சோழர் வரலாறு - சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
ஊர் மன்றம்: சிற்றூர்களிலும் சங்க காலத்தில் மன்றம் இருந்தது. ஊரின் பொதுச் செயல்களை ஆய்ந்து முடிபு கூற ஊரார் கூடிய இடமே மன்றம் எனப்பட்டது. அக்கூட்டம் பெரிய மரநிழலிற் கூடும்.அப்பொது இடத்தில் ஊரைப்பற்றிய செயல்களுடன், கூத்து முதலியனவும் நடைபெறல் வழக்கம். பெண்கள் நடிப்பர்.இவ்வூரவைச்செயல்கள் போர்க்காலத்தில் நிறுத்தப்பட்டு வந்தன.[15] இவ்வூர் அவைகள் இன்னின்ன செயல்களைச் செய்தன என்று திட்டமாக அதற்கு உரிய விவரங்கள் இன்று கிடைக்கவில்லை. ஆயினும், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தொண்டை நாட்டை ஆளத் தொடங்கிய பல்லவர் பட்டயங்களில் இவ்வூரவைகள் இருந்தன என்பது குறிக்கப்பட்டிருத்தலால், இவை பெரும்பாலும் ஊராண்மை நடத்தி வந்தன என்று கோடல் தவறாகாது. ஊரவையார் குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதும் இங்கு அறியத்தகும்.
வரிவிதிப்பு: நிலவரி, தொழில் வளி, சுங்க வரி என்பன வழக்கில் இருந்தன. நிலவரியே பெரிய வரியாகும். நிலக்கிழவனே அரசியலின் முதுகெலும்பாகக் கருதப்பட்டான். இதனால் அன்றோ வள்ளுவனார்,
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” |
என அழுத்தமாக அறைந்தார்? வெளிநாட்டு வாணிகம் சங்க காலத்திற் சிறந்திருந்தது. சுங்கச் சாலைகள் மிக்கிருந்தன. இவைபற்றிய விளக்கம் பட்டினப் பாலையிற் பரக்கக் காணலாம்.[16]“கடலுக்கு எதிரேயுள்ள அகன்ற சாலையில், உழைப்பிற் சிறந்த அரசியல் அலுவலாளர் அரசனுடைய பண்டங்களைக் கருத்தோடு பாதுகாக்கின்றனர்; நாள்தோறும் சுங்கம்வசூலிக்கின்றனர்; கதிரவன் குதிரைகளைப் போலச் சலிப்பின்றி உழைக்கின்றனர்; நாள் தோறும் அளவற்ற பண்டங்கள் கடலிலிருந்து கரைக்குக் கொண்டு வரப்படுகின்றன; கரையிலிருந்து ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு பண்டப் பொதி மீதும் புவி இலச்சினை பொறிக்கப்படும். பண்டங்கள் பண்டசாலைகளில் அடைக்கப்படும்.......” இக்கூற்றால் அரசியலுக்கு வந்த வரிகளுள் சுங்கவருமானம் ஒன்றாகும் என்பது தெளிவாதல் காண்க. நில அளவைகளில் வேலி, மா என்பன இருந்தன என்பது தெரிகிறது. இதனால், பிற அளவைகள் இல்லை எனல் கருத்தன்று.
சிறைச்சாலை: மணிமேகலை புகாரில் சிறை வைக்கப்பட்டாள். அவள் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்கினாள்.[17] பண்டைக்காலத்தில் சிறைச்சாலை ‘சிறைக்கோட்டம்’ என்று பெயர் பெற்று இருந்தது போலும்!
