சோழர் வரலாறு - சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
பெண்பாற் புலவர்: சங்ககாலப் புலவர் ஏறத்தாழ 700ஆவர். அவருட் பெண்பாலரும் இருந்தனர். அவருள் - ஒளவையார், ஆதிமந்தியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளி வீதியார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி,குறமகள் குறியெயினி, காவற்பெண்டு, கழாற்கீரன் எயிற்றியார், காமக்கணிப் பசலையார், நக்கண்ணையார், நன்னாகையார், பூங்கண் உத்திரையார், பொன்முடியார், மாறோகத்து நப்பசலையார், போந்தைப் பசலையார், அள்ளுர் நன்முல்லையார், பாரிமகளிர், பத்தினி (கண்ணகி), பூதப்பாண்டியன் மனைவி முதலியோர் குறிப்பிடத் தக்கவர், இவருள் காக்கை பாடினியார் யாப்பிலக்கணம் செய்தவர் எனின், அம்மம்ம! அக்காலப் பெண்புலவர் பெருமையை என்னென்பது!
பாடினியர் இசைத்தமிழை வளர்த்தனர், கூத்தியார் நாடகத் தமிழை வளர்த்தனர். இவர் அனைவர்க்கும் அாசன் பரிசில் வழங்கிச் சிறப்புச் செய்வது வழக்கம். புலவர் அனைவருடைய பாக்களும் தன்மை நவிற்சியே உடையவை; அஃதாவது, உள்ளதை உள்ளவாறு உரைப்பவை: உயர்வு நவிற்சி அற்றவை படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை. ஆதலின், அக்கால அரசர் புலவரைப் போற்றித் தம் தாய்மொழியையும் போற்றினர். கடியலூர் ருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை பாடியதற்காக 15 நூறாயிரம் பொன் பரிசில் பெற்றார் என்று சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியிற் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தைப் பாடிய புலவர் பலர் உயர்தரப் பரிசுகளும் ஊர்களும் பெற்றனர். இக்கூற்றுகளில் பாதியளவேனும் உண்மை இருத்தல் கூடும். இங்ஙனம் பண்டை அரசர், புலவரைப் போற்றினமையாற்றான் பல நூல்கள் வெளிவந்தன. நமது பேறின்மை காரணமாகப் பல இக்காலத்து இல்லா தொழிந்தன. பரிசில் பெற்ற புலவன் மற்றொரு புலவனைத் தன் வள்ளலிடத்தே ஆற்றுப்படுத்தும் முறை அழகியது. கூத்தன் வேறொரு கூத்தனைத் தன் புரவலன் பால் ஆற்றுப்படுத்தல், பொருநன் வேறொரு பொருநனைத் தன் அரசனிடம் ஆற்றுப்படுத்தல், பாணன் மற்றொரு பாணனை இங்ஙணம் ஆற்றுப் படுத்தல் முதலியன பத்துப்பாட்டு எனும் நூலில் கண்டு களிக்கலாம். அரசன் எல்லார்க்கும் பேருதவி புரிந்து வந்தமையின் புலவர்க்குள்ளும் பாணர்க்குள்ளும் ஒற்றுமை நிலவி இருந்தது. ஒரு புலவன் மற்றொரு புலவனை மனமாரப் புகழ்ந்து பாடியிருத்தலை அப்பாக்களில் காணலாம்.இங்ஙனம் அரசர்பால் தண்ணளியும் புலவர்பால் ஒற்றுமையும் இருந்தமையாற்றான், அக்காலத்தில் முத்தமிழும் செழித்தோங்கின. தமிழர் தருக்குடன் வாழ்ந்தனர். இந்தியாவின் பெரும் பகுதியைப் பிடித்தாண்ட பிந்து சாரனிடம் தமிழகம் அடிமைப்படாதிருந்தது!
இசையும் கூத்தும்: இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் விளக்கமாகக் காணலாம். அக்காதைக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய விளக்கவுரையே ஊன்றிப் படித்தற்குரியது. ஏறக்குறையக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டினரான அவர் கி.பி.2ஆம் நூற்றாண்டு நூலாகிய சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதினர். அவர் காலத்தில் பலவகைக் கூத்து நூல்களும் இசை நூல்களும் இருந்திராவிடில், அவர் உரை வரைந்திருத்தல் இயலாதன்றோ? அந்நூல்கள் இருந்தமைகொண்டே சங்க காலத்து இசை நாடக மேம்பாட்டை நாம் நன்று உணரலாமன்றோ? நாடக மகள் அரசர்க்குரிய நடன வகைகள், பொது மக்கட்குரிய நடன வகைகள், பாடல், தோற்கருவி.துளைக்கருவி.நரம்புக் கருவிகளைக் கொண்டு பாடல், ஒவியம் தீட்டல், பூ வேலை செய்தல் முதலிய பல கலைகளில் பல்லாண்டுகள் பழகித் தேர்ச்சியுறல் வேண்டும் என்று மணிமேகலை கூறுகின்றது.[30] பலவகை யாழ் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆடல் ஆசிரியன், இசை ஆசிரியன் முதலிய ஆசிரியன் மார் குறிக்கப்பட்டுள்ளனர். அரங்கேற்று காதையிற் குறிக்கப்பட்ட பல செய்திகள் இன்று அறியுமாறில்லை எனின், அக்கால இசைச் சிறப்பையும் நடனச் சிறப்பையும் என்னெனக் கூறி வியப்பது!
இசைக்கருவிகள்: அக்காலத்து இருந்த இசைக் கருவிகளாவன : அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாள்முழவு, காலை முழவு என ஏழுவகையாற் பகுக்கப்படும். பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப் பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதும்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுனிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலிய தோற் கருவிகளும், வங்கியம், குழல் என்னும் துளைக் கருவிகளும்; பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நரம்புக் கருவிகளும் பிறவும் ஆகும்.
இசை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையாலும் பிறக்கும் பண்விகற் பங்களும் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்றாகிய இசைகளும் தமிழ்ப் பாணர்களால் அறிந்து பாடப்பெற்று வந்தன.
- ↑ 30. மணிமேகலை : காதை 2, வரி 18-32.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும் - History of Chola - சோழர் வரலாறு - புலவர், ஆசிரியன், கருவிகளும், என்னும், முதலிய, வகைகள், பரிசில், மற்றொரு, அவர்