சோழர் வரலாறு - சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
வீரக்கல்: போரில் இறந்துபட்ட வீரர்க்குக் கல்நட்டு, பெயரும் பீடும் எழுதி, பீலிசூட்டிச் சிறப்புச் செய்தல் மரபு. இப்பழக்கத்தால் வீரர்க்கு உற்சாகமும் காண்போர்க்கு நாட்டுப் பற்றும் உண்டாதல் இயல்பு. இவ்வீரக் கற்கள் இருந்த இடங்கள் நாளடைவில் கோவில்களாக மாறிவிட்டன. வீரக்கல் நடுதல்பற்றித் தொல்காப்பியம் விரித்துக் கூறல் காணத்தக்கது. கல்லைக் காண்டல், தேர்ந்தெடுத்தல், நீராட்டல், உருவந்தீட்டல், நடுதல் விழாச் செய்தல் முதலிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. இதனை நன்கு விளக்கிய பெருமை சிலப்பதிகாரத்திற்கே உரியது. வஞ்சிக்காண்டத்தில் பத்தினிக்குக் கல் எடுத்துச் செங்குட்டுவன் செய்த பலவகைச் செயல்களை நோக்குக. இப்பழக்கம் இன்றும் ‘கல் நாட்டல்’ ‘கல் எடுத்தல்’ என்னும் முறைகளில் இல்லந்தோறும் நடைபெறல் காண்க. கல்லில் வீரனது அரிய செயல் குறிக்கப் பட்டிருக்கும்; இன்ன போரில் இறந்தான் என்பதும் செதுக்கப்பட்டிருக்கும். இத்தகைக் கற்கள் பல பிற்காலப் பல்லவர், சோழர் காலங்களில் எழுந்தன. அவை இப்பொழுது கிடைத்துள்ளன. இவ் வீரக்கல் வழிபாடு புறநானூறு,[22] புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றில் நன்கு விளக்கப்பட்டுள.
போர்: பழந்தமிழ் அரசர் பெரும்பாலும் தாமே போரில் கலந்து கொள்வர், போர் வீரர்க்குப் புறப்படுமுன் பெருஞ் சோறு வழங்குவர்; அவரவர்க்குரிய சிறப்புச் செய்வர், போர்க் களத்தில் வீரர்க்கு ஊக்க மூட்டுவர். அரசர் போரில் புண்பட்டு வீழ்வராயின், அவர் வீரர்கள் போரை நிறுத்திவிடுவர்.[23] தோற்ற அரசன் வடக்கிருத்தல் வழக்கம். வடக்கிருத்தலாவது - பட்டினி கிடந்து வடக்கிலிருந்து உயிர் நீத்தல். போரில் இறவாது, வேறுவகையில் இறந்த அரசனது உடலைக் குசைப்புல் மீது கிடத்தி, வாளாற் போழ்ந்து போரில் மடிந்ததாகக் கருதி எரித்துவிடல் மரபாம். இங்ஙனம் செய்யின், அவன் ஆவி வீரர் துறக்கம் எய்தும் என்பது அக்கால மக்கள் கருத்து.[24] தோற்ற அரசற்கு முடி அழித்துக் கடகம் செய்யப்படும்.[25] வாள், வேல், வில் என்பன போர்க்கருவிகள் ஆகும். போர் முரசம் ஒன்றுண்டு. போர் செய்யும் இரு திறத்தார்க்கும் போர் முறைக்கேற்ப அடையாள மலர்கள் உண்டு. மூவேந்தருள் இருவரை வென்ற ஒருவன் தன் மேம்பாடு விளங்கத் தோற்றவர் இலச்சினைகளைத் தன் இலச்சினையோடு சேர்த்து வழங்கினான். அவன் ‘மும்முடி வேந்தன்’ என வழங்கப்பட்டான். யானைகள் கொடிகளை ஏந்திச் செல்லும் வீரர்கள் தலையிற் பூச்சூடி மார்பில் மாலை சூடி இருப்பர். புறப்புண்படின், அவர் வீடு மீளார். வீரர் இறந்துகிடப்பின், அவ்விடத்தில் அவர் மனைவியர் வந்து ஆகந்தழுவி உவகைக் கண்ணிர் விட்டு உடன் இறப்பர்; சிலர் கைம்மை நோன்பு நோற்பர். புண்பட்டுத் திரும்பிய வீரர்க்குப் பெண்டிர் பெருஞ்சிறப்புச் செய்வர். வென்ற அரசன் தோற்ற அரசனது நாட்டைக் கொள்ளையடித்தலும் உண்டு; அந்த அரசன் செல்வத்தைக் கவர்ந்து வந்து புலவர், பாணர், வீரர், விறலியர், கூத்தர் முதலியோர்க்குக் கொடுத்து மகிழ்வன். இச்செய்திகள் அனைத்தையும் புறநானூற்றுப் பாக்களிற் கண்டு தெளியலாம்.
பெருநிலக் கிழவரும் அரசமரபினரும் கரிகள் மீது இவர்ந்து சென்றனர். தானைத் தலைவர்கள் தேர்களிற் சென்றனர்.
