சேர மன்னர் வரலாறு - பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
பிற்காலத்தில் தோன்றிய பாரதக் கூத்தின் அடியாகத் தோன்றியவை கம்ப சேவை, கம்பக் கூத்து முதலியனவாதலால் இவற்றைக் காட்டிப் பெருஞ் சோற்றுதியன் பெருஞ்சோறளித்த நிகழ்ச்சியை மறுப்பது பொருத்தமாக இல்லை.
இத்துணையும் கூறியதனால், பெருஞ்சோற் றுதியன் கொங்கு நாட்டில் தான் பெற்ற வெற்றி குறித்துச் செய்த விழாவில் மேற்கொண்டு மகிழ்ந்து ஆற்றிய பெருஞ்சோற்றுநிலை என்னும் புறத்துறைச் செயல், அவனுக்கே சிறப்பாய் அமைந்தமையின், அவன் பெருஞ்சோற்றுதியன் எனச் சிறப்பிக்கப் பெற்றான் என்பதும், அதனைப் பாராட்ட வந்த முடிநாகனார் ஒப்புமை பற்றி முன்னோன் ஒருவன் செயலை இவன்மேல் ஏற்றிக் கூறினார் என்பதும் தெளியப்படும்.
பெருஞ்சோற்றுதியன் வேறு, இமயவரம்பன் தந்தையான உதியஞ்சேரல் வேறு என்றதற்குக் காரணம் உண்டு. இமயவரம்பன் தந்தையை, “மன்னிய பெரும் புகழ் மறுவில் வாய்மொழி, இன்னிசை முரசின் உதியஞ் சேரல் என்று பதிற்றுப்பத்தின் இரண்டாம் பதிகம் - கூறுகிறதேயன்றி, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்று கூறவில்லை. பழந்தமிழ் வேந்தரின் வரலாறுகளை ஆங்காங்குப் பெய்து கூறும் இயல்பினரான மாமூலனார் பாட்டு, “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை[24]” என்று பொதுப்படக் கூறுவதனால், பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்த குறிப்பு மாமூலனார்க்கு இல்லையென்பது விளங்குகிறது.
“இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப”, தென் பாண்டிக் குமரிப்பகுதியையும் கொங்கு நாட்டுப் பகுதியையும் வென்று “நாடுகண்[25] அகற்றிய செயலால் பெரும்புகழ் பெற்ற குறிப்பை “மன்னிய பெரும்புகழ்” என்று பதிகம் கூறிற்று. முடிநாகனாரும், “நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின், குடகடற் குளிக்கும் யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந” என்பதனால் நாடு கண்ணகற்றிய திறமே கூறினாராயிற்று. இவ்வாறே, போர்க்களத்தில் இயவரைக் கொண்டு இவ்வாறே, போர்க்களத்தில் இயவரைக் கொண்டு ஆம் பலங்குழலை இயம்புமாறு செய்தான் உதியஞ்சேரல் என இளங்கீரனார் கூறிய குறிப்பே “இன்னிசை முரசின் உதியஞ்சேரல்” என்ற பதிகக் கூற்றிலும் காணப்படுகிறது. இதனால், இமயவரம்பன் தந்தையான உதியஞ் சேரல் வேறு, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் வேறு என்பது காணப்படும்.
