சேர மன்னர் வரலாறு - களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
இக்கோசர்களைப் பற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய அறிஞர்கள், பிரமதேவன் வழிவந்த குச முனிவன் மக்களான குசாம்பன், குசநாபன், ஆதூர்த்தன், வசு என்ற நால்வரும் கௌசாம்பி முதலிய நான்கு பெரு நகரங்களை நிறுவி வாழ்ந்தனர் என்றும், அவர்களின் வழிவந்தவர் இக்கோசர் என்றும், நான்கு ஊர்களை நிலைகொண்டு வாழ்ந்தமை பற்றி இவர்கள் நாலூர்க் கோசர்[14]என்று கூறப்பெற்றனர் என்றும், கோசாம்பி நாட்டைப் பின்னர் “வத்ஸன்'’ என்ற வேந்தன் ஆண்டனன் என்றும், “வத்ஸ் கோசர்” என்பது இளங்கோசர் எனத் தமிழர்களால் மொழிபெயர்க்கப் பெற்றது என்றும்[15] கூறுகின்றனர். ஆனால் உண்மை வேறாகத் தோன்றுகிறது. பிறநாட்டு ஊர்ப்பெயர்களையும் மக்கட் பெயர்களையும் பிறவற்றையும் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு வழங்கும் வழக்கம் வடமொழியாளரிடத்தன்றிப் பிற எந்நாட்டு எம் மக்களிடத்தும் காணப்படுவதில்லை. பிறரெல்லாம் பிறநாட்டு ஊர் மக்கட் பெயர்களைத் தங்கள் மொழி நடைக்கேற்பத் திரித்து வழங்குவர். அவர்களைப் போலவே தமிழர், மேனாட்டு அயோனியரை யவனரென்றும், பர்ஷியரைப் பாரசிகரென்றும், இங்கிலாந்து மக்களை ஆங்கிலரென்றும், பிற மக்கட் பெயர் இடப் பெயர்களை, பேதுரு, யாக்கோபு, ஏசு, சீதக்காதி, பெத்தலை, மதினா என்றும் திரித்து வழங்குவர். இவ்வாறு திரித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் இலக்கணமே விதித்திருக்கிறது[16]. இதனால் மொழிபெயர்த்து வழங்கும் வழக்காறு தமிழ் மரபு அன்று என்பது இனிது விளங்குதலால், இளங்கோசர் என்பது “வத்ஸகோசர்” என்ற வடமொழியின் மொழிபெயர்ப்பு என்றால் பொருந்தாது. கோசர்கள், துளுநாட்டிலும், பாண்டி நாட்டிலும், கொங்கு நாட்டிலும் இருந்தவர்ரென்பது தோன்றப் பல குறிப்புகளை வழங்கும் சங்க நூல்கள், இவர்களை வட புலத்துக் கோசாம்பி நாட்டினரென்றோ, கோசல நாட்டினரென்றோ தோன்ற ஒரு சிறு குறிப்பும் குறிக்கவில்லை. இனி, வத்ஸன் ஆண்ட நாடு வத்த நாடு என்றும், வத்ஸர் தலைவனை வத்தவர் பெருமகன் என்றும் வழங்குவது தமிழ் மரபு. வத்ஸனை இளையன் என்றோ, வத்ஸ நாட்டினை இளநாடு என்றோ மொழி பெயர்த்தது கிடையாது. ஆகவே இளங்கோசரென்பது வத்ஸகோசர் என்பதன் மொழிபெயர்ப்பு எனக் கூறுவது உண்மை அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. மேலும், தமிழகத்து மக்கள் வகையினருள் கோசரென்பார் ஒருவகை இனத்தவர் என்றற்கும் இடமில்லை.
இனி, இக்கோசர், வடவருமல்லர், தமிழருமல்லர் எனின், வேறு நாடுகளிலிருந்து கடல் கடந்து போந்து குடியேறியவர் என்பது பெறப்படும். வடநாட்டினின்றும் புதியராய்ப் போந்த பிறரை “வம்ப வடுகர்” என்றும், “வம்ப மோரியர்” என்றும் சான்றோர் கூறியது போல், இவர்களை “வம்பக் கோசர்” என்று கூறாமையால் இவர்கள் பன்னெடு நாட்களுக்கு முன்பே தமிழகத்திற் குடிபுகுந்தவர் என்பது தெளிவாம். சங்க காலத்தேயே மேலைக் கடற்கரைப் பகுதியில், யவனர் பலர் குடியேறி இருந்தனர் என்பது வரலாறு கூறும் செய்தியாகும். அவர்கட்குப்பின் இடைக்காலத்தே சோனகரும். பின்னர் ஐரோப்பியரும் வந்து சேர்ந்தனர். இவ்வாறு வந்தோருள், பாபிலோனிய நாட்டினின்றும் போந்து தென்னாட்டிற் குடியேறியவர் இக்கோசர்கள் என்று அறிகின்றோம்.
