சேர மன்னர் வரலாறு - பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனே பாரதகாலத்தவன் என்னும் கூற்றை மேற்கொண்டு ஆராயலுற்ற அறிஞர் வேறு கூறுவர்: “கோதுமை உண்ணும் கூட்டத் தவரான பாண்டவ கெளரவர்கட்கு நெற்சோறுண்டு தென்னாட்டுப்பகுதிகள் ஒன்றில் வாழும் வேந்த னொருவன் சோறு கொடுத்தான் என்பது சிறிதும் ஒவ்வாவுரை; கெளரவர் இறந்தது குறித்துச் செய்த விழாவில் பேரெண்ணினரான மக்கட்கு இவ்வுதியன் பெருஞ்சோறளித்தான் என்று கொள்வதே பொருத்த மானது; இவ்விழா, பாரத வீரர்கட்குச் சிரார்த்தமாகவோ பாரதக் கதையை நடித்த நாடகத்தின் இறுதி விழாவாகவோ இருத்தல் வேண்டும்.
“சேரநாடு நெடுங்காலமாகக் கதகளி யென்னும் கூத்துக்குப் பெயர்போனது; பாட்டும் உரையுமின்றி அவிநயத்தால் உள்ளக்கருத்தை யுணர்த்துவது இதன் இயல்பு; இத்தகைய கதகளி யொன்றின் இறுதி விழாவாக இப்பெருஞ்சோறளிக்கப்பட்டதாம். இது போலும் கூத்துகள் தமிழ் நாட்டில் நடைபெறுவது வழக்கம்; செயற்கரும் செயல் செய்த வீரர் வரலாறுகளை நடித்துக் காட்டும் இக்கூத்துவகை தமிழ்நாட்டின் தொன்மை வழக்காதலின் இவற்றைப் பட்டவர்குறி என்றும் கூறுவ துண்டு. இதனைக் கம்ப சேவை என்றும், கம்பக்கூத் தென்றும், இக் கூத்தாடுபவரைக் கம்பஞ்சேய்மாக்கள் என்றும் கூறுவர். அக்கம்ப சேவையிற் கலந்தாடும் உழவர்கட்கு, உடையோர் பெருஞ்சோறளித்துப் பெருமை செய்வர்.
“பண்டைத் தமிழ் வேந்தர்களின் புகழ்வினை மாண்புகளை வாய்த்தவிடத்து உவமமாகவும் பொரு ளாகவும் பாடிய நல்லிசைச் சான்றோருள், இளங் கீரனார் பாட்டும்[13] மாமூலனார் பாட்டும்[14] இச்சேரலாதனுடைய போர் வன்மையையும் கொடைச் சிறப்பையும் உணர்த்தி நிற்கின்றன. இத்தகைய செம்மல் பாரதப் போரில் குருட்சேத்திரத்தில் பாரத வீரர்கட்குச் சோறு போடும் பணியில் தலைமை தாங்கினான் என்பது உண்மைக்குப் பொருத்தமாக இல்லை” என்பது அவர்கள் உரை[15].
வேறு சிலர், இக்கருத்தே உடையராயினும், உதியஞ்சேரலாதன் தன்னுடைய முன்னோருள் சிலர் பாரதப் போரில் இறந்தாராக, அவர்கட்குச் செய்த ஆண்டு விழாவில் இப்பெருஞ்சோற்றை நல்கி யிருக்க வேண்டும் என[16] உரைக்கின்றனர்.
பெருஞ்சோற்றுதியன் வரலாற்றை முடிக்குமுன் இவ்வுரைகளைப் பற்றிச் சில கூறுவது கடனாகின்றது. “பெருஞ்சோறு” என்பதற்குச் சிலர் நெற்சோறு என்று பொருள் எனக் கருதிக் கொண்டு, பாண்டவ கெளரவர்கள் கோதுமை, உண்பர் என்றும், சேரமான் நெற்சோறு கொடுத்தான் என்றும் உரைக்கின்றனர். பெருஞ்சோறு என்பது நெற்சோறாகத்தான் இருக்க வேண்டும் என்பதன்று; வரகுச் சோறு, கம்பஞ்சோறு, தினைச்சோறு, கோதுமைச் சோறு என வழங்குவ துண்மையின் பெருஞ்சோறு என்றது ஈண்டுப் பேருணவு என்னும் பொருளதாம் என அறிதல் வேண்டும்.
