சேர மன்னர் வரலாறு - களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
பொள்ளாச்சி பாலைக்காடு பகுதிகளில் வாழ்ந்த நன்னர் வழியில், நன்னனூரை (ஆனைமலையை)த் தலைநகராகக் கொண்டு ஒரு நன்னன் வாழ்ந்து வந்தான். அவன் கோசரது படைத்துணையால் வலிமிகுந்து தனி அரசாக முயன்றான். அக்காலத்தே குட்ட நாட்டை ஆண்டுவந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவன், துறவுள்ளம் பூண்டு தவவேள்வி செய்வதில் ஈடுபட்டிருந்தது அவற்குப் பெரிய வாய்ப்பினை அளித்தது. குட்ட நாட்டின் வட பகுதியிலும், கிழக்கிலுள்ள பூழி நாட்டிலும் வாழ்ந்த தலைவர்கள், சேரமான், கருத்துக்கு மாறாகத் தாத்தாமும் தனியரசாக முயன்றனர். வலிமிக்கோர் எளிய தலைவர்களை வென்று தமக்கு அடிப்பட்டொழுகச் செய்தனர். சிலர் நன்னனது துணையை நாடினர். அது கண்ட நன்னன், தன் கருத்து முற்றுதற்கேற்ற செவ்வி தோன்றியது கண்டு பெரிய தானையோடு பாலைக்காட்டு வழியாகச் சேர நாட்டிற் புகுந்து பூழிநாட்டையும் அதனை அடுத்துள்ள பாலைக்காட்டுக் கணவாய்ப் பகுதியையும் தனக்குரிய தாக்கிக் கொண்டான். அவன் படையினது மாணாச் செயல்களால், அப்பகுதிகளில் வாழ்ந்த உயர்குடி மக்கள் பலர் நிலைகலங்கி வேறு நாடுகட்குச் சென்று வருந்தினர். வாழ்ந்த மக்கள் சிலர் தாழ்ந்து மெலிந்தனர்; நாடெங்கும் துன்பமே நிலவுவதாயிற்று.
இந்நிலையில் அறத்துறையில் நின்று குட்டுவன் துறக்கமடைந்தான். அரசு கட்டிலுக்குரிய பதுமன்தேவி மகனான நார்முடிச் சேரல் குன்ற நாட்டினின்று பூழிநாடு கடந்து குட்டநாடு புகுந்து முடிசூடிக் கொள்ள வேண்டியவனானான். பூழிநாட்டுத் தலைவர் சிலர் நன்னன் பக்கல் இருந்தமையின், அவன் குன்ற நாட்டு வண்டரும் முதியரும் சேரரும் படைத்துணை செய்யப் பெரியதொரு தானையுடன் பூழி நாட்டுட் புகுந்து எதிர்த்தவரை வென்று நன்னனையும் வெருட்டி யோட்டி வென்றி மேம்பட்டான். பூழிநாடும் பண்டு போல் சேரர்க்குரியதாயிற்று.
பூழிநாட்டின்கண் இருந்து நன்னர்க்குத் துணையாய்க் குறும்பு செய்தவர்களை அடக்கி, நன் மக்கள்
துணை செய்ய நாட்டில் நல்வாழ்வு நிகழச் செய்தான். பகைவர்க்கு அஞ்சி ஒடுங்கியிருந்த சான்றோர் ஒன்று. கூடிக் களங்காய்க் கண்ணியும் பனை நாரால் முடியும் செய்து, பதுமன்தேவியின் மகனைச் சேரமான் என முடிசூட்டிச் சிறப்பித்தனர்; அன்று முதல் அவன் சேரமான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என வழங்கப்படுவானாயினான். அவனது வென்றி விளக்கத்தால் ஆங்காங்கு இருந்து குறும்பு செய்த பகையிருள் புலர்ந்து கெட்டது. குட்ட நாட்டுத் தலைவரும் பிறரும் நார்முடிச் சேரலின் அடி வணங்கி ஆணைவழி நிற்கும் அமைதியுடையராயினர். சேரமான் நார்முடிச் சேரல் குட்டநாடு அடைந்து வஞ்சிநகர்க்கண் இருந்து அரசு புரிந்து வந்தான்.
நார்முடிச் சேரல், மலைபோல் உயர்ந்து அகன்ற மார்பும், கணையமரம் போலப் பருத்த தோளும், வண்டன்[20] என்பானைப் போன்ற புகழ்க் குணமும் உடையவன். தழைத்த கூந்தலும், ஒள்ளிய நுதலும், அழகுறச் சுழிந்த உந்தியும், அறஞ்சான்ற கற்பும், இழைக்கு விளக்கம் தரும் இயற்கை யழகும் உடையளாகிய அவன் மனைவி, அருந்ததியாகிய செம்மீனை ஒத்த கற்புநலம்
சிறந்து விளங்கினாள். சேரமானுடைய சால்பும் செம்மையும் நாற்றிசையினும் புகழ் பரப்பி விளங்கின. அரசியற் கிளைஞர்க்கு வேண்டுவனவற்றைப் பெருக நல்கியும், குன்றாத வளம் அவற்கு உண்டாயிற்று. தன்னாட்டு அரசியல் நெருக்கடியால் வளமும் பாதுகாப்புமின்றித் துளங்கிய மக்களைப் பண்டுபோல் வளமுற வாழச் செய்தான். அதனால் அவனது வென்றியைச் சான்றோர், “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி[21]” எனப் பாராட்டிப் பாடினர்.
