சேர மன்னர் வரலாறு - பல்யானைச் செல்கெழு குட்டுவன்
பேரியாறு தோன்றும் ஏரிக்கு அண்மையில் நிற்கும் மலை முடிக்குப் பண்டை நாளில் அயிரை என்று பெயர் வழங்கிற்று. அதிலிருந்து தோன்றிவரும் அயிரையாறு இப்போது சவரிமலைப் பகுதியில் தோன்றிவரும் பம்பையாற்றோடு கூடிப் பெருந்தேனருவி என்று பெயர் பெற்று அயிரையூர் வழியாக ஓடுகிறது. அயிரையூர் இப்போது அயிரூர் என்று வழங்குகிறது. அயிரை மலையும் இப்போது அயிதைமலை யெனக் கூறப் படுகிறது. இந்த அயிதைமலையே சங்க நூல்கள் குறிக்கும் அயிரை மலையாம் என்று திரு. கே.ஜி. சேஷையவவர்களும்[15]கருதுகின்றார்கள். அதை யாறு பம்பையோடு கலந்து பெருந்தேன் அருவி எனப்படுவதற்கு முன்பு, அதன் கரையில் அயிதையூர் என்றோர் ஊர் இருப்பதும், அது பெருந்தேனருவியாகி மேலைக்கடலை நோக்கி ஒடுங்கால் அதன் கரையில் அயிரூர் என்றோர் ஊரிருப்பதும், பிற்காலத்தே “அயிரூர் சொரூபம்” என்றொரு வேந்தர் குடிக்கிளை இருந்திருப்பதும் மேலே கண்ட முடிபை வற்புறுத்துகின்றன.
பின்பு குட்டுவன், அரசியற் சுற்றத்தாரும் தானைத் தலைவரும் புடைவரத் தன் மனையாளுடன் வஞ்சிமா நகர் வந்து சேர்ந்தான்; இரப்போர் சுற்றமும் புரப்போர் கூட்டமும் அவனைப் பாராட்டி வாழ்த்தின. நெடும்பார தாயனார் அரசன்பால் விடை பெற்றுக் கொண்டு துறவு பூண்டு காடு சென்று சேர்ந்தார். சில ஆண்டுகட்குப் பின்பு, ஒருகால், பாலைக்கோதமனார், “வேந்தே, எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாக் கொள்கை யாலும், சீர் சான்ற வாய்மையுரையாலும், சொல்லும் பொருளும் சோதிடமும் வேதமும் ஆகமுமாகிய இவற்றால் எய்திய புலமையாலும், முனிவர் துணையாதல் வேண்டி எடுத்த வேள்வித் தீயிடை எழுந்த ஆவுதிப் புகையும், விருந்தினரை உண்பிக்குமிடத்து எழும் நெய்யாகிய ஆவுதிப் புகையுமாகிய இரண்டின் நறுமனத்தாலும், வானுலகத் தேவர் விரும்பும் சிறப்பும் செல்வங்களும் நீ பெற்றுள்ளாய்; மேலும், நீ செருப்புமலைக்குரிய பூழியர்கட்குத் தலைவன்; மழவராகிய சான்றோர்க்கு மெய்ம்மறை; அயிரை மலையையுடையவன்; யாண்டு தோறும் பருவம் தப்பாது நன்மழை பெய்வதால் வளம் மிகப்படைத்து நோயில்லாத வாழ்வு திகழ, இயல்பாகவே முல்லை மணம் கமழும் கூந்தலும் மழைக்கண்களும் மூங்கில் போலும் தோள்களுமுடைய நின் மனைவியுடன் பல்லாயிர வெள்ளம் ஆண்டுகள் வாழ்வாயாக[16] என்று வாழ்த்தினார்.
இவ்வாழ்த்துரையைக் கேட்ட குட்டுவன் பாலைக்கோதமனார்க்கு மிக்க பரிசில் நல்கிச் சிறப்பிக்க நினைத்தான். அவன் மனக்குறிப்பைக் கோதமனார் கண்டு கொண்டார். ஆயினும் அவரது உள்ளம் வேறொன்றை நாடிற்று. உடனே குட்டுவன் அவரை நோக்கிச் “சான்றீர், நீர் வேண்டுவதைக் கொண்மின்” என்றான். அவர் “வேந்தே , யான் இதுவரை நின்னோடே யிருந்து நீ தந்த பொருள்களால் செல்வ வாழ்வு பெற்றேன். இம்மை வாழ்வை இனிது கழித்த யான், மறுமையிலும் துறக்க இன்பம் பெற விழைகின்றேன்; அது குறித்து யான் என் பார்ப்பனியுடன் வேள்விகள் ஒரு பத்துச் செய்தல் வேண்டும்; அவ்வேள்விகட்கு வேண்டிய செல்வத்தை உதவுதல் வேண்டும்″ என்று தெரிவித்தார். அவருடைய உள்ளத்தின் உயர்வு கண்டு உவகை மிகுந்து, அவர் வேண்டியவாறே குட்டுவன், வேள்விகட்கு வேண்டும் பலவும் உவந்து அளித்தான். கோதமனாரும் இடையீடின்றி ஒன்பது வேள்விகளை முடித்துப் பத்தாம் வேள்வி நடைபெறுகையில் தன் பார்ப்பனியுடன் மறைந்து விட்டார்.
தன்னோடு துணைவராய் இருந்த நெடும் பாரதாயனார் துறவு பூண்டதும், கோதமனார் வேள்விக் காலத்தில் மறைந்ததும், குட்டுவன் உள்ளத்தில் நன்கு பதிந்து துறக்க வாழ்வில் அவனுக்குப் பெருவேட்கையை உண்டு பண்ணிவிட்டன. அரசியற் செல்வத்திலும், மறம் வீங்கு புகழிலும் அவனுக்கு உவர்ப்புப் பிறந்தன. அதன் மேல் அவனுக்கு மகப்பேறும் இல்லாதிருந்தது. அஃது, அவன் கருத்தை மேன்மேலும் ஊக்கவே, அவன் தானும் துறவு மேற்கொள்ளத் துணிந்து சான்றோர் சிலர் துணை செய்யத் தன் மனைவியுடன் துறவு பூண்டு காடு சென்று சேர்ந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்யானைச் செல்கெழு குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - குட்டுவன், அயிரை, துறவு, யான், அவன், இப்போது