இனி, அவர்கள் கூறுமாறு பாண்டவ கெளரவர் செய்து கொண்ட போரைத் “தென்னாட்டில் ஒரு மூலையில் வாழும் ஒரு தமிழ் வேந்தன் பாராட்டி, அப்போரில் இறந்தோர் பொருட்டுப் பெருஞ்சோற்று விழாவைத் தன்னாட்டில் செய்தற்கு ஒரு தொடர்பும் இல்லை; அந்நாளில் வடவாரியர்க்கும் தென் தமிழர்க்கும் சிறந்த நட்புரிமை இருந்ததாக எண்ணு தற்கும் இடமில்லை ; வடவாரியர் பிணங்கியதும் அவரைத் தென்னாட்டுத் தமிழர் “அலறத்தாக்கி[17]” வென்றதுமே சங்க இலக்கியங்களுள் பேசப்படுகின்றன. “பேரிசை மரபின் ஆரியர் வணக்கி[18]” “ஆரிய வண்ணலை வீட்டி[19]” “ஆரியவரசர் கடும்பகை மாக்களைக் கொன்று[20]” என்றெல்லாம் சங்கநூல்கள் கூறுவதைக் காணும் கின்றோம். அதுவே அவர் பொருட்டுச் சேரலாதன் விழாச் செய்திருக்கலாம் என அவர்கள் கூறுவது பொருந்தாது என்பது தெளிவாகிறது.
இனி, தென்னாட்டு ஊர்களில் பாரதம் படிப்பதும்[21] குறித்துத் தென்னாட்டுச் செல்வர்கள் பாரத விருத்தியென[22] நிவந்தங்கள் விடுவதும் இடைக்காலத்தும் பிற்காலத்தும் நடந்தன. சங்ககாலத்தே இந்நிகழ்ச்சிகள் நடந்தன என்று கொள்வதற்குச் சங்க நூல்களில் ஆதரவு சிறிதும் இல்லை.
இனி, சாக்கைக் கூத்து வகையில் அவிநயக் கூத்தின் விளைவாக நிலவும் கதகளி என்னும் கூத்தில் இறுதி விழாவாக இப் பெருஞ்சோறு அளிக்கப்பட்டது என்ற கருத்துக் கதகளியின் வரலாறு நோக்காது எழுந்ததாகும். சங்ககாலச் சேரவரசு மறைந்தபின், வடநாட்டார் அதனுட் புகுந்து அதனைக் கேரள நாடாக மாற்றிய போது ஆங்காங்குத் தோன்றிய சிற்றரசர்களுள் கொட்டாரக்கரைச் சிற்றரசரொருவர் இக் கதகளிக் கூத்தை முதற்கண் ஏற்படுத்தினார்[23]; இச் சிற்றரசர் பெருஞ்சோற்றுதியனுக்குப் பன்னூறாண்டு பிற்பட்டவர்; பிற்பட்ட காலத்துத் தோன்றிய ஒருவகைக் கூத்தைப் பெருஞ்சோற்றுதியன் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறுவது ஆராய்ச்சி நெறிக்கு அறமாக இல்லை.
- ↑ 13. நற். 113.
- ↑ 14. அகம். 65.
- ↑ 15. P.T. S. Ayengar’s History of the Tamils. p. 492-4.
- ↑ 16. Chera kings of Sangam Period by K.G. Sesha Iyer p.7.
- ↑ 17. அகம்.396.
- ↑ 18. பதிற். ii.பதி.
- ↑ 19. ஷை (மேலது) V. பதி.
- ↑ 20. சிலப். கால்கோள். 211.
- ↑ 21. A.R. No. 540 of 1922.
- ↑ 22. Annual Report of Mad. Epigraphy for 1910. p.96.
- ↑ 23. K.P.P. Menon’s History of Kerala Vol. in. p. 525.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - என்றும், என்பது, வேண்டும், சோறு, பாண்டவ, சிலர், கூறுவது, இல்லை, பெருஞ்சோறு, தமிழ், பாட்டும், செய்த, பாரத, இறுதி, என்னும், கதகளி