சோழர் வரலாறு - சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
இன்றைய புகார்[42]: மாயூரத்திலிருந்து காவிரிப்பூம் பட்டினம் போகும் பாதையில் 20 கி.மீ. அளவில் கைகாட்டி மரம் ஒன்று இருக்கின்றது.அதிலிருந்து கடற்கரைவரை ஒரே சாலை 5 கிமீ தொலைவிற் போகின்றது. அதன் இருபுறமும் வீடுகள் இருக்கின்றன. அங்கிருப்பவர் பழங்குடி மக்கள். இரண்டு அக்கிரகாரங்கள் இருக்கின்றன. அங்கு மறையவர் இருக்கின்றனர். சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதைகள் மேடு பள்ளங்கள் உடையன. சாலைக்கு இடப்புறமே சிறு குடியிருப்புகள் மிகுதியாக இருக்கின்றன. சாலைக்கு இருபுறத்திலும் பழைய உறை கிணறுகள் காணக் கிடக்கின்றன. ‘இங்கு நாங்கள் கிணறுகள் தோண்டுவதில்லை. இவையெல்லாம் பழைய காலத்துக்கிணறுகள்’ என்று அங்குள்ளவர் கூறுகின்றனர். நெடுந்தெருவிற்கு இடப்புறம் சிறிது தொலைவில் பெருந்திடல்கள் இருக்கின்றன; ‘இவை அக்கிரகாரம் இருந்த இடம்; வேளாளர் தெரு இருந்த இடம் என்று எங்கள் பாட்டனார் சொல்லக்கேட்டோம்’ என்று 80 வயதுடைய கிழவர் ஒருவர் சொன்னார். அந்தத் திடல்களைச் சுற்றிலும் வயல்கள் இருக்கின்றன. திடல்கள் மட்டும் தோண்டப்பட்டில. எங்குத் தோண்டினும் பழைய செங்கற்கள், மட்பாண்டச்சிதைவுகள் காணக் கிடக்கின்றன. அவற்றுள் சில, புதுவையை அடுத்துள்ள அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்டச் சிதைவுகளை ஒத்துள்ளன. ஓரிடத்தில் பழைய செங்கற்கள் 3 மீ ஆழத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றை அளந்தேன்; நீளம் 23 செமீ அகலம் 15 செ.மீ. கனம் 4 செ.மீ. அதற்கும் புதிய கற்களுக்கும் வேறுபாடு நன்கு தெரிகிறது.
கோவில்கள்: இவ்வைந்து கி.மீ. நீளமுள்ள பாதை நெடுகப் பல சிறிய பழைய கோவில்கள் இருக்கின்றன. இவை பலவகைப்பட்டவை (1) கீற்றுக் கூரையும் சுவர்களும் உடைய கோவில்கள் (2) மண் சுவர்களும் கீற்றுக் கூரையும் உடைய கோவில்கள் (3) செங்கற் சுவர்களும் ஒட்டுக் கூரையும் கொண்ட கோவில்கள், ஒரே அறை, அதைச் சுற்றிலும் நாற்புறமும் அகன்ற திண்ணை; அறையுள்ளே சுதையால் இயன்ற சிலைகள் சுவர்கள் மீது கடவுளர் ஒவியங்கள், சில உள்ளறைகளில் கற்சிலைகள் இருக்கின்றன. கூரை மீது கலசம் கொண்ட கோவில்கள் பல. சில இடங்களில் மூன்று கலசங்கள் இருக்கின்றன. இத்தகைய பழைய கோவில்கள் பிற இடங்களில் காண்டல் அருமை.
ஏறக்குறைய இவற்றைப் போலவே பழைய சங்ககாலக் கோவில்கள் பல இருந்திருக்கலாம் என்றெண்ணுதல் தவறாகாது. சில கோவில்களில் சிலை இல்லை; சுவர் மீது கடவுள் உருவம் திட்டப்பட்டுள்ளது. அதற்கு வழிபாடு நடந்து வருகிறது. இங்ஙனமே தாண்களிலும் கடவுளர் உருவங்கள் காண்கின்றன. இவற்றை நோக்கிய பொழுது எனக்குக் கந்திற்பாவை நினைவிற்கு வந்தது.
