சேர மன்னர் வரலாறு - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
பின்பு, பெருஞ்சேரல் இரும்பொறை, அறம்பிழை யாது பொருது புண்ணுற்று விண்புகுந்த சான்றோர்க்குச் செய்யும் சிறப்பனைத்தும் தானே முன்னின்று அதியமான எழினிக்குச் செய்து, அவற்குப் பின் அரசுக் கட்டில் ஏறுதற்கு உரியானைத் தேர்ந்து அவனைத் தகடூர் நாட்டுக்கு அதியமானாக்கினான். அப் போரால் அழிந்த குடிகளை நிலைநிறுத்தி நாட்டில் நல்லரசும் நல்வாழ்வும் அமையச் செய்து தனது நாடு திரும்பினான்.
வஞ்சி நகரம் அடைந்த இரும்பொறை, தான் சென்றவிடமெல்லாம் தனக்கு வெற்றியே எய்தியது குறித்துத் தங்கள் குடிக்குரிய குல தெய்வமாகிய அயிரை மலையில் உறையும் கொற்றவைக்குப் பெரியதொரு விழாச் செய்தான். யானைக் கோடுகளால் கட்டில் ஒன்று செய்து அதன் மேல் அக் கொற்றவையை எழுந் தருளுவித்தனர். அந்த யானைக் கோடுகளும் சேரமானுடைய ஆணைவழி வராத பகை வேந்தர் யானைகளைப் பற்றி அவை கதறக் கதற அறுத்துக் கொள்ளப்பட்டவை, பிறகு, அக் கொற்றவைக்குப் பலியிடுங்கால், வழிபாடு இயற்றும் மறவர் தம் மார்பிற் புண்ணிலிருந்து ஒழுகும் குருதியைப் பிடித்துத் தெளிப்பர். அதனைக் கண்டிருந்த அரிசில் கிழார் பெருவியப்புற்று, “வேந்தே, போரில் நீ நின் உயிரைப் பொருளாகக் கருதுகின்றாயில்லை . இரவலர் நடுவண் இருந்து கொடை வழங்குவதிலும் நீ குறைபடுவதில்லை. அறிவு ஆண்மைகளிற் பெரியராகிய சான்றோரைப் பேணத் தமராகக் கொள்வதிலும் தலைசிறந்து விளங்குகின்றாய்; இத்தகைய குணஞ்செயல்களால் எல்லாப் புகழும் நின்பாலே எய்தியுள்ளன; இக் கொற்றவை எழுந்தருளியிருக்கும் இந்த அயிரை மலை போல நின் புகழ்கள் கெடாது நிலை பெறுக[18]” என்று வாழ்த்தினார்.
வாழ்ந்து முடிவில் பாணரும் கூத்தரும் பொருநரும் பிறரும் போந்து பெருவளம் நல்கப் பெற்றனர். ஊர் பெற்றவரும், யானை பெற்றவரும், குதிரை தேர் முதலியன பெற்றவரும் பலர். அதனைக் கண்டு மகிழ்ச்சி மீதூர்ந்த அரிசில் கிழார், விறலி யொருத்தியைப் பெருஞ்சேரல் இரும்பொறை பால் ஆற்றுப்படுக்கும் கருத்துடைய பாட்டு ஒன்றைப் பாடினார். அதன்கண், “தாமரையும் நெய்தலும் அரிந்து கொண்டு மகளிர் முல்லை நிலத்திற் புகுந்து கிளிகடி பாட்டைப் பாடும் வளஞ் சிறந்தது சேரமான் நாடு; பல்வகை வளம் நிறைந்த அந் நாட்டு ஊர்களைப் போர்வல்ல ஆடவரே காவல் புரிவர்; பேரூர்களைச் சூழ வில்வீரர் காக்கும் வளவிய காவற் காடுகள் உண்டு; அந் நாட்டில் எங்கும் பரந்து இனம் பெருகி மேயும் ஆடுகளைப் போலக் குதிரை களையும், ஆனிரைகளைப் போல் யானைகளையும் உடைய பெருஞ்சேரல் இரும்பொறையின் குன்று அதோ தோன்றும் குன்றின் பின்னே நிற்பது; அவன்பாற் சென்றால் அதனைப் பெறலாம் [19]“ என்று பாடினர்.
ஒருகால், இரும்பொறை தன் மக்கட்கு அறிவுரை வழங்கினான்; அரசிளஞ் சிறுவர்கள் கல்வியறிவு பெறுவதும் மெய்வலி பெறுவதும் அவர் தம் கோற்கீழ் வாழும் மக்கட்கு நலஞ் செய்தற் பொருட்டு என்றும், அக் கருத்தாலேயே சிறுவர்களைத் தான் பெற்று வளரப்பதாகவும் அறிவுறுத்தினான்; அவன் மக்களுடைய எண்ணமும் சொல்லும் செயலுமாகிய எல்லாம் அக் கருத்தைப் பின் பற்றி நிற்கக் கண்டு அரிசல் கிழார் பெருவியப்புற்றார். பின் பொருகால், உயர்நிலை யுலகம் புகுந்த சான்றோர் இன்புறுதற்கென வேள்வியொன்று செய்தான். வேள்வித் தொழில் வல்ல சான்றோர் பலர் அவ் வேள்விக்கு வந்திருந்தனர். வேள்வியும் மிக்க சிறப்பாக நடந்தேறியது. வேள்வி முடிவில் வந்திருந்த பலர்க்கும் பெரும் பொருள்கள் பரிசில் வழங்கப் பெற்றன. அவ் வேள்விக் காலத்தில், அரிசில் கிழார் உடனிருந்து, பாட்டாலும் உரையாலும் அரசனது புகழ் பெருக்கத்தக்க செயல் வகைகளைச் செய்தார். அதனால் மகிழ்ச்சி மிகுந்து, பெருஞ்சேரல் இரும்பொறை கோயிலாளுடன் புறம்போந்து நின்று, “கோயிலில் உள்ளவெல்லாம் கொள்க” என்று சொன்னான்; அதனால் அரிசில் கிழார்க்கு உண்டான வியப்புக்கு அளவில்லை; அவர் அப்படியே மருண்டு போய் விட்டார்.
சிறிது தெளிவுற்று வேந்தனை நோக்கினார்; “வேந்தே என் மனத்தில் ஒரு குறையுளது; அதனை நிறைவித்தல் வேண்டும்” எனக் குறையிரந்து நின்றார். அவர் கருத்தறியாத வேந்தன், ஒன்பது நூறாயிரம் பொன்னையும் தனது அரசு கட்டிலையும் நல்கினான். அரிசில் கிழார், அப் பொன்னைப் பெற்றுக்கொண்டு, வேந்தனைப் பணிந்து “அரசே, நீயே இக் கட்டில் மேல் இருந்து அரசாளுதல் வேண்டும்; இக் கோயிலும் இதன் கண் உள்ளனவும் யாவும் நீயே ஏற்றுக் கொளல் வேண்டும்; இதுவே யான் நின்பால் இரந்து கேட்டுக் கொள்வது” என்றார் வேந்தனும் அவரது மன மாண்பைப் பாராட்டி மகிழ்ந்தான்.
இஃது இங்ஙனமாக, அவன் செய்த வேள்வியை முன்னின்று நடத்திய சான்றோர் நரைத்து முதிர்ந்த ஒரு வேதியராவர். அவர்க்கும் இரும்பொறை, அரிசில் கிழார்க்குச் செய்தது போன்ற பெருஞ்சிறப்பினைச் செய்தான். தான் எய்தியிருக்கும் முதுமைக் கேற்ப அவர்க்கு மண்பொன் முதலியவற்றில் ஆசை அவியாது பேராசையாய்ப் பெருகி அவர் உள்ளத்திற் குடிகொண்டு இருப்பது தெரிந்தது. “இளமை இறந்த பின்னரும், அதற்குரிய நினையும் செயலும் அவர்பால் தீரா திருப்பது, மக்களொடு துவன்றி அறம் புரியும் சுற்றத்தோடு நிரம்பியுள்ள சான்றோர்க்குச் சால்பாகாது; ஆதலின் நீவிர் துறவு மேற்கொண்டு காடு சென்று தவம் புரிதல் தக்கது” என அறிவுறுத்தி அவரைத் துறவு மேற்கொள்ளச் செய்தான். இவ்வாறு அறம் புரிந்து மேன்மையுற்ற பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழி யாண்டு அரசு வீற்றிருந்தான் எனப் பதிகம் கூறுகிறது
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - இரும்பொறை, அரிசில், பெருஞ்சேரல், கிழார், செய்தான், அவர், சான்றோர், பெற்றவரும், தான், செய்து, பின், கட்டில்