சேர மன்னர் வரலாறு - களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
காப்பியாற்றுக் காப்பியனார், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் நலங்களை அறிந்து அவன் புகழைப் பாடுவதில் பெருவிருப்பம் கொண்டார். பாடுதற் கேற்ற பண்பும் செயலும் உடைய ஆண்மக்களைப் பாடிப் புகழ் நிறுவுவது தவிரப் பாவன்மைக்குப் பயன் வேறு இல்லாமையால், காப்பியனார் சேரரது வஞ்சி நகர்க்குச் சென்று நார்முடிச் சேரலைக் கண்டார். அவனும் அவரது புலமை நலம் கண்டு, அவரைத் தன் திருவோலக்கத்தில் அரசியற் சுற்றுத்துச் சான்றோராக இருக்குமாறு கொண்டான். அவர், அவ்வப்போது அவன் செயல் நலங்களை இனிமையுறப் பாடினார். அவர் பாடியவற்றுள் அந்தாதித் தொடையாக ஒரு பத்துப் பாட்டுக்களைச் சான்றோர் பதிற்றுப்பத்தில் தொகுத்துக் கோத்துள்ளனர். முதற்பாட்டும் இறுதிப் பாட்டும் அந்தாதித் தொடை பெறாமையால், இப் பாட்டுப் பத்தும், முன்பே அந்தாதியாகப் பாடப்பட்டுக் கிடந்த பல பாட்டுகளிலிருந்து எடுத்துக் கோக்கப் பட்டனவாதல் வேண்டும் என்று கருதலாம்.
நார்முடிச் சேரல் இவ்வாறு நல்லரசு புரிந்து வருகையில், பாலைக்காட்டுப் பகுதியில், நாடு காவல் செய்து வந்த நன்னனூரில் ஒரு நிகழ்ச்சியுண்டாயிற்று. நன்னனுக்குப் படைத் துணையாகப் கோசர்கள் பலர் நன்னூரில் வாழ்ந்துவந்தனர். அவ்வூரில், நன்னன், மாமரமொன்றைத் தனக்குக் காவல் மரமாகக் கொண்டு அதனை உயிரினும் சிறப்பாகப் பேணி வந்தான். அம் மரம் அவ் ஊரருகே ஓடும் ஆற்றின் கரையில் இருந்தது. ஒரு நாள் அம் மரத்தின் பசுங்காய் ஒன்று ஆற்று நீரில் வீழ்ந்து தண்ணீரில் மிதந்து கொண்டு சென்றது. ஆங்கொருபால் ஆற்று நீரில் இளம்பெண் ஒருத்தி நீராடிக் கொண்டிருந்தாள். அவளருகே அக் காய் மிதந்து வரவும், அவள் எடுத்து அதனை உண்டுவிட்டாள். அச் செய்தி நன்னுக்குத் தெரிந்தது. உடனே அவன் கழிசினம் கொண்டு அவளைக் கண்ணோட்டம் இன்றிக் கொல்லு மாறு கொலை மறவரைப் பணித்தான்,
அவள் கோசரினத்துத் தலைவருள் ஒருவன் மகளாகும். நன்னனது ஆணை கேட்ட தந்தை அவள் நிறை பொன்னும் என்பத்தொரு களிறும் தருவதாகச் சொல்லி அப் பெண்ணினது கொலைத் தண்டத்தை நீக்கி மன்னிக்குமாறு வேண்டினான். வன்னெஞ்சின னான நன்னன் அவன் வேண்டுகோளை மறுத்துத் தன் கருத்தையே முற்றுவித்தான்[25]. அது கண்டதும் கோசர் களுக்கு நன்னன்பால் வெறுப்பும் பகைமையும் உண்டாயின. அவர்கள் திரண்டெழுந்து நன்னனைத் தாக்கலுற்றனர். அவனது மா மரத்தையும் வெட்டி வீழ்த்தினர். நன்னன் தான் ஆராயாது செய்து தவற்றுக்கு வருந்தினான்; தன் படைத் துணைவர்களான கோசர், தன்பால் பகைத்தொழுது தெரியின், சேர