சோழர் வரலாறு - சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
பலவகைக் கூத்துகள்: வேதியல், பொதுவியல் என்னும் இருதிறமுடைய அகக்கூத்து, புறக்கூத்துகளும், குரவை, களிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு தோற்பாவை என்னும் வினோதக் கூத்துகளும்; அம்மானை, பந்து, கழங்காடல், உந்தி, சாழல், பல்லாங்குழி, அவலிடி, கொற்றி, பிச்சிவாரிச்சி, சிந்துப் பிழுக்கை, குடப் பிழுக்கை, பாண்டிப்பிழுக்கை, பாம்பாட்டி, ஆலங்காட்டாண்டி[31] முதலிய பலவகை வரிக்கூத்துகளும் பிறவும் சங்க நாளில் நடிக்கப்பெற்று வந்தன.[32]
நகர வாழ்க்கை: புகார் போன்ற பெரிய நகரங்களில் செங்கல், சுண்ணாம்பால் ஆகிய மாடமாளிகைகள் மிக்கு இருந்தன. அவற்றின் சுவர்கள் மீது தெய்வங்கள், விலங்குகள் இவற்றைக் குறிக்கும் வியத்தகு ஒவியங்கள் தீட்டப் பெற்று இருந்தன.[33] பல மாளிகைகள் அழகிய பூஞ்சோலைகள் சூழப்பெற்றிருந்தன. அச்சோலைகளில் ஆழமற்ற கிணறு அல்லது குளம், பளிங்கு அறை அல்லது அழகிய அறை, செய்குன்று இன்ன பிறவும் இன்ப விளையாட்டுகளுக்காக அமைக்கப்பட்டிருந்தன.[34]
மணமுறை: சங்க நூல்களில் இருவகை மணமுறைகள் கூறப்பட்டுள; ஒன்று பழந்தமிழர் மணமுறை; பின்னது சிலப்பதிகார காலத்தது. முன்னதில் (1) இசைக்கருவிகள் ஒலிப்பு (2) கடவுள் வணக்கம் (3) மணப் பெண்ணைப் பிள்ளை பெற்ற பெண்டிர் நால்வர் கூடி அரிசியும் மலரும் கலந்த நீரால் ‘பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுக’ என வாழ்த்தி நீராட்டல், (4) அன்றிரவே மணமக்களை இல்லறப்படுத்தல், (5) மனவிருந்து ஆகிய இவையே சிறப்பிடம் பெற்றுள்ளன.[35] “இம்மணமுறையில், (1) எரிவளர்த்தல் இல்லை (2) தீ வலம் வருதல் இல்லை; (3) தக்ஷிணை பெறப் புரோகிதன் இல்லை. இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்” என்று திரு.பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் கூறியுள்ளது கவனித்தற்குரியது.[36]
சிலப்பதிகாரம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. அந்நூலில் கோவலன், கண்ணகி மணம் முதற்காதையுள் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் பெண்கள் யானை மீது சென்று மாநகரத்தார்க்கு அறிவித்தலே புதுமையானது.[37] அத்திருமணத்தில் (1) மாமுது பார்ப்பான் மறை வழி காட்டல் (2) தீ வலம் செய்தல், (3) பாலிகையின் தோற்றம் என்பன புதியவை. அம்மறையவன் ‘சமணப் பெரியோன்’ என்பர் ஆராய்ச்சியாளர். ‘கோவலனும் கண்ணகியும் சமணர் ஆதலின், வேத முறைப்படி மணந்திரார்-சமண முறைப்படியே மணந்தனராவர்’ என்பர் அவ்வறிஞர். மணம் முடிந்த பிறகு மன மக்கள் வாழ்த்தப் பெற்றனர். பின்னர் அனைவரும் சோழ வேந்தனை வாழ்த்தி மண நிகழ்ச்சியை முடித்தனர்’ என்பது சிலப்பதிகாரத்துள் கூறப்பட்டுள்ளது.
பூம்புகார்: இந்த நகர வருணனை சிலப்பதிகாரம் ஐந்தாம் காதையுள் தெளிவுற விளக்கப்பட்டுள்ளது. நகரம் காவிரியாற்றின் வடகரையில் அமைக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரண்டு பிரிவுகளை உடையது. இரண்டிற்கும் இடையில் திறந்த வெளி உண்டு. அங்கு மரத்தடிகளில் கடைகள் இருந்தன. மருவூர்ப் பாக்கத்தில் கடற்கரையை அடுத்து உயர்ந்த மாடமாளிகைகள் இருந்தன. செல்வாக்கு நிறைந்த யவனர் மாளிகைகள் இருந்தன; வாணிகத்தின் பொருட்டு வந்திருந்த பல மொழி மக்கள் தம்முள் வேற்றுமையின்றி நெருங்கி வாழ்ந்து வந்தனர். பலவகை மணப்பொருள்கள், பட்டாடை, பருத்தியாடை , கம்பள ஆடை முதலியன, பலவகைப் பூமாலைகள், இவற்றைச் செய்யும் மக்கள், கூலவாணிகர், மீன்வாணிகர் உள்ளிட்ட பலவகை வணிகர்; பொற்கொல்லர், கன்னார், கருமான், தச்சன் முதலியோர், ஒவியம் திட்டுவோர், கற்றச்சர், மாலுமிகள் முதலிய பலதிறப்பட்டவரும் மருவூர்ப்பாக்கத்தில் உறைந்தனர். பட்டினப்பாக்கத்தில் அரசன் மாளிகை உடைய அகன்ற அரசர் தெருவும் தேரோடும் தெருவும் அங்காடித் தெருவும் இருந்தன. செல்வத்திற் சிறந்த வணிகர், நிலக்கிழவர், மறையவர், மருத்துவர், சோதிடர் முதலியோர் வாழ்ந்தனர். அரண்மனையைச் சுற்றிக் கரிவிரர், பரிவீரர், சேனைத் தலைவர் முதலியோர் உறையும் தெருக்கள் இருந்தன. புலவர், பாணர், இசைவாணர், மாலை தொடுப்பதில் வல்லார், முத்து வேலை செய்வோர், நாழிகை கூறுவோர், அரண்மனை அலுவலாளர் முதலிய பல திறத்தவரும் பட்டினப் பாக்கத்தில் உறைந்தனர்.
