சேர மன்னர் வரலாறு - களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
அதுகேட்ட நார்முடிச் சேரல் முறுவலித்து, “சான்றோரே, படைவலியும் துணைவலியும் மெய் வலியும் இழந்த் காலத்து, மனம் அறிவுவழி நில்லாது அலமருதலால், வான்புகழ் பெற்ற மறவரும் நிறையழிந்து பல பேசுவர்; வையா மாலையராகிய பகைவர் வைவதல்லது வேறு செயல்வகை இலராதலின் அதனைப் பொறுத்தல் தானே வலியுடையோர் செயற்லது?” என்றான். வேந்தனது முதுக்குறை நன்மொழியால் காப்பியனார் பெரு மகிழ்ச்சி கொண்டு மேலும் அவனோடு சொல்லாடலுற்றார்.
“வேந்தே, நீ போர்க்குச் செல்லுங்கால் நின் படையது வரவுகண்ட அளவிலேயே பகைவர் பலரும் அஞ்சி ஓடிவிடுகின்றனர்; அத்துணை மென்மை யுடையோர், போர் தொடுப்பதைக் கைவிட்டு நின் அடிபணிந்து அன்பாய் ஒழுகலாமே என்று கருதி அவர் படை நிலைக்குச் சென்று கண்டேன். அவரது படையணி அவர் பெருவலியுடையவர் என்பதை நன்கு காட்டிற்று; வாட்படை மதிலாக, வேற்படை கடிமிளையாக, வில்லும் அம்புமாகிய படை முள்வேலியாக, பிறபடைகள் அகழியாக, முரசுகள் இடியேறாகக் கொண்டு பகைவர் படையணி அமைந்திருந்தது. நின் கடற்பெருந்தானை அதனை நோக்கி வந்தது. படை மறவர் களிறுகளைப் பகைவரது காவல் மரத்திற் பிணித்து நிறுத்தினர்; நீர்த்துறைகள் கலங்கின; வேல் மறவரும் பிறரும் ஒருபால் தங்கினர். இவ்வளவே நின் தானை மறவர் செய்தது; சிறிது போதிற்கெல்லாம் அஞ்சியோடத் தலைப்பட்டது. எனக்கு இஃது ஒரு பெருவியப்பைத் தருகிறது [32]” என்றார்.
நார்முடிச் சேரல், காப்பியனார் கருத்தை யறிந்து, “புலவர் பெருந்தகையே, இதில் வியப்பில்லை ; நிலைமக்களைச் சால உடைய தெனினும் தானைக்குத் தலைமக்களே சிறந்தவர்; தலைமக்கள் இல்லெனின் தானையும் இல்லையாம்” என்றான். “அறிந்தேன், அறிந்தேன்” எனத் தலையசைத்துத் தெளிவுற்ற காப்பியனார், “மாறா மனவலி படைத்த மைந்தரது மாறுநிலை தேயச் செய்யும் போர்வன்மையும், மன்னர் படக் கடக்கும் மாண்பும் உடையவன் நீ; மாவூர்ந்தும், தேர்மீதிருந்தும், களிற்று மிசை இவர்ந்தும், நிலத்தில் நின்றும் நின் தானை மறவர் போர் நிகழ்த்த, நீ நின் தானையைச் சூழ்ந்து காவல் புரிகின்றாய்; அதனால் பகைவர் கண்டு அஞ்சி யோடுகின்றனர் என்பதை அறிந்தேன் [33]” என்று பாடினர்.
சேரமான் வஞ்சிநகர்க்கண் இருக்கையில் அவனுடைய வென்றி பெருமை முதலிய நலங்களை வியந்து, சான்றோர் பலர் அவனைப் பாடிப் பாராட்டினர். நாடோறும் இப் பாராட்டுகள் பெருகி வருவது கண்ட நார்முடிச்சேரல், இப் பாராட்டுரைகளை நயவாதான் போலக் காப்பியனாரோடு சொல்லாடி னான். அக் காலை, அவர், வேந்தனை நோக்கி, “சேரலே, புகழ்தற்குரியாரைப் புகழாமை சான்றோறாருடைய சான்றாண்மைக்கு அழகன்று. மேலும், அவர் செய்யா கூறிக் கிளக்கும் சிறுமையுடையரல்லர்; ஆதலால், நின் போர் நலமே அவர் உரைக்குப் பொருளாகிறது. நீ போர்செய்யும் களம் யானைமரப்பும் தேர்க்கால்களும் சிதறிக் கிடக்கும் காட்சி நல்குகிறது; எருவைச் சேவல்கள் தம் பெடையொடு கூடி நிணந்தின்று மகிழ, ஒருபால் கவந்தங்கள் ஆடா நிற்கும்; வீழ்ந்தோரது குருதி பரந்து போர்க்களம் அந்திவானம் போல் ஒளி செய்கிறது; பேய்கள் எழந்து கூத்தாடுகின்றன; இவ்வாறு போர்க்களம் சிறப்புறுதற் கேதுவாக நீ நின் தானையைப் பாதுகப்பது, உரைப்பார் உரையாய் விளங்கிறது[34]” என்றார். வேந்தன் காப்பியனார் பாட்டைக் கேட்டு ஏனைச் சான்றோர்க்குச் செய்தது போலப் பெருங் கொடையை நல்கி மகிழ்வித்தான்.
பிறிதொருகால், குறுநிலத் தலைவர் சிலர் நார்முடிச் சேரல்பால் பகை கொண்டு போர் கொடுத் தனர் சின்னாட்களாய்ப் பகை பொறாமையால் அவனுடைய மறவர்கள் போர்வேட்கை மிக்கிருந்தனர் மறவர் உடன்வரச் சென்று சேரமான் பகைவர் திரளைச் சவட்டலுற்றான். போர்க் களிறுகளும் வயமாவும் உடல் துணிந்து வீழ்ந்தன; மறவர் பலர் மாண்டொழிந்தனர். போர்க்களம் பனைதடி புனம்போலக் காட்சி நல்கிற்று, பெருகியோடிய குருதிப் பெருக்குப் பிணந்தின்னும் கழுகின் சேவலும் பெடையும் பருந்துமாகியவற்றை அலைத்துக்கொண்டு சென்றது; கூளிக்கூட்டம் நிணம் தின்று கூத்தாடிற்று; வெற்றி மிகக்கொண்ட சேரலைக் காப்பியனார் கண்டு, “வேந்தே, இத்தகைய செருப் பல செய்து சிறக்கும் நின்வளம் வாழ்க[35]” என வாழ்த்தினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நின், பகைவர், அவர், மறவர், காப்பியனார், போர், போர்க்களம், நார்முடிச், கொண்டு