மன்னரும் பிறரும் தன்னை வேரொடு தொலைத்தற்கு நாடுவர் என்று அஞ்சிப் புன்றுறை நாட்டிற்கு ஓடிவிட்டான்[26]. ஈரோட்டுக்கு அண்மையிலுள்ள பெருந்துறையென இன்றும் வழங்கும் மூதூரில் தங்கினான். அவன் பக்கல் நின்று பொருத்த வீரர் பலர் மாண்டனர். சிலர் அவனோடே சென்றனர், பெருந்துறையில் தங்கிய நன்னன், மா மரத்தைக் காவல் மரமாகக் கொள்வதை விடுத்து வாகை மரமொன்றைக் காவல் மரமாகக் கொண்டு அதனைப் பாதுகாத்து வந்தான். அதனருகே தோன்றிய ஊர் வாகைப்புத்தூர் என வழங்குவதாயிற்று. விசய மங்கலத்துக்கும் பெருந்துறைக்கும் இடையே வாகைப் புத்தூர் என்று ஓர் ஊர் இருந்ததாக அப் பகுதியிலுள்ள இடைக்காலக் கல்வெட்டொன்று[27] கூறுகிறது.
நன்னன் கோசரது நட்பிழந்து வலி குன்றிய செய்தியை நார்முடிச் சேரலுக்கு ஒற்றர் போந்து தெரிவித்தனர். உடனே அவன் பெரும்படை யொன்றைத் திரட்டிக்கொண்டு சென்று, பூழிநாட்டின் வடக்கிலும் பொறை நாட்டிலும் நன்னன் கவர்ந்து கொண்டிருந்த சேரநாட்டுப் பகுதிகளை வென்று தனக்கு உரியவாக்கிக் கொண்டான். அவன் படைப்பெருமை கண்டு எதிர் நிற்க மாட்டாத கோசரும் பிறரும் குறும்பு நாட்டுப் புன்றுறை நாட்டில் தங்கியிருந்த நன்னன்பாற் சென்று சேர்ந்தனர்.
நார்முடிச்சேரல் நன்னன் தங்கியிருந்த பகுதியைப் பண்டுபோல் சேரர்க்கு உரியதாக்கிக் கொங்கு வஞ்சியாகிய தாராபுரத்தை அரண்களால் வலியுறுவித்து, வடக்கில் வாகைப் பெருந்துறைப் பகுதியில் இருந்த நன்னனை எதிர்த்தான். நன்னன் படையும் சேரமான் படையும் வாகைப் பெருந்துறையில் கடும் போர் புரிந்தன. அப் போரில் நன்னன் படுதோல்வியுற்று ஓடினான். அவனது காவல் மரமான வாகையும் தடித்து வீழ்த்தப்பட்டது. சென்ற இடம் தெரியாவாறு நன்னன் மறையவே இப் போரால் நன்னன் பொருதழிந்த இடத்தைக் கடம்பின் பெருவாயில் என்று பதிற்றுப் பத்தின் நான்காம் பதிகம் கூறுகிறது. ஆனால், கல்லாடனார் என்னும் சான்றோர், “குடா அது, இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொலம்பூண் நன்னந் பொருதுகள் தொழிய, வலம்படு கொற்றம் தந்த வாய் வாள், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், இழந்த நாடு தந்தன்ன பெருவளம் பெரிதும் பெறினும்[28]” என்று குறிக்கின்றார்.
- ↑ 25. குறுந். 292. பெண் கொலைசெய்யப்பட்ட இடத்தைப் பெண்கொன்றான்பாறை என்பர். மலையாளர் அதனைப் பெங்கணாம்பறா எனக் கூறுகின்றனர்.
- ↑ 26. குறுந். 73.
- ↑ 27. Ep. A.R. No. 569 of 1905.
- ↑ 28. அகம். 199.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நன்னன், அவன், காவல், வாகைப், கொண்டு, நார்முடிச், சென்று, அவள், மரமாகக்