புகார் சிறந்த துறைமுகத்தைப் பெற்றிருந்தது. அரசரது பெருஞ் செல்வ நகரம், மாலுமிகள் நிறைந்த நகரம், கடல் சூழ்ந்த உலகமே வறுமை உறினும் தான் மட்டும் வறுமை உறாதது; வெளிநாட்டுப் பொருள்களும் உள்நாட்டுப் பொருள்களும் வண்டிகளில் போதலையும் வருதலையுங் கான, பல நாட்டுப் பண்டங்களையும் சாலையாகப் புகார் நகரம் காட்சி அளித்தது. அக்கோ நகரத்தின் செழுமை இமயம் அல்லது பொதியம் போன்ற உறுதிப்பாடு உடையதாகும்.[38] இந்நகர வருணனை பட்டினப்பாலையிற் காண்க. பெரிய கப்பல்கள் புகார்த்துறைமுகத்தை அடைந்து பண்டங்களை இறக்கும்.[39] நகரக் கடைவீதியில் உயர்ந்த மாடமாளிகைகள் உண்டு. அவற்றைச் சுற்றிலும் நாற்புறங்களிலும் மேடைகள் உண்டு. அவற்றை அடையப் படிக்கட்டுகள் உண்டு. அம்மாளிகையில் பல அறைகள் சிறியவும் பெரியவுமாக இருக்கும். அவற்றுக்கெல்லாம் கதவுகள் உண்டு. சுவர்களில் சாளரங்கள் உண்டு. மேல் மாடங்களிலிருந்து செல்வ மகளிர் கரங்களைக் குவித்து முருகனை வணங்கும் காட்சி-உயர்ந்த மலைப் பாங்கரில் செங்காந்தள் மலர்க்கொத்துகள் இருத்தலைப் போல இருக்கும். முருகக் கடவுள் ஊர்வலம் வரும்பொழுது இசையும் நடனமும் இடம் பெறும் பலவகைக் கருவிகளின் ஒசையும் தெருக்களில் ஒன்றுபடும்; ஆடலும் பாடலும் நடைபெறும்.[40]
நகரத்தின் பல பகுதிகளிலும் பலவகைக் கொடிகள் காட்சி அளிக்கும். சில கொடிகள் வழிபாடு பெறத்தக்கவை. சில வெள்ளைக் கொடிகளுக்கு அடியில் உயர்தரப் பொருள் கொண்ட பெட்டிகட்கு வழிபாடு நடைபெறும். பல கலைகளில் வல்லார் கொடி நட்டுப்பிறரை வாதுக்கழைப்பர். துறைமுகத்தில் கப்பல் மீதுள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடும் தோற்றம் அழகியதாக இருக்கும். வேறு பல கடைகளில் அவற்றின் தன்மையை உணர்த்தத்தக்க கொடிகள் கட்டப்பட்டு இருக்கும்.[41]
- ↑ 31. திருவாலங்காட்டில் சிவபிரான் ஆடிய நடனத்தின் பெயர்போலும் !
- ↑ 32. N.M.V. Nattar’s ‘Cholas’, pp 104-105.
- ↑ 33. மணிமேகலை : காதை 3.
- ↑ 34. மணிமேகலை : காதை 19
- ↑ 35. அகம், 86, 136.
- ↑ 36. Vide his “History of the Tamils” p.80.
- ↑ 37. இப்பழக்கம் இன்றும் பூவாளுர் - செட்டிமாரிடம் இருக்கிறது. அவர்கள் தம்மைக் ‘காவிரிப்பூம்பட்டினத்துச் செட்டிமார்’ என்று கூறுகின்றனர்.
- ↑ 38. சிலப்பதிகாரம், காதை I, வரி 14-19; காதை II, வரி 1-10
- ↑ 39. புறம், S. 30.
- ↑ 40. பட்டினப்பாலை, வரி 142-158.
- ↑ 41. பட்டினப்பாலை, வரி. 159-183.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும் - History of Chola - சோழர் வரலாறு - இருந்தன, உண்டு, நகரம், இருக்கும், கொடிகள், உயர்ந்த, தெருவும், காட்சி, முதலியோர், இல்லை, பலவகை, முதலிய, என்னும், புகார், மாடமாளிகைகள், பலவகைக், அல்லது, மக்கள்