சேர மன்னர் வரலாறு - பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
இதனால் மகிழ்ச்சி மிகுந்த உதியஞ்சேரல் முடிநாகனார்க்குப் பெருஞ்சிறப்புச் செய்தான். அவரும் ஏனைப் பரிசிலரும் பெருவளம் பெற்று இன்புற்றனர். முடிநாகனாரது முரஞ்சியூர் அவர்க்கே உரியதாயிற்று. அதுவே இப்போது முரிஞ்யூர் என மருவிநிலவுவதுடன் அது கொச்சி வேந்தர் குடியின்கண் தொடர் புற்றிருப்பதும் குறிக்கொண்டு அறியத்தக்கதொன்று.
இறுதியாக ஒன்று கூறுவதும்; இளங்கீரனார் என்னும் சான்றோர், ஒருகால் பெருஞ்சோற்றுதியானது போர்க்களத்துக்குச் சென்றார். அங்கே போர் முரசின் முழக்கத்தூடே ஆம்பங்குழலை இயவர் இசைத்தனர். கன்னெஞ்சையும் நீராய் உருக்கும் அக் குழலிசையால் போர் மறவரது நெஞ்சம் சிறிதும் பேதுறாது மறத்தீக் கொழுந்துவிட்டு எரிவது கண்டார். இனிய இசைக்கு உருகாத அளவில் மறவர் நெஞ்சம் மாறியிருந்தமையின், அம் மாற்றக் குறிப்பினைத் தக்கோரைக் கேட்டு உணர்ந்தார்.
முன்பு ஒருகால் சேரவேந்தர் வானவாசி நாட்டவரோடு போர் செய்யவேண்டியவராயினர். அவர்கள் சேரர்க்குரிய கொண்கானம் கடந்து குட நாட்டின் எல்லையிற் புகுந்து குறும்பு செய்து அலைத்தனர். அவர்களை வெருட்டுவது குறித்துச் சேரர்படை சென்று அவர்களைத் துரத்திற்று. கொண் கான நாட்டில் ஒருகால் அவர்கள் பாசறை அமைத்திருக்கையில், பகைவர் இன்னிசை இயவராய் வந்து குழலூதி மகிழ்வித்தனர். அக் குழலிசையில் சேரர்படையின் தலைவர் ஈடுபட்டு அருள்மேவிய உள்ளத்தராயினர். அதன் பயனாகச் சேரர் படை வானவாசிகட்குத் தோற்றோடிவதாயிற்று. அதனை அறிந்திருந்தமையின், உதியஞ்சேரல் போர்க்களத்தின் கண் இயவரைக் கொண்டு இம்மென இசைக்கும் ஆம்பலங்குழலை இசைக்கச் செய்து மறவர் மறம் இறைபோகாவண்ணம் அரண் செய்தான்.
இதனைக் கேட்டறிந்த இளங்கீரனார், ஒருகால் தலைமகன் ஒருவன் தன் இனிய காதலியைப் பிரிந்து பொருள் கருதிப் பிரிந்து செல்வது பொருளாகப் பாட வேண்டியவராயினார். அத் தலைவன் ஒரு சுரத்திடையே சென்றுகொண்டிருக்கையில் தன் காதலியை நினைத்துக் கொண்டான். அவன் மனக் கண்ணில் காதலியின் திருமுகம் தோன்றியது. அவன் தன் பிரிவை உணர்த்தக் கேட்டதும், அவள் ஆற்றாமல் கண் கலுழ்ந்ததும், அதனை அவனுக்குத் தெரியாவாறு தன் கூந்தலால் அவள் மறைத்துக் கொண்டதும், அவளை அறியாமலே மெல்லிய அழுகைக்குரல் அவள் பால் தோன்றியதும் நினைவுக்கு வந்தன. அவற்றை அச் சான்றோர் அழகிய பாட்டாக எழுதினார். எழுதுங்கால், அவளுடைய ஏங்கு குரலை எடுத்துக்காட்ட நினைத்த அவருக்கு, உதியன் செய்த போர்க்களத்தே இயவர் எழுப்பும் ஆம்பற் குழலிசை உயர்ந்த உவமையாகத் தோன்றிற்று. “நெய்தல் உண்கண் பைதல் கூரப், பின்னிருங் கூந்தலின் மறையினள் பெரிதழிந்து, உதியனத் மண்டிய ஒலிதலை ஞாட்பின், இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும், ஆம்பலங் குழலின் ஏங்கிக் கலங்கஞர் உறுவோள்[26]” என்று பாடின. காதலியின் ஏக்கம் பொருள் மேற்சென்ற அக்காளையது உள்ளத்தை மாற்ற மாட்டாது ஒழிந்தது போல, இவரது ஆம்பற் குழலிசை உதியனுடைய மறவருள்ளத்தை மாற்றமாட்டா தொழிந்தது என்பது குறிப்பு.
செங்குட்டுவன் வடநாடு சென்றபோது, நீலகிரியில் தங்கியிருக்கையில் கொங்கணக் கூத்தரும் பிறரும் போந்து பாடிப் பரிசில் பெற்றதும்[27], ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வடநாட்டிற் பொருடற்றச் சென்றபோது கொண்கானநாட்டு விறலியர் போந்து இசையும் கூத்தும் நல்கக் காக்கைபாடினியார் போந்து அவன் உள்ளத்தை வினைமேற் செலுத்தியதும்[28], கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மேலைக் கடற்கரைக்குப் போந்த போர்ச்சுகீசியர் கோவா நாட்டினின்றும் கன்னட நாட்டினின்றும் வரும் அழகிய ஆடல் மகளிரின் கூட்டம் நயந்து அஞ்சு தீவுக்குப் போந்து தங்கியதும்[29] இக் கருத்துக்குமிக்க ஆதரவு தருகின்றன. இவ்வியல்பு இன்றும் அப்பகுதியில் மறையாமல் இருந்து வருகிறது. வானவாற் (Honawar)றிலிருந்து தோகைக்கா (Joag) என்ற ஊர்க்குச் செல்லும் வழியில் கொங்கணர் மனைகளில் தங்கின் இத்தகைய இசையின்பத்தை வழிச்செல்லும் நாம் பெறுகின்றோம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - ஒருகால், போந்து, அவள், இயவர், போர், அவன்