பகைவரை அடக்கி ஒடுக்குவதிலும், சான்றோரை நிலை நிறுத்தி நாட்டில் நல்லொழுக்கம் நிலவச் செய்வதே வேந்தர்க்குப் பெருவென்றி என்பது அவன் கருத்தாயிற்று. தான் வென்ற பகுதியில், காவலர் நாட்டைக் கைவிட்டுத் தம்மைக் காப்பதே கருதி ஓடிவிட்டதனால், கொழு கொம்பில்லாக் கொடி போல் அலமந்த நாட்டுமக்கட்குத் தன் பொறைக்குணத்தால் ஆதரவு செய்தான். பகைவர் கைப்பட்டு வருந்திய மறவர்களைக் கூட்டிவந்து, வேண்டும் சலுகை தந்து, அவர் நெஞ்சில் தன்பால் மெய்யன்பு நிலவுமாறு செய்தான். அச் செயலின்கண் அவன் ஒருபாலும் கோடாது செய்த செம்மை, அவர்களை அவனது தாள் நிழற்கண் இருத்தற்கே விழையச் செய்தது.
பகைத்தோர் புலத்தை வென்று அவ்விடத்தே தங்கி, அவர்கள் வைதும் வருந்தியும் வழங்கிய சுடுசொற்களையும் செவியேற்றுச் சினங்கொள்ளாது பொறுத்து, அவரது நெஞ்சினைத் தன்பால் அன்பு கொள்விப்பதில் நார்முடிச் சேரல் நலஞ் சிறந்து விளங்கினான்[22]. தன் செயலால் பகைவர்க்குத் துன்பமும் நகைவராகிய பாணர் கூத்தர் முதலிய பரிசிலர்க்கும் நண்பர்களுக்கும் இன்பமும் உண்டாவது காணுங்கால், உள்ளத்தே மகிழ்ச்சி யெழுமாயின், அதனையும் நார்முடிச் சேரல் தன் அறிவாலும் குணத்தாலும் அடக்கித் தனக்குரிய செம்மை பிறழாமல் நிற்கும் திண்மையால் சான்றோர் பரவும் சால்பு மிகுந்தான். இனியவை பெற்றவிடத்து அவற்றைத் தனித்திருந்து நுகர்வதில் மக்களுயிர்க்கு விருப்புண்டாவது இயல்பு. அவ் விருப்பத்தை அடக்கும் உரனும், பிறர்க்கு வழங்குதற்கென்றே பொருளீட்டம் அமைவது என்ற எண்ணமும், என்றும் பிறர்க்கென வாழ்வதே வாழ்வாம் என்னும் பெருந்தகைமையும் நார் முடிச் சேரலின் நன்மாண்பாக விளங்கின.
அக் காலத்தில், குட்ட நாட்டின் ஒரு பகுதியாகிய இருவலி நாட்டில் உள்ள காப்பியாறு என்ற வூரில், காப்பியன் என்றொரு தமிழ்ச் சான்றோர் வாழ்ந்தார். இப்போது அக் காப்பியாறு மலையாள நாட்டைச் சேர்ந்த கோட்டயம் வட்டத்தில் உள்ளது. கரப்பியன் என்ற பெயருடையார் பலர் நம் நாட்டில் பண்டும் இடைக் காலத்தும் இருந்திருக்கின்றனர். பண்டை நாளில் காப்பியர் பலர் இருந்த திறத்தைத் தொல்காப்பியனார், பல்காப்பியனார் முதலிய சான்றோரது பெயர் எடுத்துக் காட்டுகிறது. இடைக்காலத்தில் இக் காப்பியர் வழி வந்தோர், தம்மைக் காப்பியக் குடியினர் என்பது வழக்கம். காப்பியக் குடியென்று ஓர் ஊரும் சோழநாட்டுத் தஞ்சை மாவட்டத்தில் குடியென்று ஓர் ஊரும் சோழநாட்டுத் தஞ்சை மாவட்டத்தில் உண்டு. காப்பியந் சேந்தன்[23] என்றும், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள்[24] என்றும் சிலர் இடைக்காலத்தே இருந்தமை கல்வெட்டுகளால் தெரிகிறது.
- ↑ 20. வண்டன் என்பவன் பீர்மேடு என்ற பகுதியில் பண்டை நாளில் சிறந்த புகழ்பெற்று வாழ்ந்தவன். வண்டன்மேடு, வண்டப் பேரியாறு என்ற பெயருடன் அங்கே உள்ள பகுதிகள் இன்றும் அவனை நினைப்பிக்கின்றன. இந்த வண்டன் பெயரால் அமைந்த வண்டனூர் ஏர் நாடு வட்டத்தில் மேலைக் கடற்கரைக்குக் கிழக்கே 30 மைல் அளவில் உளது; அங்கே ஏழு கற்குகைகள் இருக்கின்றன. அவற்றுட் காணப்படும் சிதைந்த எழுத்துகள் அவ்வூரை வண்டனூர் என்று கூறுகின்றன; அப் பகுதியில் வாழ்பவர் அதனை வண்டூர் எனச் சிதைத்து வழங்குகின்றனர்.
- ↑ 21. பதிற். 32:7.
- ↑ 22. பதிற். 32.
- ↑ 23. S.I.I. Vol. viii.No. 196.
- ↑ 24. S.I.I.Vol viii No. 660
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நார்முடிச், அவன், சேரல், செய்தான், வாழ்ந்த, நாட்டில், சான்றோர், சிலர், குட்ட, சேரமான், என்றும், அவனது, இருந்து, பலர், நன்னன், வென்று, புகுந்து, மக்கள், வென்றி