கொங்கு நாட்டிலும் தென்பாட்டி நாட்டிலும் உதியஞ்சேரல் செய்த போர்ச்செயல்களையும், அக் காலத்தே தனக்குத் தீங்கு செய்ய முயன்ற பகைவர், பின்பு புகலடைந்தபோது அவர்கள் பகைத்துச் செய்த வற்றை நினையாது பொறை மேற்கொண்டு ஒழுகியதும், தன்னை வெல்வது கருதிப் பகைவர் செய்த சூழ்ச்சிகளை . முன்னறிந்து, அவை அவர்கட்குப் பயன்படாவாறு, தான் முன்னே தகுவன சூழ்ந்து வெற்றி பெற்றதும், எதிர் நின்று பொருபவர் எத்தனை முயன்றும் கடைபோக நிற்கமாட்டாது கெடுமாறு மோதும் உதியனது வலியும், பொறுக்கலாகாத குற்றம் செய்தாரைத் தமது குற்றம் உணர்ந்து திருந்தி அமையுமளவாகத் தெறும் தெறலும், தன்பால் அன்புடையார்க்குத் தண்ணியனாய்ச் செய்யும் அருளும் முடிநாகனார் நேரே கண்டன. நிலவுலகத்து வாழும் மக்கட்கு இறைவனாய்த் திகழும் வேந்தன், உலகத்தின் கூறுகளான நிலம் ஐந்தன் இயல்புகளையும் உடையனாதல் வேண்டும்; மக்கள் உடல் நிலை பெறுதற்கு முதலிய ஐந்தும் ஆதாரமாவதுபோல, உயிர் வாழ்வுக்கு அரசனது ஐவகை இயல்பும் ஆதாரமாம் என்பது அரசியலின் அடிப்படை; இவ்வைந்தன் இயல்பும் உதியன் பால் காணப்பட்டமையின், “வேந்தே, நீ பொறையும் சூழ்ச்சியும் வலியுமாகிய எல்லாம் உடையனாய் இருக்கின்றாய்; நாட்டின் பரப்புச் சிறிது என்று கருதி மேலைக் கடற்கும் கீழைக்கடற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியை வென்று கொண்டாய்; அதனால் நாளும் ஞாயிறு நின் கடலிலே தோன்றி நின் கடலிலே மறைகிறது; நாடு பரப்புவதிலே கருத்தைச் செலுத்தும் வேந்தன், பரப்புமிகுதற்கேற்ப நாட்டின் வருவாயையும் நாடோறும் பெருகச் செய்தல் அரசியற்கு இன்றியமையாது என்ற கருத்தையும் நீ மறந்தவனில்லை என்பது நன்கு தெரிகிறது” என்று பாராட்டிக் கூறினார்.
தெற்கிலும் கிழக்கிலும் நாடு கண்ணகற்றியும் வருவாய் பெருக்கியும் உதியனது அரசியல் இயங்குவது கானும் வானவாசிகள், முன்னைச்சேரர் வரையறுத்த வரம்பு கடவாது அஞ்சியே ஒழுகினர்; வரம்பறுத்த வேந்தனது பார்வை வரம்பின் மேல் இருப்பது வானவாசிகட்குத் தெரிந்தவண்ணம் இருக்குமாறு உதியன் காவல் செய்தொழுகியது கண்டு முடிநாகனார் பெருவியப்புக் கொண்டார்; “வானவரம்பனை, நீயோ பெரும்” என்று பாராட்டினார்.
மேலும், அவர், “வானவரம்பரான பண்டையோர் போல இன்றும் நீ வானவரம்பனாய் விளங்குகின்றாய்; அதனால், பண்டு பாரதப் போரில் பெருஞ்சோற்றுநிலை என்னும் புறத்துறை முற்றிய நின் முன்னோரைப் போல இன்றும் அப் புறத்துறைச் செயலைச் செய்கின்றாய். இவ்வாறு சேரவரசு மேற்கொண்டு செய்தற்குரிய கடன்களைச் செவ்வனம் ஆற்றி விளங்குவதால், இனிக்கும் பால் இனிமை திரிந்து புளிக்குமாயினும், ஒளி திகழும் பகற்போது ஒளி திரிந்து இருளுமாயினும், நெறி நிற்கும் நான்மறைகள் நெறி திரியுமாயினும் நின்பால் அன்புடைய நின் சுற்றத்தாரோடு அன்புதிரியாது, புகழ்மிகுந்து, அருங்கடன் இறுக்கும் அந்தணர் உறையும் வடஇமயமும் தென் பொதியிலும் போல நிலைபெறு வாயாக” என்று வாழ்த்தினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நின், உதியஞ்சேரல், வேறு, செய்த, நாடு, என்பது, மேற்கொண்டு, கொங்கு, இமயவரம்பன், முடிநாகனார்