சேர மன்னர் வரலாறு - களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
வேள்புலத் தலைவனான நன்னன், பெருஞ்சோற்றுதியன் முதலிய சேர மன்னர்களால் நன்னன் உதியன் என்ற சிறப்புப் பெயர் நல்கப் பெற்றுச் சிறந்து விளங்கினான். அவன் அரசியல் நுட்பமும் புலவர் பாடும் புகழும் படைத்தவன். அதனால் அவன்பால் வேளிரும் கங்கரும் கட்டியரும் பிற குறுநிலத் தலைவரும் நட்புற்றிருந்தனர். நன்னனுடைய மெய்ம்மைப் பண்பும் காவல் மாண்பும் நோக்கி, வேள்புல வேந்தர் தம்முடைய பெருநிதியை அவனுடைய பாழிநகர்க்கண்[2] வைத்திருந்தனர். பாழிநகர் இப்போது வட கன்னடம் மாவட்டத்தில் ஹோனவாறென்னும் பகுதியில் பாட்கல் (பாழிக்கல்) என்ற பெயருடன் இருக்கிறது. நன்னனது துளுநாட்டுத் தோகைக்கா[3] என்னும் ஊர் இப்போது ஜோக் (Joag) என்ற பெயருடன் ஒரு சிற்றூராக இருக்கிறது. இவை முன்பும் காட்டப்பட்டுள்ளன.
நன்னன் வழியினர், நன்னன் வேண்மான்[4], நன்னன் ஆஅய்[5], நன்னன் சேய்[6]”, நன்னன் ஏற்றை[7], என்று சான்றோர்களால் குறிக்கப்பெறுகின்றனர். இவருள் நன்னன் வேண்மான் என்பான் வியலூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு நாடுகாவல் புரிந்தான். வியலூர் இப்போது துளு நாட்டில் பெயிலூர் (Bailur) என வழங்குகிறது; இவ்வியலூர் வயலூரெனவும் வழங்கும்[8]. நன்னன் ஆஅய் , பிரம்பு என்னும் ஊரைத் தலைமையாகக் கொண்டு நாடுகாவல் செய்தான். நன்னன் சேய் திருவண்ணாமலைக்கு மேற்கிலுள்ள செங்கைமா என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்துள்ள நாட்டை ஆண்டுவந்தான். நன்னன் ஏற்றை பொள்ளாச்சிக்கு அண்மையிலுள்ள ஆனைமலைப் பகுதியில் இருந்து பாலைக்காட்டுப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். அப் பகுதியில் நன்னன்முக்கு[9] நன்னன்பாறை[10] நன்னனேற்றை[11] என்ற பெயர் தாங்கிய பலவூர்கள் இருப்பது போதிய சான்றாகும். இவ்வாறு நன்னன் என்ற பெயர் பூண்ட தலைவர்கள் பலர் மேலைக் கடற்கரையிலும் கொங்கு நாட்டிலும் பரவி வாழ்ந்து வந்தமை நன்கு தெளியப்படும்.
இந் நன்னருள் முதல்வனான நன்னன், கொண்கான நாட்டில் ஏழில்மலைப் பகுதியைத் தனக்கு உரித்தாகக் கொண்டு வாழ்ந்தான். அதன் வடபகுதியான துளுநாடும் அவற்கே உரியதாயிருந்தது. அந்நாட்டில் கோசர் என்னும் மக்கள் வாழ்ந்தனர். “மெய்ம்மலி பெரும்பூண் செம்மற் கோசர்........... தோகைக்காவின் துளுநாடு[12]” என்று சான்றோர் கூறுவது காண்க. துளு நாட்டுள்ளும் மேலைக் கடற்ரையைச் சார்ந்த நெய்தற் பகுதியிலே அவர்கள் வாழ்ந்தமை தோன்ற, “பல்வேற் கோசர் இளங்கள் கமழும் நெய்தல் செறுவின் வளங்கெழு நன்னாடு[13]” என்று கல்லாடனார் சிறப்பித்துரைக்கின்றார்.
இனி, நன்னன் வேள்புலத்து வேளிர் தலைவனாதலால், அவன் ஆட்சியின் கீழிருந்த கோசரை வேளிற் என்றற்கில்லை. அவர்களை வேளிரென யாண்டும் சான்றோர் குறித்திலர், மற்று, அந்நாளில் கொங்கு நாட்டில் வாழ்ந்த அதியர், மழவர் என்பாரைப் போல இக்கோசரும் ஓர் இனத்தவராக வாழ்ந்தவர் எனக் கோடல் சீரிதாம். ஆனால், அதியரும் மழவரும் ஒரு பகுதியில் நிலைபெறத் தங்கி, நாடு வகுத்து, அரசு நிலை கண்டு, வாழ்ந்தாற்போல இக்கோசர் எப்பகுதியிலும் நிலைபேறு கொண்டிலர். துளு நாடு, கொங்கு நாடு, பாண்டி நாடு என்ற இந்நாடுகளில்தான் இவர்கள் பெரும்பாலும் இருந்திருக்கின்றனர். சேர நாட்டிற்குத் தெற்கிலுள்ள தென்பாண்டிநாட்டு வாட்டாற்றுப் பகுதியில் எழினியாதன் காலத்தில் இக்கோசர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இவ்வாட்டாறு, தஞ்சை மாவட்டத்துப் பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வாட்டாத்திக் கோட்டைப் பகுதியாயின், கோசர்கள் பாண்டி நாட்டின் வடபகுதியில் சோழ நாட்டை அடுத்து வாழ்ந்தனர் எனக் கொள்ளலாம். கொல்லிமலைக்குரிய வேளிரது ஆணைவழி நின்றொழுகிய மழவர் போல, கொண்கான நாட்டு நன்னர் வழிநின்று அவர் தங்கிய இடங்களில் இக்கோசர் வாழ்ந்திருக்கின்றனர். பாண்டி வேந்தரிடத்தும் இக்கோசர்கள் மறப்படை மைந்தர்களாகவே இருந்துள்ளனர். ஏனைச் சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் இக்கோசரது இருப்புச் சான்றோர்களால் குறிக்கப்படவில்லை.
- ↑ 2. அகம். 258.
- ↑ 3. அகம் 15.
- ↑ 4. ஷை 97.
- ↑ 5. ஷை 366.
- ↑ 6. மலைபடுகடாம் 87.
- ↑ 7. அகம் 44.
- ↑ 8. பதிற் ii பதி.
- ↑ 9. மலையாள மாவட்டத்துப் பொன்னானி தாலூகா.
- ↑ 10. ஷை ஏர்நாடு வட்டம்.
- ↑ 11. T.A.S. Vol. iii பக். 8, 10. 20.
- ↑ 12. அகம் 15.
- ↑ 13. ஷை 113.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நன்னன், என்னும், பகுதியில், நாடு, கொண்டு, கோசர், பெயர், பாண்டி, நாட்டிலும், கொங்கு, இப்போது, துளு, நாட்டில், ஊரைத்