சேர மன்னர் வரலாறு - பல்யானைச் செல்கெழு குட்டுவன்
இக் கோதமனார் பாலையூர் என்னும் ஊரினர்: அவ்வூர் குட்ட நாட்டில் இப்போது பொன்னானி வட்டத்தில் சாவக்காடு என்ற பகுதியில் இனிதே உளது. கோதமனார் பாலையூரில்[2] வேதியர் குடியில் தோன்றி நல்லிசைப் புலமைப் பெற்று விளங்கினார்.
அந் நாளில், குட்டுவன் உம்பற்காட்டைக் கைப்பற்றி, அகப்பாவை நூறிக் கொங்கு நாட்டை வென்று சிறந்து விளங்கியது, அவர்க்கு மிக்க மகிழ்ச்சி தந்தது. அவர் குட்டுவனைக் கண்டு, “வேந்தே, கழி சினம், கழி காமம், கழி கண்ணோட்டம், அச்ச மிகுதி, பொய் மிகுதி, அன்பு மிகவுடைமை, கையிகந்த தண்டம் என்பன நல்லரசர்க்கு ஆகா என விலக்கப்பட்ட குற்றங்களாகும்; இவற்றை முற்றவும் கடிந்து, தன் நாட்டவர், பிறரை நலிவதும் பிறரால் நலிவுறுவதும் இன்றி, பிறர் பொருளை வெஃகாமல், குற்றமில்லாத அறிவு கொண்டு, துணை வரைப் பிரியாமல், நோயும் பசியுமில்லாமல் இனிது வாழவும், கடலும் கானும் வேண்டும் பயன்களை உதவவும் நன்கு அரசு புரிந்த உரவோர் நின் முன்னோர்; நீ அவர் வழி வந்த செம்மல்; கயிறு குறு முகவையை ஆனினம் மொய்க்கும் கொங்கு நாட்டை வென்று கொண்டாய்; ஐயவித்துலாமும் நெடுமதிலும் கடிமிளை யும் ஆழ்கிடங்கும் அரும் பணமும் பொருந்திய அகப்பாவை உழிஞைப் போர் செய்து வென்று கைப்பற்றி நூறினாய்; வருபுனலை அடைப்பவரும், நீர் விளையாடுபவரும், வில்விழாச் செய்பவருமாய்
இன்புற்று வாழும் மக்கள் நிறைந்த மருதவளம் பெற்றுச் செருக்கிய பகைநாட்டவர், நீ சீறியபடியால், வலி அழிந்து ஒடுங்குவது ஒருதலை; அவர் நாடுகள் நண்பகல் போதிலே குறுநரிகள் கூவ, கோட்டான்கள் குழற, பேய்மகள் கூத்தாடுமாறு பாழாவது திண்ணம்[3] என்று குட்டுவனுடைய தொல்வரவும் ஆள்வினைச் சிறப்பும் போர் வென்றியும் பாராட்டிப் பாடினார். அது கேட்டுப் பேருவகை கொண்ட குட்டுவன் அவரைத் தன் அரசியற் சுற்றத்தாருள் ஒருவராகக் கொண்டான்.
குட்டுவனுக்கு அரசியல் ஆசிரியரான நெடும்பார் தாதயனார் முன்னின்று புரோகிதம் செய்ய, பாலைக் கோதமனார் உரிய துணைபுரியப் பெருஞ்சோற்றுவிழா நடைபெற்றது. போர்முரசு எண்டிசையும் எதிரொலிக்க முழங்கிற்று; முரசுக்குக் குருதியூட்டிப் பலிதருவோன் கையில் பிண்டத்தை ஏந்தினான்; அதுகண்டு பேய் மகளிர் கை கொட்டிக் கூத்தாடினர். அக் குருதி கலந்த சோற்றை எறிந்தபோது சிற்றெறும்பும் அவற்றை மொய்த்தற்கு அஞ்சின; அவற்றைக் காக்கையும் பருந்துமே உண்டன. பின்னர், கொடைமுரசு முழங்கிற்று. போர் மறவரும் பரிசிலரும் அம் முரசின் ஓசை கேட்டு வந்து கூடினர். அப்போது இயவர் இனிய இசைவிருந்து நல்க, போர்மறவர்க்குப் பெருஞ்சோறு வழங்கப்பெற்றது.