காவிரிக்கு வலப்புறம்: காவிரிக்கு அப்பால் மேடான இடம் பரந்து கிடக்கிறது. அதுவே பழைய பூம்புகார் நகரத்தின் சிறந்த பகுதி என்று அங்குள்ளார் கூறுகின்றனர். அம்மேட்டின் மீது பரதவர் குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். அவ்வழி வந்த அம்மை ஒருத்தியைக் கண்டு அங்குத் தோண்டிப் பார்த்தீர்களா?' என்று கேட்டேன். அவ்வம்மை, ‘அங்கு அகழ்ந்தது இல்லை’ என்று விடையிறுத்தாள். நான் திடுக்கிட்டேன். ஏன்?
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” |
என்ற குறள் நினைவிற்கு வந்தது.இக்காலத்தில் பண்டிதரும் பயன்படுத்தாத அகழ்தல் என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கல்வி அறிவற்ற ஓர் அம்மை எளிமையாக உச்சரித்தாள் என்பது வியப்பே அன்றோ? பூம்புகார் அழிந்தாலும் பூம்புகார்க் காலத்துத் தமிழ்ச் சொல் அழியவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன். சங்க முகத்துறையில் தமிழ் உணர்ச்சியுடையார் நிற்பின், சங்ககால நினைவு எழும் என்பதிலோ - மாதவி பாடிய கானல் வரிப்பாடல் நினைவு எழும் என்பதிலோ ஐயம் இல்லை; இல்லை!!
சாய்க்காடு: இது பாடல்பெற்ற சிவனார் கோவிலாகும். இது பெரு வழியில் ஏறக்குறைய ஒன்றரைக் கல் தொலைவில் உள்ளது. கோவிலுக்கு எதிரே பெரிய குளம் இருக்கிறது. அதைச் சுற்றி நீண்ட கூடம் கூரையுடைய தாய்ச் செல்கிறது. கோவிலுக்குக் கோபுரம் இல்லை. சுற்றுச் சுவர் பழுதுபட்டிருக்கிறது. கோவில் மாடக் கோவில் ஆகும். சிவனார்க்கு நேர் எதிரே உள்ள சிறு வாசல் யானை புக முடியாதது. அம்மனுக்கு எதிரே உள்ள வாசலே பொது வாசலாகும். அந்த வாசல் கல்தேர் உருளைகளுடனும் கற்குதிரைகளுடனும் காட்சி அளிக்கின்றன. தேருக்கு இரண்டு பக்கம் வாயிற் படிகள் இருக்கின்றன. அப்படிகள் மீது ஏறியே கோவிலுக்குள் செல்ல வேண்டும். பிராகார மட்டத்திற்கு உட்கோவில் மட்டம் ஆறடி உயரமானது. இவ்வழகிய கோவில் ‘சிலந்திச் சோழன்’ கட்டியதென்று அர்ச்சகர் அருளிச் செய்தார். கோவிலைச் சுற்றி முள் நிறைந்திருக்கின்றது. கோவில் நன்னிலையில் இராததற்கு தமிழ் மக்கள் - சிறப்பாகச் சைவ நன்மக்கள் கவனிப்பின்மையே காரணம் எனலாம். ‘சிவனடியார் பலர் புகழ்ந்து பாடிய சாய்க்காடு - பாடலும் ஆடலும் அறாத சாய்க்காடு என்று கி.பி. 650-இல் வாழ்ந்த திருஞான சம்பந்தர் பதிகம் பெற்ற இக்கோவில் பழைமை வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. இஃது சிலந்திச் சோழன் கட்டியதெனின், இதன் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு எனக்கூறல் தவறாகாது. பூம்புகாரின் ஒரு பகுதி கடல் கொண்ட பின், எஞ்சிய பகுதிக்கும் சாய்க்காட்டிற்கும் இடையே காடு வளர்ந்து விட்டது என்பதை இயற்பகை நாயனார் வரலாற்றால் இனிதுணரலாம்.
- ↑ 42. இப்பண்டைநகரம் இருந்த இடத்தையான் 12.3.43சென்று பார்வையிட்டேன்.இதற்கு உதவிபுரிந்தவர் திருவெண்காட்டுத் திருக்கோவில் பொறுப்பாளர் திருவாளர் பாலசுப்பிரமணிய முதலியார், கணக்கப் பிள்ளை சிதம்பரநாத முதலியார், புவனகிரி சிதம்பரநாத முதலியார் என்னும் பெருமக்களாவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும் - History of Chola - சோழர் வரலாறு - இருக்கின்றன, கோவில்கள், பழைய, மீது, இல்லை, கோவில், எதிரே, சாய்க்காடு, சுவர்களும், இடம், கூரையும், கொண்ட