சேர மன்னர் வரலாறு - சேரநாட்டின் தொன்மை
கி.பி. 226 அளவில் எழுதப்பட்டதெனப்படும் பியூதிங்கள் தொகை நூல் (Peutingar Tables), முசிறியில் யவனர் இருக்கை யொன்று இருந்த தெனவும், அங்கே அகஃடசுக்குக் கோயிலொன்று இருந்ததாகவும், அதனை யவனப்படை யிரண்டு இருந்து காத்தவந்தன எனவும் கூறுகிறது; ஆனால் முசிறி நகரைக் குறிக்கும் சங்கப் பாட்டுகள் இச் செய்தி குறித்து ஒன்றும் கூறவில்லை. இவற்றை நோக்குவோர் முசிறியில் யவனர் அகஃடசுக்குக் கோயிலெடுத்த காலம் சங்கத்தொகை நூல்கள் தோன்றிய காலத்துக்குப் பின்னதாம் என்பதைத் தெளிவாகக் காண்பர். ஆகவே, சங்கத் தொகை நூல்கள் பலவும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டன என்பது தேற்றமாம்.
இச் சங்க இலக்கியங்கள் யாவும் சேர நாட்டைச் சேர நாடென்றும், அந் நாட்டு வேந்தர்களைச் சேரர் என்றும் சேரலரென்றும் தெளிவாகக் கூறுகின்றன பிற்காலத்துத் தமிழ் நூல்களும் அந் நெறியில் வழுவியது இல்லை. வடநாட்டு வடமொழி நூல்களுள் வேதங்களும் இதிகாசங்களும் சேரர்களைச் சேரரென்றே குறிப்பதை முன்பே கண்டோம். செல்யூக்சு நிகேடர் காலத்து மெகஃதனிசு என்பார் கங்கைக்கரைப் பாடலிபுரத்திலிருந்து எழுதிய குறிப்பும் சேரர்களைச் சேரமான்கள் என்றே குறித்துள்ளது. ஆனால் அசோக மன்னனுடைய கல்வெட்டுகள் சேரலர்களைக் கேரளபுரத்திரர் என்று கூறுகின்றன; ஆயினும் அத் தொடர் சேரல புத்திரர் என்று படிக்குமாறும் அமைந்திருக்கிறது. மற்று, அவற்றைப் படித்த அறிஞர் பலரும் கேரள புத்திர ரென்றே படித்து வந்திருக்கின்றனர். பிற்கால வடநூற் பயிற்சியால் அசோகன் கல்வெட்டுகளைப் படித்தோர் கேரள புத்திரர் என்று கருதிவிட்டிருக்கலாம். இடைக் காலச் சோழவேந்தர் கல்வெட்டுகள்[18] சேர வேந்தர்களைக் கேரளர் என்று கூறுவதைப் படித்த பயிற்சியால் அசோகன் கல்வெட்டுகளைக் கேளர புத்திரரென அவர்கள் மாறிப் படித்தற்கு இடமுண்டாயிற்றெனவும் கருதலாம். இடைக்காலக் கல்வெட்டுகளை நோக்குமிடத்துக் கேரளர் என்ற வழக்குக் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பே தோன்றியிருப்பது தெரிகிறது[19]. ஆனால் கி.பி. ஏழாம் நூற்றாண்டினரான திருஞான சம்பந்தர் முதலியோர் திருப்பதிகங்களுள் சேரர், சேரலர் என்ற பெயர்கள் காணப்படுகின்றனவேயன்றிக் கேரளர் என்ற சொல்வழக்குக் காணப்படவில்லை. இதனை நினையுங்கால் கேரளர் என்ற வழக்காறு சோழ பாண்டிய நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்தான் உண்டாயிற்றென்பது விளங்குகிறது.
சேரலர் என்பது கேரளர் என மாறி வழங்கும் முறை வடநாட்டில் நெடுங்காலத்துக்கு முன்பே தோன்றி விட்டது. அசோகன் கல்வெட்டில் காணப்படுவது கேரளர் என்பதேயாயின் இரண்டாயிரமாண்டுகட்கு முன்பே வடவர் சேரலர் என்னும் தமிழ்ச் சொல்லைக் கேரளர் எனத் திரித்துக் கொண்டனர் என்று அறியலாம். ஆனால், மேனாட்டுக் கிரேக்க யவனர்கள், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் சேரர்களைச் சேர ரென்றும் சேரமான்களென்றும் வழங்கி வந்திருக்கின்றனர்.
