சோழர் வரலாறு - சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
இங்ஙணம் நடைபெற்று வந்த வாணிகத்திற் கீழ்க்கரை ஒரமாக நடந்த பகுதியில் பெரும் பங்கு கொண்டவர் சோழரே யாவர். சோழ நாட்டுத் துறைமுகங்களில் கடலோரமே செல்லத்தக்க கப்பல்கள் பல இருந்தன. ‘சங்கரா’ என்னும் பெயர் கொண்ட பெரிய கப்பல்களும் இருந்தன. கங்கை முதலிய இடங்களுக்குச் சென்ற கப்பல்கள் ‘சோழந்தி’ எனப் பெயர் பெற்றன.[50]இக்குறிப்பால் சோழரிடம் கடலோரமே செல்லத்தக்க சிறிய கப்பல்களும், பெரிய கப்பல்களும் கடல் கடந்து செல்லத்தக்க பெரிய கப்பல்களும் இருந்தன என்பது நன்கு விளங்குகிறதன்றோ? இக்கப்பல்கள் இருந்தமை பட்டினப்பாலையாலும் மணிமேகலையாலும் (இலக்கிய வகையாலும்) நாம் நன்குணரலாம்.[51] இங்ஙணம் பெருத்த கடல் வாணிகம் கிழக்கிலும் தெற்கிலும் செய்து வந்த தமிழ் மக்கள் இந்து - சீனம், சுமத்ரா, ஜாவா முதலிய இடங்களில் வாணிகத்தின் பொருட்டுக் குடியேறியிருந்தனர் என்பதில் ஐயமுண்டோ? இதைத்தான் அறிஞர் ஆதரித்து விளங்க வரைந்துள்ளார்.[52]
பண்டங்கள் சில: பூம்புகாரில் விற்பனைக்கு இருந்த பொருட்களுட் சில அடியார்க்கு நல்லாரால் ஊர்காண் காதை உரையிற் குறிக்கப் பெற்றன. அவை அறிதலால் அக்கால வாணிகச்சிறப்பையும் அவ்வாணிகம் செய்த தமிழ் மக்களது ஒப்புயர்வற்ற நாகரிகத்தையும் நன்குணரலாம்.
“அருமணவன், தக்கோலி, கிடராவன், காரகில் எனப்பட்ட அகிலின் தொகுதியும்; கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, துரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு[53], பொன் எழுத்து, குச்சரி, தேவகிரி, காத்துலம். இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி எனப்பட்ட துகிலின் தொகுதியும்; மலையாரம், தீ முரண் பச்சை, கிழான் பச்சை, பச்சை வெட்டை, அரிசந்தனம், வேர், சுக்கொடி எனப்பட்ட ஆரத் தொகுதியும்: அம்பரேச்சம், கத்துரி, சவ்வாது, சாந்து குங்குமம், பனிநீர், புழகு, தக்கோலம், நாகப்பூ இலவங்கம், சாதிக்காய், வசுவாசி, நீரியாசம், தைலம் எனப்பட்ட வாசனைத் தொகுதியும்; மலைச்சரக்கு, கலை, அடைவு சரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, Gotfr tffrar rrgåT, குமடெறிவான், உருக்குருக்கு, வாறோக சூடன், சீனச்சூடன் எனப்பட்ட கற்பூரத் தொகுதியும் முதலாயின.”[54]
கைத் தொழில்கள்: சோழநாட்டில் பட்டாடை, பருத்தியாடை முதலிய நெய்யப்பட்டன; நூல் நூற்றல், பெண்கள் தொழிலாக இருந்தது. பாம்பின் பட்டை போன்ற பலவகை மெல்லிய ஆடைகள், பலநிற ஆடைகள் என்பன அழகுற நெய்யப்பட்டன. இக் கைத் தொழில் உறையூரில் சிறப்பாக நடந்ததென்று பெரிப்ளுஸ் கூறுதல் காண்க. கண்ணாலும் காண்டற்கரிய நுண்ணிய இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைகளும் உண்டென்று பொருநர் ஆற்றுப்படை அறைகின்றது. ஆடையின் உயரிய தன்மையை மணிமேகலையும் வியந்து கூறலைக் காணலாம். உயரிய ஆடைகள் வெளிநாடுகட்குச் சென்றமை நோக்க, நாட்டில் பெரும் பகுதியோர் நெய்தற்றொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்னல் மிகையாகாது. நகரச் சிறப்புக் கூறியவிடத்துப் பலவகைத் தொழிலாளரும் குறிப்பிடப் பெற்றனராதலின், அவர் செய்து வந்த பலவகைத் தொழில்களும் இந்நாட்டில் நடைபெற்றன என்பதை நன்கு உணரலாம். உள்நாட்டு வாணிகம் பெரிதும் பண்டமாற்றாகவே இருந்ததென்னலாம். நெல்லே பெரும்பாலும் நாணயமாக இருந்தது. நெல்லைத் தவிர, அவரவர்க்குத் தேவையான பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருள்களைப் பெறும் பழக்கமும் இருந்து வந்தது. பிற்காலச் சோழ அரசியலிலும் நெல்லே சிறந்த பண்ட மாற்று வேலையைச் செய்து வந்தது. நாணயங்கள் இரண்டாம் படியினவாகவே கருதப்பட்டன.
சமய நிலை: சோழநாடு தொன்று தொட்டுச் சைவ நாடாகவே இருந்து வந்தது. அதற்கு அடுத்தபடியாக வைணவம் இருந்து வந்தது. பிற்காலக் களப்பிரர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் சிற்றரசாக இருந்த சோழரும் பல்லவரைப் போலவோ, பாண்டியரைப் போலவோ, சமயம் மாறினர் என்று கூற இதுகாறும் சான்று கிடைத்திலது. சிவன், முருகன் கோவில்கள், திருமால் கோவில் ஆகியன இருந்தன. இந்த நாட்டிற்கு புதியனவாகப் புகுந்த வடநாட்டுக் கொள்கைகள் பரவிய பிற்காலத்தில், இந்திரன், பலதேவன் முதலியோர்க்கும் அருகன், புத்தன் முதலிய தேவர்க்கும் கோவில்கள் தோன்றின. புகாரில் பல சமயங்கள் இருந்தன. பல சமயப் புலவர் இருந்தனர். ஆனால் அச்சமயங்கள் போரிட்டில; புலவர் போரிட்டிலர். எல்லாச் சமயத்தவரும் தத்தமது சமயக் கோட்பாடுகட்கேற்ற நேரிய வாழ்வை நடத்தி வந்தனர்.
கலப்புச் சமயம்: தொகை நூல்களில் பழைய பாக்கள் உண்டு. அவற்றில் பழந்தமிழர் தெய்வங்களே பேசப்பட்டி ருக்கும் திணைக்குரிய தெய்வங்களே பேசப்பட்டிருக்கும். பிற்காலப் பாக்களில் வடவர் வருகையால் ருத்ர வழிபாடு ஏற்பட்ட காலத்தில் பல கதைகள் புகுந்தன. அக்கதைகள் அனைத்தும் பிற்காலப் பாக்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. சிவன் முப்புரம் எரித்தமை, சகரர் கடலைத் தோண்டியது; இராமாயணக் கதைகள், மகாபாரதக் கதைகள் இன்னோரன்ன பிற வடநாட்டுக் கதைகள், சிலப்பதிகாரம். மணிமேகலை என்னும் கடைச்சங்கத்து இறுதிக்கால நூல்களில் பாகவத புராணச் செய்திகள், விசுவாமித்திரன் நாய் இறைச்சியை உண்டது. அகல்யை வரலாறு. வாமன அவதாரக் கதை இன்ன பிறவும் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன.
- ↑ 50. Periplus, Sec. 60 and Schoff’s, notes.
- ↑ 51. பட்டினப்பாலை, வரி 29-32; மணிமேகலை, காதை வரி 29-34.
- ↑ 52. ‘Periplus’, p. 261.
- ↑ 53. இவ்வகைத் துகிலைத் தயாரித்தவர் தேவாங்கர் எனப்பட்டனர் போலும்!
- ↑ 54. N.M.V. Nattar’s ‘Cholas’.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும் - History of Chola - சோழர் வரலாறு - எனப்பட்ட, இருந்தன, தொகுதியும், முதலிய, கப்பல்களும், கதைகள், வந்தது, இருந்து, ஆடைகள், செய்து, செல்லத்தக்க, பெரிய, வந்த, பச்சை