கு விட்டுவிட்டனர்.
ஊர் பெயர் :
தமிழர்கள் வாழும் ஊர்களுக்கு வள்ளுவர்நகர், இராமச்சந்திரபுரம், புதுமதுரை எனப்பெயரிட்டுள்ளனர்.
தகவல்தொடர்பு சாதனங்கள் :
'அந்தமான் முரசு' என்கிற இதழ் 18 ஆண்டுகளாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் சுப. சுப்பிரமணியன் ஆவார். இன்று வேறு எட்டு கிழமை இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றுள் சில கட்சி இதழ்கள் என்றாலும் பிறமொழிகளில் இந்தளவு இதழ்கள் ஏதும் வெளி வரவில்லை. வேறு மொழியினர் கணிசமான அளவு வாழ்ந்தாலும் யாரும் தமது தாய்மொழியில் இதழ்கள் வெளியிடமுன் வருவதில்லை. அதே நேரத்தில் தமிழில் மட்டும் இத்தனை இதழ்கள் எப்படி வெளி வருகின்றன என மற்றவர்கள் வியப்படைகிறார்கள்.
அந்தமானிலுள்ள 12 அச்சகங்களில் பத்து அச்சகங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மொழி தமிழ் மட்டுமே. இங்கே பத்திரிக்கைகள் 10 நாளைக்கொருமுறை கப்பல் மூலமும் வாரத்தில் மூன்று நாள் விமானத்தின் மூலமும் வருகின்றன. தமிழகத்திலிருந்து வெளிவரும்
இதழ்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.
திரைப்படங்கள் :
தமிழகத்திலிருந்து வரும் திரைப்படங்கள் தீவில் உள்ள 4 திரை அரங்குகளிலும் திரையிடப்படுகின்றன. இங்கு ரசிகர் மன்றங்களும் உண்டு.
தமிழ் மொழியின் நிலை
அந்தமானில் - வங்காளியர், பஞ்சாபியர், தமிழர், மலையாளிகள், தெலுங்கர் போன்ற பல மொழிபேசும் மக்கள் இருந்தாலும் 'இந்தி'யே ஆட்சிமொழியாக இருக்கிறது. அந்தமான் தமிழர்பற்றி இதுவரை முழுமையான நூல் ஒன்று கூட வெளிவரவில்லை.
கல்வி :
தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் 'தமிழ்க்கல்வி' தருவதில் மத்திய அரசு தயக்கமே காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வி கொடுக்காமல் இந்திபேசும் இந்தியர்களாக ஆக்கிவிட வேண்டும் என்பதே அப்போதைய நிலை.
தமிழ்க் கல்விப் பிரச்சினைப் பற்றி அந்தமான் தலைமைக் கமிஷனராக அப்போதிருந்த ஹர்மந்தர்சிங் சொல்கிறார் :
"இந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளே உயர்நிலைப் பள்ளியில் போதனா மொழிகளாக இருந்தன. வங்காளிகள் நெருக்குதல் கொடுத்தார்கள்.
பிறகு அதுவும் போதனா மொழியாக்கப்பட்டது. இப்போது தமிழ்மொழி மீடியம் வேண்டும் என்று நெருக்குதல் தர ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஓர் இருவழிப்பிரச்சினை. இந்தப் பிரச்சினையைக் கிளப்புவோர் உள்ளூர்த் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்திமொழியைச் சிரமமின்றி ஏற்றுக் கொண்டவர்கள். இந்திப்படிப்பவர்கள். மெயின்லாண்டுக்குப் போக வர இருப்பவர்கள்தான் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்" என்று மொழிந்திருப்பதிலிருந்து அன்றையப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.
அந்தமான்-நிக்கோபார் கல்வித் துறையின் மதிப்பீட்டின்படி ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் மும்மொழித் திட்ட ரீதியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி
பயின்று வருகிறார்கள். இங்கே மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை முடித்த பலர் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக்கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ அந்தமானில் இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்தமானில் தமிழர் - Tamils in Andaman - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், அந்தமானில், இதழ்கள், வாழும், அந்தமான், தமிழர்கள், நாடுகள், இங்கு, தகவல்கள், தமிழ்நாட்டுத், முருகன், நிலை, தமிழகத்திலிருந்து, தமிழ், வருகின்றன, அச்சகங்களில், இங்கே, மூலமும், இருந்தாலும், நெருக்குதல், பிரச்சினையைக், | , போதனா, தமிழ்க், தமிழில், கல்வி, வேண்டும், திரைப்படங்கள், உண்டு, living, countries, persons, tamil, tamils, andaman, tamilnadu, information, பெண்கள், வேறு, அணிகின்றனர், வங்காளிகள், மக்கள், முக்கிய, வெளி