சேர மன்னர் வரலாறு - சேரநாட்டின் தொன்மை
பின்னர் எகிப்து நாட்டை யாண்ட தாலமிகள் செங்கடல் வழியாக இந்திய நாட்டுக்கு வழி கண்டனர். அவர்கட்குப் பின் யவனர் தோன்றி நம் இந்திய நாட்டோடு வாணிகம் செய்யத் தோன்றி நம் இந்திய நாட்டோடு வாணிகம் செய்யத் தலைப்பட்டனர். அவர்களில் இப்பாலசு (Hippalus) என்னும் கிரேக்கன் நம் நாட்டில் அடிக்கும் தென்மேற்குப் பருவக்காற்று நிலையையும் வடகிழக்குப் பருவக் காற்று நிலையையும் கண்டு உரைத்தான். அதன்பின் யவன வாணிகம் பெரிதும் வளம் பெற அவர்களிடையே நடைபெறுவதாயிற்று; அப் பருவக் காற்றுகளையும் அவர்கள் இப்பலசு என்றே வழங்கினர் என்பர். யவனர்கட்குப் பல்லாண்டு முன்பிருந்தே அரபிக்கடலில் அரபியரும் இந்தியரும் கலம் செலுத்தி வாணிகம் செய்து வந்தனராதலால், அவர்கள் இப் பருவக் காற்றை அறியாதிருந்தனரென நினைத்தற்குச் சிறிதும் இடமில்லை; கி.மு. ஆறாம் நூற்றாண்டில் (கி.மு. 556-539) ஆட்சி புரிந்த சால்டிய வேந்தன் நபோனிதாசு காலத்தேயே இந்தியரது கடல் வாணிகம் சிறந்து விளங்கிற்று; சிலர் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டு மேலைக் கடற்கரைக்கும் மேனாட்டுக்கும் இடையே பெரு வாணிகம் நடைபெற்று என்று கூறுகின்றனர்[10]. இக் கடற் காற்றின் இயல்பறிந்து பண்டைத் தமிழ் மக்கள் கடலிற் கலஞ் செலுத்தி மேம்பட்ட செயலைப் புறப்பாட்டு[11] எடுத்துக் கூறுவது ஈண்டு நினைவு கூரத் தக்கது.
இக் காலத்தே மேனாட்டுக்குத் தென் தமிழ் நாட்டினின்று தூதொன்று சென்று யவன வேந்தரான அகஸ்டஸ் என்பாரது தொடர்பு பெற்றுச் சுபெயின் நாட்டுக்குச் சென்றது. இத் தூது தென் பாண்டி நாட்டு வேந்தனொருவன் விடுத்ததென்பர்; வட நாட்டுப் பேரரசு என்னும் வேந்தன் விடுத்தது என்பாரும் உளராயினும் அவர் கூற்று வலியுடையதாக இல்லை.
இவ்வாறு, மேலை நாட்டவர்க்கும் தென் தமிழ் நாட்டவர்க்கும் இடையே வாணிகம் மிகுதிப்பட்ட தனால் யவன நாட்டினின்று தமிழ் நாட்டுக்கு வரும் மரக்கல மாக்கட்கென யவன நாட்டில் நூல்கள் எழுந்தன. அவற்றுள் எரித்திரையன் கடற் செலவு, மத்தியதரைக் கடற் செலவு என்று பெயரிய இரு நூல்கள் உண்டாயின. ஒன்று ஆசிய நாட்டுக் கடற் செலவையும் மற்றொன்று ஆப்பிரிக்க நாட்டுக் கடற் செலவையும் கூறுவன[12]. இவை கி.மு. முதல் நூற்றாண்டில் தோன்றின் என்பது அறிஞர் கொள்கை. இக்காலத்துக்கு முன்பே தென் தமிழ் நாட்டவர் சிலர் ஐரோப்பாவைச் சுற்றிச் சென்று வட கடலில் சர்மனி நாட்டருகில் உடைகலப் பட்டொழிந்தனர் என்றொரு செய்தி அவருடைய நூல்களிற் காணப்படுகிறது என அறிஞர்கள் உரைக்கின்றனர்[13]. கி.பி. முதல் நூற்றாண்டில் பிளினி (Pliny) என்பார் மேலைக் கடற் செலவுப்பற்றி நூலொன்றை எழுதியுள்ளனர். அதன்கண் இக் கடற் செல்வு சார்பான செய்திகள் பல விரிவாக உரைக்கப்பட்டுள்ளன.
கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பெட்ரோனியு (Petronius) என்பவர், அந் நாளைய யவனச் செல்வ மகளிரின் பெருமித வாழ்வைக் கடிந்து நூலொன்றை எழுதியிருக்கிறார். அதன்கண் நம் தமிழ் நாட்டிலிருந்து யவனர்கள் கொண்டுசென்ற மெல்லிய ஆடையை உடுக்குமாற்றால் யவன மகளிர் தங்கள் உடல் முற்றும் புறத்தே தெரியுமாறு காட்டிப் பொலிவிழக் கின்றனர் என்றும், அவ்வாடைகள் காற்றலாகியவை, முகிலால் ஆகியவை, ஆவியால் ஆகியவை என்றும் குறித்திருக்கின்றார். “புகைமுகந் தன்ன மாசில் தூவுடை” என்றும், “ஆவியந் துகில்” என்றும் வரும் சங்கநூல் கூற்றுகள் அவர் கூறுவனவற்றை வற்புறுத்துகின்றன.
எகிப்து நாட்டு ஓசெலிசு துறையினின்று (Ocelis) புறப்படும் காலம் தென்மேற்குப் பருவக் காற்றைத் துணைக்கொண்டு நாற்பது நாள்களில் முசிறித் துறையை அடையும்; அத் துறையில் கடற்கொள்ளைக் கூட்டத் தினர் உளர்; அவர்கள் நித்திரியாசு (Nitrias) என்ற இடத்தில் உறைபவர். முசிறித் துறை வணிகப்பொருள் மிகுதியாக உடையதன்று; கலம் நிற்கும் இடத்துக்கும் முசிறித் துறைக்கும் நெடுந்தூரம் இருக்கிறது. ஏற்றற்குரிய பொருளைச் சிறு சிறு படகுகளில் கொணர வேண்டும். இப் பகுதிக்குரிய வேந்தன் கேளோபோத்திராசு (Caelobothras) இம் முசிறித் துறையினும், நியாசிந்தி (Neacyndi) நாட்டிலுள்ள பாரேசு (Barace) துறை சிறந்து விளங்குகிறது. அதற்குரிய வேந்தனான பாண்டியோன் (Pandion), உள்நாட்டில் மதுரையென்னும் நகர்க்கண் (Modora) இருக்கின்றான்; பாரேசு துறைக்குக் கோட்ட நாராவிலிருந்து மிளகுப் பொதிகள் வருகின்றன என இவ்வாறு பிளினி என்பார் எழுதியுள்ளார்[14].
பிளினியினுடைய குறிப்புகளால் கி.பி. முதல் நூற்றாண்டில் சேர நாடு தென் கொல்லம் வரையில் பரந்திருந்தமையும் அதன் தென் பகுதி தென்பாண்டி நாடென்பதும் தெளிவாய் விளங்குகின்றன. இவ் வகையில் பெரிப்புளுசு நூலாசிரியர் கூறுவனவும் ஒத்திருக்கின்றன. ஆயினம், முசிறித்துறை செல்வத்தாற் சிறப்புடைய மாநகரம் என்றும், வடநாடுகளிலிருந்தும் எகிப்து நாட்டிலிருந்தும் எப்போதும் கலங்கள் இத் துறைக்கு வருவதும் போவதுமாக உள்ளன என்றும் பெரிப்புளுசு நூலாசிரியர் கூறுகின்றார்[15]. அவர் கூற்று, “சேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும்[16]” என்ற சங்கநூற் கூற்றால் வலியுறுகிறது.
கி.பி. 126-61ல் வாழ்ந்த தாலமி (Ptolemy) என்பார் எழுதியுள்ள குறிப்பில் சேர வேந்தர் கேரள போத்திராசு (Carelabothras) என்றும், அவர்களது தலைநகர் கரவரா (Karoura) என்றும் குறிக்கப்படுவது காண்கின்றோம்[17]. இது கருவூர் என்பதன் திரிபு. இக் கருவூர் இப்போது வஞ்சி நகர்க்கு வடக்கில் எட்டுக் கல் அளவில் கடற்கரையில் உளது.
- ↑ 10. T.V.C. Manual (Nagam Iyer) Vol. i. P 238;
- ↑ 11. புறம். 66.
- ↑ 12. W. Woodburn Hyde’s Ancient Greek Mariners P. 215-32, 209-14;
- ↑ 13. W. L. Malabar P. 252
- ↑ 14. W. Logan’s Malabar P. 256.
- ↑ 15. Ibid P. 254.
- ↑ 16. அகம். 149.
- ↑ 17. Ibid P. 253. M Crindler’s Translation of the periplus of the Erythraen Sea 53-6.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரநாட்டின் தொன்மை - History of Chera - சேர மன்னர் வரலாறு - என்றும், கடற், வாணிகம், தென், தமிழ், நூற்றாண்டில், பருவக், முசிறித், இந்திய, என்பார், நாட்டு, வேந்தன், எகிப்து, அவர்