சில வேளைகளில் அரசர் போருக்கு முன் வஞ்சினம் கூறிச்செல்லல் மரபு. சோழன் நலங்கிள்ளி என்பான் போருக்குப் புறப்பட்ட பொழுது கூறியதாவது: “பகைவர் மெல்ல என்னிடம் வந்து ‘எமக்கு ஈயவேண்டும்’ என்று இரப்பாராயின், பழைமையாகிய எனது அரசாட்சி தருதல் எளிது; இனிய உயிரையும் கொடுப்பேன் அமைச்சர், படைத் தலைவர் முதலியோரது வலியுடைமை எண்ணாது என் உள்ளத்தை இகழ்ந்த அறிவற்றவன், யாவரும் அறியும்படி துயிலும் புலியை இடறின குருடன் போலப் பிழைத்தும் போதல் அரிதாகும். அப்பகைவனை யான் வெல்லாவிடின், பொதுப் பெண்டிரது பொருந்தாத சேர்க்கையில் எனது மாலை துவள்வதாகுக’![26] என்பது. இப்பாடலால், சோழன் நலங்கிள்ளியின் அறவுணர்ச்சியும் ஒழுக்க மேம்பாடும் வீரவுணர்ச்சியும் நன்கறியலாம் அன்றோ?
அரசன் பற்றிய விழாக்கள்: அரசன் பிறந்த நாள் விழா ஒவ்வோர் ஆண்டிலும் சிறப்பாகக் கொண்டாடப் பெறும். அப்பொழுது அரசர்கள் மங்கலவண்ணமாகிய வெள்ளணி அணிந்து, செருச்செய்தல், சிறைசெய்தல், கொலைசெய்தல் முதலிய செற்றச் செயல்கள் செய்யா தொழிந்து, சிறைவிடுதல், சிறை தவிர்தல், புலவர் முதலிய தக்கார்க்கு வேண்டுவன தருதல், இரவலர்க்கீதல் முதலிய அறச்செயல்கள் செய்வர். இது பெருமங்கலம் எனவும், வெள்ளணி எனவும் கூறப்படும்.இங்ஙனமே அரசன் முடிபுனைந்த நாள் தொடங்கி ஒவ்வோர் ஆண்டிலும் முடிசூட்டு நாளும் கொண்டாடப்பெறும். இது முடி புனைந்து நீராடுதலின், மண்ணுமங்கலம் எனப்பெயர் பெறும்.[27] இதன் விரிவு தொல்காப்பியத்துட் காணலாம்.
முத்தமிழ் வளர்ச்சி: போர் ஒழிந்த ஏனை நேரங்களில் எல்லாம் அரசன் புலவருடனே இருந்து காலத்தை இன்பமாகக் கழித்தல் மரபு. புலவர் அவனுடைய சிறந்த இயல்புகளைப் புகழ்வர் குற்றங்கண்ட இடத்துக் கடிவர். இதற்குக் கோவூர் கிழாரே சான்றாவர். போர் ஒரே மரபினருக்குள் நடப்பினும் புலவர் சந்து செய்ய முற்படுவர்; பெரும்பான்மை வெற்றி பெறுவர். அரசன் போரில் வெற்றி பெற்று மீளின், அவனது பெருஞ் சிறப்பைப் பாடுவர்; அவன் இறப்பின், புலவர் சிலர் உடன் இறப்பர். அரசனது நாளோலக்கம் சிறப்புடையது. அங்கே ஆடுமகளிர், பாடுமகளிர், பாணர், கூத்தர் முதலியோர் ஆடல்பாடல்களில் பங்கெடுத்துக் கொள்வர். இப்பாணரால் இசைத்தமிழ் வளர்ந்தது. கூத்தரால் நாடகத் தமிழ் வளர்ந்தது; புலவரால் இயற்றமிழ் வளர்ந்தது. இங்ஙனம் ஒவ்வொரு மரபினரும் (சோழர் உட்பட) முத்தமிழைப் போற்றி வளர்த்தனர். தன்னைக் காணவரும்புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்கு அரசன் அவரவர் தகுதிக்கேற்றவாறு பரிசில் வழங்குவன்; பெரிய புலவராயின், யானையும் நல்குவன். சிறந்த புலவரைப் பல மாதங்கள் இருந்து போகும்படி அரசனே வற்புறுத்து வான். அரண்மனையில் எப்பொழுதும் விருந்தும் இசையும் கூத்துமே குடிகொண்டிருக்கும்.அரசன் எல்லாரையும் உடன் வைத்து உண்ணுதல் வழக்கம். இரண்டாம் கரிகாற் சோழன் அரண்மனைச் செய்திகளைப் பொருநர் ஆற்றுப் படையில் பரக்கக் கண்டு தெளியலாம்.[28] குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறச்செயலைப் புறப்பாட்டால் நன்கறியலாம்.[29]
- ↑ 22. புறம், 221,223,232,250,264,306,314,339,335.
- ↑ 23. புறம், 62.
- ↑ 24. மணி-காதை 23 வரி, 13-20.
- ↑ 25. புறம், 40.
- ↑ 26. புறம், 73.
- ↑ 27. N.M. Nattar’s Cholas', pp. 101-102.
- ↑ 28. வரி, 84-89, 102-121
- ↑ 29. புறம், 34.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும் - History of Chola - சோழர் வரலாறு - அரசன், போர், போரில், புலவர், முதலிய, உடன், வந்து, கூத்தர், வளர்ந்தது, சோழன், வீரர், பாணர், அரசனது, அரசர், மரபு, செய்வர், அவர், வீரக்கல், தோற்ற, அவன்