வேத காலத்துக்குப் பின் வந்த வடமொழியாளர் தாங்கள் புதியவாகக் காணும் நாடு நகரங்களின் பெயரையும் ஆறுகள் ஊர்கள் முதலியவற்றின் பெயரையும் மக்களினத்தின் பெயரையும் தாங்கள் கலந்து வழங்கும் வகையில் மூன்று நெறிகளை மேற் கொண்டனர். முதலாவது, தாம் எதிர்ப்படும் பெயர் களைத் தம்முடைய மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வது. பாண்டி நாட்டுக் கூடல் வாயிலைக் கடாபுரமென வான்மீகியார் மொழிபெயர்த்துரைப் பதையும், பின் வந்தோர் அந் நெறியே பின்பற்றி நாடு நகரங்களின் பெயர்களையும் ஆறு குளங்களின் பெயர்களையும் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதையும் தமிழுலகம் நன்கறிந்திருக்கிறது. தமிழகத்து மேலைமலைத் தொடரைச் சஃயாத்திரி யென்பதும், தொண்டை நாட்டுப் பாலியாற்றை க்ஷிர நதியென்பதும், நடு நாட்டு முதுகுன்றத்தை விருத்தாசல் மென்பதும் மதுரைத் திருவாலயாய் அங்கயற் கண்ணியை மீனாக்ஷி யென்பதும் போதிய சான்றுகளாகும். மற்றொன்று எதிர்ப்படும் பிறமொழிச் சொற்களைத் தங்கள் மொழி நடைக்கேற்பத் திரித்துக்கொள்வது. இதற்குத் தென்றமிழ் நாட்டு முத்துகளை முத்தம் என்பதும், பவளத்தைப் பிரவாள மென்பதும், சோழனைச் சோடனென்பதும் ஏற்ற சான்றுகளாம். வேறொன்று, தம் மொழிநடைக்கு ஒத்தவற்றை ஒரு திரிபுமின்றி ஏற்றுக்கொள்வது. அம் முறையில் மணி, மீன், நீர் என்பவற்றை வட மொழியில் ஏற்றுக் கொண்டுள்ளனர். பண்டைநாளைத் தொல்காப்பியரும், மொழி நடைக்கேற்ற எழுத்தால் பிறமொழிச் சொற்களை ஏற்றல் வேண்டும்; வேறு படுப்பது நேர்மையன்று என்பதற்காகவே, “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே[20]” என்று தமிழ்மக்கட்கு வழி வகுத்துரைத்தார். இந்தச் சீரிய முறையை வடவர்க்கு வடமொழி யாசிரியர் வகுத்துரைக்கவில்லை போலும். நேர்மை திறம்பாத நெறிமேற்கொண்ட மேனாட்டு மொழியாளர்களும் கட்டுமரம் (Kattamaram), மிளகு தண்ணி (Molak tanni) இஞ்சி (Ginger) அரிசி (Rice) தோகை (Tugi), தேக்கு (Teak) முதலியவற்றைத் தங்கள் மொழி நடைக்கேற்பத் திருத்தி மேற்கொண்டனர். இவ்வாற்றால் வடவர் கூட்டுறவு பெற்ற சேர நாட்டவர் தம்மைக் கேரளரென்றும், தங்கள் நாட்டைக் கேரள நாடென்றும் வடவர் வழங்கியவாறே[21] வழங்குவாராயினர். இன்றும், தென்னாட்டவருள், தமிழரொழியப் பிறரனைவரும் தங்களை வடவரிட்ட பெயராலே வழங்குவது குறிக்கத்தக்கது.
- ↑ 18. Inscriptions of Sri. Vira Rajendra (Rajakersari Varman) S.I.I. Vol. ii. No. 20;
- ↑ 19. Velvikudi grant, Ep. Indi. Vol. xvii. No. 16
- ↑ 20. தொல், சொல், எச்ச:5;
- ↑ 21. காத்தியாயனர், பதஞ்சலி முதலியோர் கேரளரென வழங்கியுள்ளனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரநாட்டின் தொன்மை - History of Chera - சேர மன்னர் வரலாறு - கேரளர், முன்பே, பெயரையும், தங்கள், மொழி, வடவர், நாட்டு, கேரள, அசோகன், சேரர்களைச், சேரலர்