சேர மன்னர் வரலாறு - பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
பண்டைத் தமிழ் வேந்தர் முத்தமிழையும் வளர்ப்பது தமது கடனாகக் கொண்டவர். அம் மூன்றும் இயல், இசை, கூத்து என்பன. கூத்து கூத்தர்பாலும், இசை, பாணர் பொருநர் முதலியோர் பாலும், இயல் புலவர் பாலும் வளர்ந்தன. இவற்றால் நாட்டு மக்களுடைய உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றும் பண்பட்டன. அதனால் கூத்தர்க்கு வேண்டுவன நல்கிக் கூத்தையும், பாணர்க்குக் கொடை வழங்கி இசையையும், புலவர்க்குப் பரிசில் கொடுத்து இயலையும் வளர்த்தனர். இதனை ஏனைச் சோழபாண்டியர் செய்தது போலவே சேரமானாகிய உதியஞ் சேரலும் செய்தான்; ஆயினும், போர்த்துறையில் மிக்க ஈடுபாடுடையனாதலால், இசை வாணரை வரவேற்றுப் போர்மறவரிடையே இனிய குழலிசையை இசைக்குமாறு புதியதோர் ஏற்பாட் டினைச் செய்தான். மறவரது மறப்பண்பையும், இசை, தனது நலத்தால் மாற்றிவிடும் என்பது உணர்ந்து, அதனால் மறம் வாடாத நிலையுண்டதால் வேண்டி உதியன் இச் செயலைச் செய்தான் இதனை நுணுகிக் கண்ட இளங்கீரனார் என்னும் சான்றோர், “உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பில், இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும், ஆம்பலங் குழல்”[5] என எடுத்து ஓதுகின்றார்.
உதியனது சேரநாடு கிழக்கில் கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. அப் பகுதியில் குழுமூர் என்பது ஓரூர்; இப்போது உடுமலைப்பேட்டை தாலூகாவில் அது குழுமம் என்ற பெயருடன் இருக்கிறது. ஒருகால் அப் பகுதியில் கடும் போர் உடற்றி வென்றி எய்திய உதியஞ் சேரல் தன்னோடு போர்க்களம் புகுந்து பகைவரொடு போருடற்றித் துறக்கம் பெற்ற சான்றோர் பொருட்டுப் பெருஞ்சோற்று விழாவொன்றைச் செய்தான்.[6] இதனைப் “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை[7] என்று தொல்காப்பியர் கூறுவதனால், இது தமிழ் மக்களிடையே தொன்றுதொட்டு வரும் மரபு என்பது தெளியப்படும். பாரதப் போர் நிகழ்ந்த காலத்தே சேரநாட்டு வேந்தரும் அதன் கட் கலந்து கொண்டனர். அதற்கு வியாசர் எழுதிய பாரதமே சான்று பகருகிறது. அப் போர் முடிவில் பாண்டவர்களையும் எஞ்சி நின்ற கெளரவர்களையும் ஒருங்கு கூட்டி அரும் போர் செய்து துறக்கம் எய்தியோர்க்காகப் பெருஞ்சோற்று விழா செய்தல் வேண்டும் என அப் போர்க்குச் சென்றிருந்த சேரவேந்தன் வற்புறுத்திப் “பெருஞ்சோற்று நிலை” யொன்றை நடத்தினான். அவன் வழிவந்தோனாதலால், உதியஞ்சேரல் குழுமூர்க்கண் பெருஞ்சோற்றுவிழா நிகழ்த்தியதை, வியந்து பாட வந்த முடிநாகனார் என்ற சான்றோர், இவனுடைய முன்னோன் செயலை இவன் மேலேற்றி,
“அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்[8]” |
என்று பாடினர் என்பர். இந்த முடிநாகனார், சேரநாட்டு ஊர்களுள் ஒன்றான முரஞ்சியூர் என்னும் ஊரினர்; இப்போது அது முரிஞ்யூர் என வழங்குகிறது; கொச்சி வேந்தர் குடும்பக் கிளைகளான மூத்ததாய் வழி , இளைய தாய்வழி முரிஞ்யூர்த் தாய்வழி, சாலியூர்த் தாய்வழி, பள்ளிவிருத்தித் தாய்வழி[9] எனப்படும் கிளைகளுள் முரிஞ்யூர்த் தாய்வழிக்குரிய ஊராக இருப்பது கருதத் தக்கது. இவ்வூரினரான முடிநாகனார்க்கு வேந்தர் குடிவரவு நன்கு தெரிந்திருத்தற்கு வாய்ப்புண்மையால், அவர் இதனை நினைத்து நம் உதியனை இவ்வாறு சிறப்பித்துப் பாடினார் என்பர்.
இப் பிண்ணடம் மேய பெருஞ் சோற்றுநிலை யென்னும் புறத்துறையை மேற்கொண்டு புலவர் பாடும் புகழுண்டாகச் செய்தோர் இவ் உதியஞ்சேரற்குப் பின் வந்தோருள் பிறர் எவரும் இல்லாமையால், பிற்காலச் சான்றோர் நம் உதியஞ்சேரலை, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்று சிறப்பித்துக் கூறுவாராயினர்.
புறநானூற்றுப் பழைய உரைகாரர்,[10] இம் முடிநாகனார் பாட்டின் உரையில் “பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோன்” இப்பெருஞ்சோற்றுதியற்கு முன்னோன் என்றும், முன்னோன் செய்கை இவ்வுதியஞ்சேரல்மேல் ஏற்றிக் கூறப்படுகிறதென்றும் கூறாமையால், இதனைக் கண்டோர், இச்சேரலாதன் பாரத காலத்தவன் என்றும், பாரத வீரர்கட்குப் பெருஞ்சோறு அளித்தவன் இவனே என்றும், இவனது இச்செயலைப் பாராட்டிப் பாடும் இம்முடிநாகனாரும் பாரதகாலத்தவர் என்றும் கருதி உரைப்பாராயினர். இச்சான்றோரது பெயர் தலைச்சங்கப் நிரலுட் காணப் படுவதால், தலைச்சங்க காலம் பாரத காலத்தோடு ஒப்புநோக்கும் தொன்மையுடையது என்பது பற்றி, பெருஞ்சோற்றுதியனைப் பாரதகாலத்தவன் என்று துணிதற்கு ஏற்ற வாய்ப்பு உண்டாவதாயிற்று இமய வரம்பன் தந்தையாகிய (நாம் மேற்கொண்டுரைக்கும்) உதியஞ்சேரல் பாரதகாலத்தவனாதற்கு இன்யின்மையால், பெருஞ்சோற்றுதியன் வேறு, இமயவரம்பன் தந்தையான உதியஞ்சேரல் வேறு[11] என்றும், “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை , முதியர்ப் பேணிய உதியஞ்சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை[12]“ என மாமூலனார் கூறுவது பாரதப்போரில் நிகழ்ந்தது என்றும் திரு.மு. இராகவையங்கார் கூறுவர்.
- ↑ 5. நற். 113.
- ↑ 6. அகம். 168; 235.
- ↑ 7. தொல். புறம். 8.
- ↑ 8. புறம் 2.
- ↑ 9. K.P.P. Menon’s History of Kerala Vol.i. p.480.
- ↑ 10. புறம். 2.
- ↑ 11. சேரவேந்தர் செய்யுட்கோவை. பக். ix.
- ↑ 12. அகம். 235.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - என்றும், உதியஞ்சேரல், தாய்வழி, போர், பெருஞ்சோற்று, சான்றோர், செய்தான், என்பது, இதனை, பாரத, முடிநாகனார், வேந்தர், முன்னோன்