படை : சோழ மன்னரிடம் பண்பட்ட படைவீரர் இருந்தனர். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை இருந்தன. தானைத் தலைவர் எண்பேராயத்திற் பங்கு கொண்டவர். சேனாதிபதியர் (பிற்கால மகா சாமந்தர்) ஐம்பெருங்குழுவிற் பங்கு கொண்டவர். போரில் தன் வலியைக் காட்டிய பெருவீரன் ‘ஏனாதி’ என்னும் பட்டம் பெற்றான். அரசன் அப்பட்டத்தைத் தந்து அவ்வீரனைப் பெருமைப்படுத்தல் மரபு. அச்சிறு விழாவில் பட்டம் பெற்றவன் பொற்பூ மோதிரம் முதலியன பெறுதல் மரபு, ஏனாதிப் பட்டம் பெற்ற இருவர் புறநானூற்றில் புகழப்பட்டுள்ளனர்; ஒருவன் ஏனாதி-திருக்கிள்ளி[18][19] என்பவன். மற்றவன் ஏனாதி-திருக்குட்டுவன். ஏனாதி என்பது பெருமை தரும் பட்டப் பெயர். இவ்வீரர்கள் வீரச் செயல்களில் சிறந்து விளங்கினர். ஏனாதி-திருக்கிள்ளி' என்பதில் உள்ள ‘கிள்ளி’ என்பது சோழ அரசன் பெயராகும். பெரிய சாமந்தன் அல்லது அமைச்சன் அல்லது அரசியல் அலுவலாளன் தன் அரசன் பொதுப் பெயரையோ சிறப்புப் பெயரையோ வைத்துக் கொள்ளலைப் பிற்காலப் பல்லவர்-சோழர்-பாண்டியர் கல்வெட்டுகளிற் காணலாம். அங்ஙனமே பண்டைக் காலத்திலும் வைத்திருந்தனர் என்பதற்கு இஃதொரு சான்றாகும். அன்றி, சோழர் மரபினன் ஒருவனாகவே இவ்வீரனைக் கொள்ளினும் இழுக்காது. இந்த ஏனாதிப்பட்டம் கி.பி. 7,8,9-ஆம் நூற்றாண்டுகளிலும் சோழமன்னர் தம் தானைப் பெரு வீரர்க்கு வழங்கினர் என்பதற்குப் பெரிய புராணமே சான்றாகும். ஏன்? கி.பி.9-ஆம் நூற்றாண்டிற் பாடப்பெற்ற சுந்தரர் திருத் தொண்டத் தொகையே தக்க சான்றாகும்:
“ஏனாதிநாதன்றன் அடியார்க்கும் அடியேன்” |
என்றிவர் கூறுவதிற் காண்க. போர்ப் பயிற்சி அளிப்பதும் இவர் தம் தொழில் என்பதை பெரிய புராணத்தால் அறிகிறோம். இப்பட்டம் பிற்காலச் சோழர் ஆட்சியிலும் வழக்கில் இருந்ததைக் கல்வெட்டுகள் கொண்டு அறியலாம்.
அரசன் வேற்று நாட்டின் மீது போருக்குப் போகையில் வெற்றிவாள், கொற்றக்குடை, வீரமுரசு இவற்றை நன் முழுத்தத்திற் புறப்படச் செய்தல் வழக்கம், இங்ஙனம் செய்தல் வாள்நாட்கோள், குடைநாட்கோள், முரசு நாட்கோள் எனப்படும். அரசன் வஞ்சி சூடிப் பகைமேற் செல்லும் பொழுது தன் படைவீரர்க்குப் படைக்கலம் முதலியனவும், பரிசிலர்க்குப் பொருளும் கொடுப்பன் போரினை மேற்கொண்ட பின்னாளில் படைகட்குப் பெருவிருந்து செய்து மகிழ்விப்பன்.[20]
பட்டங்கள்: சேனைத் தலைவர்க்கு ஏனாதி என்ற பட்டம் அளித்தல் போன்றே அமைச்சர், கணக்கர், வேளாளர் முதலாயினார்க்குக் காவிதி என்ற பட்டமும், வணிகர்க்கு எட்டி என்ற பட்டமும் அளித்து அதற்கு அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட பூவினை அளிப்பர். அவை எட்டிப்பூ, காவிதிப்பூ எனப்படும்.[21]
- ↑ 15. Puram, 373 மென்றோள் மகளிர் மன்றம் பேனார்.
- ↑ 16. வரி, 118-137.
- ↑ 17. மணிமேகலை, காதை 19.
- ↑ 18. புறம், 167.
- ↑ 19. புறம், 394.
- ↑ 20. N.M.V. Nattar's ‘cholas’, p. 101.
- ↑ 21. Ibid.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும் - History of Chola - சோழர் வரலாறு - என்பது, ஏனாதி, பெரிய, அரசன், பட்டம், இருந்தன, சான்றாகும், சோழர், மன்றம்