இவ் விழாவினைச் சிறப்பித்துக் கோதமனார் இனிய பாட்டொன்றைப் பாடினர். அப் பாட்டின்கண் நாட்டின் பல்வகைத் திணை வளங்களையும் எடுத்தோதினார். நெய்தற் பகுதியில் கடற்கரையை ஒட்டிக் கழிகள் உள்ளன; அவற்றில் நெய்தல்கள் மலர்ந்திருக்கும்; கரையோரங்களில் ஞாழல் மரங்கள் நிற்கின்றன; கழியில் மீன் வேட்டம் ஆடிய புள்ளினம் கழிக்கானலில் நிற்கும் புன்னையில் வந்து தங்குகின்றன. கடலலைகள் கரையில் சங்குகளையும் பவளக்கொடிகளையும் கொணர்ந்து ஒதுக்குகின்றன; சங்குகள் ஒலிக்க அவற்றின் முத்துக் களையும் பவளக்கொடிகளையும் நெய்தலில் வாழ்வோர் எடுத்துக்கொள்ளுகின்றனர்; ஒருபால், குறிஞ்சி நிலத்து ஊர்கள் உள்ளன; அங்கே அழகிய கடைத் தெருக்கள் காணப்படுகின்றன ; கடைகளில் காந்தட் கண்ணி சூடிவரும் கொலைவில் வேட்டுவர், தாம் கொணரும் ஆமான் இறைச்சி, யானைக்கோடு ஆகியவற்றைத் தந்து அவற்றின் விலைக்கீடாகக் கள்ளைப் பெறுகின்றனர்; கடைக்காரர் அவற்றைப் பிற நாட்டவர்க்குப் பொன்னுக்கு மாறுதலால், கடைத்தெழு பொன் மிகுந்து பொலிகின்றது. மற்றொருபால் மருத நிலத்தில் காணப்படுகிறது; அங்குள்ள ஊர்களில் மருத மரங்கள் வேரோடு சாய்த்துவரும் புது வெள்ளத்தை மணல் மூடைகளைப் பெய்து அணை கட்டும் மக்கள் மணற்கரைப் பகுதி நீர்ப் பெருக்கால் கரைந்து உருகுவது கண்கள் ஆரவாரித்து அடைக்கின்றனர்; ஒருபால், ஊர்களில் விழாக்கள் நடக்கின்றன; மக்கள் பலர் விழாப்பொலிவு கண்டு தம் சீறூர்க்குச் செல்கின்றனர்; அவ் விழாக் காலத்தில், கரும்பின் அரிகாலில், காலமல்லாக் காலத்துப் பூக்கும் பூக்கள் மலிந்துள்ளன. மற்றொருபால், வரகின் வைக்கோலால் கூரை வேய்ந்த வீடுகள் நிறைந்த புன்செய்க் கொல்லைகள் உள்ளன. அங்கு வாழ்பவர், வரும் விருந்தினர்க்குத் தினைமாவைத் தந்து விருந்தோம்புகின்றனர்; ஒருபால், ஈரமின்மையால் பூக்கள் வாடி உதிர்ந்து நிலமும் பயன்படும் தன்மை திரிந்து மணல் பரந்து பொலிவு இன்றி இருக்கிறது; எங்கும் மணலும் பரல்களும் பரந்து பூழி நிறைந்திருக்கும் இப் பகுதியில், மகளிர் காலில் செருப்பணிந்து திரிகின்றனர். இந் நிலங்களில் வாழும் வேந்தரும் குறுநிலத் தலைவரும், நின் பெருஞ்சோற்று விழாவில் எழும் முரசு முழக்கம் கேட்டு, உள்ளம் துளங்கி உலமருகின்றனர்; வலிய அரண் பெற்றும், மனத் திண்மை இன்மையால், அவர்கட்கு நின் விழாவொலி பேரச்சத்தைத் தருகிறது[4] என்று இவ்வாறு கோதமனார் கூறினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்யானைச் செல்கெழு குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - கோதமனார், மக்கள், ஒருபால், போர், அவர், பகுதியில், வென்று, நின்