தைகிரீஸ் (Tigris) ஆற்றுக்குக் கிழக்கில் சகராசு மலைப் பகுதியில் (Zagros Mountains) வாழ்ந்த பழங்குடி மக்கட்குக் கோசர் (Kossears) என்பது பெயர். வில்வேட்டம் புரிவதே அவரது தொழில். பின்னர் அவர்கள், மலையடியில் வாழ்ந்த ஈரானியர் இனத்தைச் சேர்ந்த ஆலநாட்டுக் கிருதர் (Kurds or kruds) அனுசர் (Anshar) முதலியோருடன் கலந்து கொண்டனர். ஆயினும், அவர்கள் அனைவரையும் கிரேக்க யவனர்கள், கிசியர் (Kissians) என்றும், அவர்கள் நாட்டைக் கிசியா என்றும், அவர்களது தலைநகரைச் சூசா (Susa) என்றும் வழங்கினர்[17]. சூசா என்பது அவர்கள் மொழியில் நான்கு ஊர்கள் என்றும் நான்கு மொழிகள், என்றும் பொருள்படுமாம்.
இறுதியில், இக்கோசர்கள் (கிசியர்), மேலைக் கடற்கரையில் வந்து தங்கிய யவனரோடு உடன் போந்து துளுநாட்டுக் கடற்கரைப் பகுதியில் நிற்கும் மலை நாட்டில் தங்கி வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த நாட்டிற் போல துளு நாட்டிலும் கால் நிலையும் மலைவளமும் பொருந்த இருந்தமையால், உடனே போந்த யவனர்கள் அவரின் நீங்கித் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய போதும், இக்கோசர்கள் திரும்பச் செல்லாமல் துளு நாட்டையே தமக்கு வாழிடமாகக் கொண்டனர். ஆயினும், இயல்பாகவே, அவர்கள், தங்கள் நாட்டில் நாடோடிகளாய் வாழ்ந்ததனால், அதே முறையில் துளுநாட்டில் தங்கிய போதும், தங்கட்கெனத் தனி நாடு ஒன்றை வரைந்து கொள்ளாது, நாட்டு வேந்தர்கட்கு விற்படை மறவராய் வாழ்ந்து வருவாராயினர், கொண்கான நாட்டு வேளிர் தலைவர்களும் பாயல் மலையில் வாழ்ந்த பிட்டன் முதலிய தலைவர்களும் இக் கோசர்களைத் தமக்குப் படை மறவராகக் கொண்டிருந்தனர். நன்னன் கிளையினர், கொங்கு நாட்டிற் படர்ந்தபோது அவர்களோடே இக்கோசர்களும் சென்று தங்கினர். எங்குச் சென்றாலும், அங்கிருந்த வேந்தர்கட்குப் படை மறவராய் நின்று பணி செய்வதே, இவர்கள் தமக்கு உரிமைத் தொழிலாக மேற்கொண்டனர். முதுமையினும் இளமைப் பண்பு வாடாத உள்ளமும் சொன்ன சொல் பெயராத வாய்மையும் சிறப்பாகவுடையராதலால், இக் கோசரைச் சான்றோர், “ஒன்று மொழிக் கோசர்[18]“ என்று விதந்து கூறுவர். இக்கோசருட் சிலர், “இளங்கோசர்” “இளம்பல் கோசர்[19]” என்று கூறப்படுவர். இதற்குக் காரணம் உண்டு. முன்வந்தோரை மூத்தோர் என்றும், பின் வந்தோரை இளையர் என்றும் குறிப்பது தமிழ் வழக்கு. அதனால், பின் வந்த கோசர் “இளங்கோசர்” எனப்பட்டனர். அவரும் பலர் என்பது விளங்க “இளம்பல் கோசர்” “பல்லிளங் கோசர்” எனச் சான்றோர் குறித்துள்ளனர்.
- ↑ 14. குறுந். 15.
- ↑ 15. திரு. இராகவய்யங்கார். கோசர். பக். 47-8.
- ↑ 16. தொல். சொல். எச்ச.5.
- ↑ 17. Historian’s History of the World. P. 341.
- ↑ 18. அகம். 196.
- ↑ 19. புறம் 169.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - History of Chera - சேர மன்னர் வரலாறு - என்றும், என்பது, கோசர், நான்கு, வாழ்ந்த, தமிழ், தங்கள், கோசர்”, சான்றோர், பகுதியில், இவர்கள், போந்து, இக்கோசர்கள், நாடு, வழங்கும், பின்னர், நாட்டிலும், மக்கட்