சேர மன்னர் வரலாறு - முடிப்புரை
நும் மகளைக் கொண்டு சென்றவனை வன்கணாளன் என்று சொல்லுகின்றீர்கள்; ஆகவே, வழியில் உண்டாகும் ஏதங்களை அவன் தனது வன்கண்மையால் போக்கி அவளை மகிழ்விப்ப னன்றோ? என்று இதனடியாகக் கேட்போர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும் அதனையும் அவள் எண்ணியே, “வழியில் ஆறலைக் கள்வராலும் விலங்குகளாலும் ஒரு தீங்கும் உண்டாகாது என்பதை அறிவேன்; பகை போக்குவதில் அவனது வன்கண்மை ஒப்புயர்வற்றது; அவள் செல்லும் பாலை நிலத்தின் கொடுமைதான் என் நெஞ்சை நீராய் உருக்குகின்றது” என்பாளாய்.
“தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின் பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரிப் பைதறு சிமையப் பயம் நீங்கு ஆரிடை” |
என்று உடல் வியர்த்து வருந்துகிறாள். “தெறுக திர் உலைஇய வேனில்” என்றதனால், வெயில் வெம்மையும், ‘'உறுவளி ஒலிகழைக் கண் உறுப்பு தீண்டலின் பொறி பிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரி'’ என்றதனால், மூங்கில்கள் காற்றால் ஒன்றோடொன்று உராய்வதால் எழுகின்ற தீயின் தீமையும், “பைதறு சிமையப் பயம் நீங்கு ஆரிடை'’ என்றதனால், வழியின் செல்வருமையும் கூறுகின்றாள்.
இந் நினைவுகளால் அவள் உள்ளத்தில் தன் மகள் சென்ற வழியின் வெம்மையும் அருமையும் தோன்றவே அவற்றைப் பொறுக்கலாகாத மகளது மென்மையும் உடன் தோன்றுவதாயிற்று. அதனால், உளம் புழுங்கி, இவ் வழிகள் அவளுடைய “நல்லடிக்கு அமைந்தன் வல்ல; மெல்லியல்; வல்லுநள் கொல்லோ ?'’ என்று சொல்லிக் கதறிக் கண்ணீர் சொரிகின்றாள். அதனை, தன் நெஞ்சில் தோன்றிய முறையிலேயே, அவள்,
“ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி மீனோடு பொலிந்த வானின் தோன்றித் தேம்பாய்ந்து ஆர்க்கும் தெரியிணர்க் கோங்கின் காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர் கைவிடு சுடரின் தோன்றும் மைபடு மாமலை விலங்கிய சுரனே” |
என்று சொல்லுகிறாள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த செவிலியோ மகளது காதலொழுக்கத்தை அறிந்தவள். “தெரியிணர்க் கோங்கின், காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர், கைவிடு சுடரின் தோன்றும்’ என்று அவன் கூறியதையே எடுத்துச் சொல்லி, காற்று வீச இணர்களிலிருந்து கழன்று வீழும் புதுப் பூ கை விளக்குச் சுடர்வது போல ஒளிவிடும் என்றாயன்றோ! கோங்கு போன்ற நின்பால் தோன்றி முதுக்குறைவு முற்றிய நின் மகள் காதற்செவ்வி அலைத்தலால் தனது பிறந்த இல்லினின்றும் நீங்கித் தன் காதலுனுடன் சென்றது, யாவரும் புகழ்தற்குரிய சிறந்த கற்பொழுக்கமாயிற்று என்று இயம்பித் தாயைத் தேற்றினாள். இச் செய்தியை உய்த்துணருமாறு வைத்த இந்த இளங்குட்டுவனது புலமை நலத்தை நோக்கின், இச் சேரமான் நல்லரசு நடத்தி நல்லோர் பரவ வாழ்ந்த பெருந்தகை என்பது தெளிய விளங்குகிறது. தான் கூறுவதைக் கேட்போர் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை, அந் நெறியிலே முன்னுணர்ந்து அவற்றுக்கு ஏற்ற சொற்களைத் தொடுப்பது ஒன்றே இதற்குப் போதிய சான்று பகர்கின்றது.
சேரமான் நம்பி குட்டுவன்: செல்கெழு குட்டுவன், வேல்கெழு குட்டுவன், செங்குட்டுவன், இளங்குட்டுவன் என்றாள் போல இச்சேரமான் நம்பி குட்டுவன் எனப்படுகின்றான். இவனும் இளங்குட்டுவன் போல ஏற்றமான புலமைச் சிறப்புடையன். இவன் பாடியனவாக நற்றிணை, குறுந்தொகை முதலிய தொகை நூல்களில் சில பாட்டுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவன் வரலாற்றை அறிதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லையாதலால் இக்குட்டுவனுடைய பாட்டுகளின் நலத்தை அறிவது இவனைப் பற்றி ஓரளவு அறிந்தவாறாகும்.
தலைமைப் பண்புகள் நிறைந்த தக்கோன் ஒருவனும் அவ்வியல்பேயுடைய நங்கை யொருத்தியும் தனிமையிற் கண்டு காதலுற்றுக் களவொழுக்கம் மேற்கொண்டுள்ளனர். விரைய வரைந்து கொள்ளாது, தலைமகன் களவின்பத்தையே விரும்பி யொழுகுவது அவளுக்கு வருத்தம் பயக்கின்றது. அதனைத் தோழி அறிகிறாள். வரைவு என்பது இன்னானுக்கு இன்னவள் உரியவள் என்று பெற்றோரும் சான்றோரும் கூடிப் பலரும் அறிய உறுதி செய்வது. அதன் பின்னரே கடிமணம் நடைபெறும். அதனைப் பழந்தமிழ் நூல்கள் வதுவை மணம் என்று குறிக்கின்றன. வடநூல் கூறும் காந்தருவ மணத்துக்கும் பலரும் அறிய நிகழ்த்தும் வதுவை மணம் நடந்தே தீர வேண்டுமென்ற கட்டுப்பாடு இல்லை, தமிழ்நூல் கூறும் களவுக்கு கற்புமணம் நடந்தே தீர வேண்டும்; அதன் பின்பே இருவரும் உடனுறைந்து செய்யும் மனையறம் தொடங்கும். வரைவு இடையீடு படுகிறபோதுதான் உடன்போக்கு நிகழும். அவ்வுடன் போக்கும் முடிவில் திருமணத்தால் தான் முற்றிக் கற்பு நெறியாகும் தனித்துக் கண்டு காதலுறும் வகையில் களவும் காந்தருவமும் ஒன்றாய்த் தோன்றுதல் பற்றிக் களவு காந்தருவம் போன்றது என்பர்; என்றாலும் முறையும் பயனும் வேறுபட்டுப் போவதால் களவு காந்தருவமென்றும், காந்தருவம் களவு என்றும் கருதவது குற்றம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முடிப்புரை - History of Chera - சேர மன்னர் வரலாறு - குட்டுவன், அவள், களவு, என்றதனால், உள்ளத்தில்