சேர மன்னர் வரலாறு - சேரமான் வஞ்சன்
தாமனார் பாடிய பாட்டைப் பாணரும் கிணைப் பொருநரும் கேட்போர் மனம் மகிழுமாறு யாழிசைத்தும் கிணைப்பறை கொட்டியும் பாடினர். பாட்டிசை சென்று உறங்கிக் கொண்டிருந்த வஞ்சனுடைய செவியகம் புகுந்து அவனைத் துயிலுணர்வித்தது. அவன் அப்பாட்டிசையைக் கேட்டு மனம் மகிழ்ந்தான். சொற் பெயரா வாய்மையும் தன்னையடைந்த இரவலர்பால் பெரருளும் உடையனாதலால், வஞ்சன் அவரது பாட்டு இசைக்கும் பொருளை நோக்கினான். இரப்புரை கலந்த அப் பாட்டு, “வேந்தே, நின்னை நினைந்து வரும் இரவலர்க்கு வேண்டுவன நல்கிச் சிறப்பிக்கும் வள்ளலாகிய நீ, எம்மைப் புறக்கணிக்காத மிக்க அருளுடையனாதல் வேண்டும்” என வேண்டிற்று.
அவன் உடனே எழுந்து போந்து திருத்தாமனாரை அன்போடு வரவேற்றான். அவர் பாடியது ஒரு சிறு பாட்டேயாயினும் அவனுக்கு அது நல்கிய மகிழ்ச்சியோ பெரிது. அதனால், அவன் முகம் மலர்ந்து அன்பு கனிய நோக்கி இன்னுரை வழங்கினான். வறுமைால் வாடி மாசு படிந்திருந்த அவரது ஆடையை நீக்கிப் புத்தாடை தந்து புனைந்து கொள்ளச் செய்தான். இனிய தேறல் வழங்கப் பெற்றது. பின்பு தனக்கெனச் சமைக்கப்பெற்றிருந்த இனிய மான்கறியையும் சோற்றையும் தாமனார்க்கும் அவரோடு வந்த பாணர் முதலியோர்க்கும் நல்கினான்; தன் மார்பில் அணிந்திருந்த மணிமாலையையும் பூத் தொழில் செய்யப்பட்ட மேலாடையையும் தாமனார்க்குத் தந்து இன்புறுத்தினான்.
திருத்தாமனார் அவன் மனைக்கண்ணே சின்னாள் தங்கியிருந்த, அவன், தனக்கும் ஏனைப் பாணர் பொருநர் முதலிய பரிசிலர்க்கும் பெரும் பொருள் நல்கப் பெற்றுக் கொண்டு அவன்பால் விடைபெற்று ஊர் வந்து சேர்ந்தார்.
இச் சேரமான் வஞ்சனுடைய குடிமரபு பற்றியும் அவற்குப்பின் வந்த வேந்தரைப் பற்றியும் வேறு குறிப்பொன்றும் தெரியாமலே அவனது வரலாறு நின்று வற்றுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் வஞ்சன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவன்