சோழர் வரலாறு - சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
வடமொழியாளர் சங்க காலத்தில் நன்கு நிலைத்து விட்டனர் என்பதைப் பலவிடத்தும் குறித்தோம். அவர்கள் சிறந்த கல்வி, கேள்விகளில் வல்லுனராக இருந்தனர். நான்கு வேதங்களிலும் அவை தொடர்பான பிற நூல்களிலும் புலமை பெற்றிருந்தனர். அவர்கள் பழக்கத்தால் சங்க காலத்துச் சோழ மன்னருட் சிலர் வேத வேள்விகளைச் செய்தனர் என்பது தெரிகிறது. பெருநற்கிள்ளி என்பவன் இராஞ்சூயம் (இராஜசூய யாகம்) செய்தவன். அதனால் இவன் வடநூற் கொள்கைப்படி பேரரசன் என்பது பெறப்படுகிறது. இத்தகைய அரசர்கள் அந்நான்மறையாளர்க்குச் சில ஊர்களை மானியமாக விட்டிருந்தனர் போலும்! அவருள் ஒருவன் சோணாட்டு பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் என்பவன். இவன் கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன் ஓதல், ஒதுவித்தல் முதலிய ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்க’த்திலும் சிறந்தவன்; சிறந்த கொடையாளி. தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்தான். இவனை ஆவூர் மூலங்கிழார் என்னும் நல்லிசைப் புலவர் பாராட்டிப் பாடியுள்ளார். அப்பாடலில் வேள்வியைப் பற்றிய பல விவரங்கள் தெரிகின்றன. இக்குறிப்பால் வேத வேள்வி தமிழ்நாட்டில் செய்யப்பட்டது என்பதும், அறிவுடைத் தமிழர் அதனை நன்கு அறிந்திருந்தனர் என்பனவும் நன்கு விளங்குகின்றன.[55]
சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதைச் சமண காவியமான சிலப்பதிகாரமும் பெளத்த காவியமாகிய மணிமேகலையுமே கூறுகின்றன எனின், அக்காலத் தமிழர் அங்ஙனமே கருதினர் எனக் கோடலில் தவறில்லை அன்றோ? இதனாற் பெரும்பாலான தமிழர் சைவர் என்பது கூறாதே அமையும் அன்றோ? வேங்கடமும் திருவரங்கமும் சிறந்த வைணவத் தளிகளாகச் சிலப்பதிகாரம் கூறலை நோக்கின் ஆய்ச்சியர் குரவையை அழுத்தமாக ஆராயின், சங்ககாலத்தில் வைணவமும் போற்றத்தக்க சமயமாக இருந்தது என்பதை நன்கறியலாம். இந்த இரண்டுடன் மேற்சொன்ன வேத சமயமும் சங்ககாலத் தமிழரிடம் கலக்கத் தொடங்கியது என்பது நடுநின்று ஆராய்வார் நன்கறிதல் கூடும்.
புகாரில் பெளத்த விகாரம், சமணப்பள்ளி முதலியன இருந்தன. இருதிறத்துப் பெரியாரும் தங்கள் சமய போதனைகளைப் பண்பட நடத்தி வந்தார்கள். பெருஞ் செல்வனாக விளங்கிய கோவலன் சமணன், இளங்கோ அடிகள் சமணர் மணிமேகலை செய்த கூலவாணிகன் சாத்தனார், பெளத்தர். மாதவியும் மணிமேகலையும் பெளத்த பிக்குணிகளாயிருந்தனர். இவற்றை நன்கு நோக்குகையில், சங்க காலத் தமிழகத்தில் அவரவர் விரும்பியவாறு சமயக் கொள்கைகளைப் பின்பற்ற முழுவுரிமை பெற்றிருந்தனர் என்பது நன்கு தெரிகிறதன்றோ?
சங்க காலத்துக் கோவில்கள்: சிவன், முருகன், திருமால், பலதேவன், மாசாத்தன் இவர்க்கும்; கற்பகத்தரு வெள்ளையானை, வச்சிரப்படை, ஞாயிறு, திங்கள் முருகன் வேல் இவற்றுக்கும் கோவில்கள் இருந்தன; வர்த்தமானர்க்கும் புத்த தேவர்க்கும் கோவில்கள் இருந்தன. நாடு முழுதும் கிராம தேவதைகட்கும் வீரர்க்கும் பிறர்க்கும் சிறிய கோவில்கள் இருந்தன. இவை யாவும் செங்கல், மண், மரம், உலோகம் இவற்றால் ஆன கோவில்களே ஆகும்.
இடுதல், சுடுதல் முதலியன: இறந்தவர் உடலை எரித்தல் உண்டு; புதைத்தல் உண்டு; தாழியிற் கவித்தல் உண்டு. தாழியிற் கவித்தலே மிகப் பழைய வழக்கம். இடுதல், சுடுதல் என்பன பிற்பட்டவை. இவை பிற்பட்டவை ஆயினும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் பழக்கமே ஆகும். இறந்தவர் உடலை அடக்கம் செய்த இடத்தில் சிறு கோவில்கள் எழுப்புதல் மரபு. “குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன” இறந்தார் கோவில்கள் புகாரில் இருந்தன என்று மணிமேகலை கூறுதல் காணலாம். பத்தினிப் பெண்டிர் கணவருடன் இறத்தல் மரபு. அப்பெண்டிர்க்கும் கோவில்கள் எழுப்புதல் மரபாக இருந்தது. மனைவியர் கணவருடன் இறத்தல் தொன்று தொட்டு இருந்து வரும் தமிழ்நாட்டுப் பழக்கமாகும். ‘அங்கனம் இறவாதவர் தீக்குளிப்பர்; அதுவும் ஆற்றாதவர் மறுபிறப்பில் அக்கணவனைக் கூடற்குரிய முறையில் கைம்மை நோன்பு நோற்பர்” என்று மணிமேகலையில் மாதவி கூற்றாக வருதல் நோக்கத் தக்கது.
சோழர் பேரறிவு: சோழ அரசர் குறிப்பிட்ட நாள்களில் பல சமயத்தவரையும் அழைத்துத் தத்தமது சமயத்தைப் பற்றி விளக்கச் சந்தர்ப்பம் அளித்து அவற்றைப் பொது மக்கள் கேட்க வசதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாம். இதனை மணிமேகலை இந்திரவிழவூரெடுத்த காதையிற் காணலாம். சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காஞ்சியிலும் பல சமயப் பெருமக்கள் இருந்தனர். ஒவ்வொரு தலைநகரத்திலும் இக்காட்சியைக் காணலாம். இப்பெருந்தன்மை வாய்ந்த செயல்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” |
எனவும்,
“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” |
எனவும், வகுத்த வள்ளுவனார் சட்டப்படி சோழப் பேரரசர் நடந்து வந்தனர் என்பதை நன்கு உணர்த்துகிறதன்றோ?
- ↑ 55. புறம், 166.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும் - History of Chola - சோழர் வரலாறு - நன்கு, கோவில்கள், என்பது, இருந்தன, சங்க, உண்டு, காணலாம், பெளத்த, சிறந்த, தமிழர், மணிமேகலை