சேர மன்னர் வரலாறு - சேரநாட்டின் தொன்மை
வேந்தர் குலத்தை வேரறுத்து வந்த பரசுராமன் புதிதாக நாடொன்றும் படைக்க விரும்பித் தன் தவ வண்மையாற் கடலிலிருந்து மலையாள நாட்டை வெளிப்படுத்தி அதன்கண் பிராமணர்களை வாழச் செய்தான்[7]; அவர்கட்குச் சில காலத்துக்குப் பின் நாகர்களால் பெருந் துன்பமுண்டாயிற்று. அதனால் அவர்கள் அனைவரும் அந் நாட்டினின்றும் போய் விட்டனர். பின்னர்ப் பரசுராமன் வடக்கில் உள்ள ஆரிய நாட்டில் அறுபத்து நான்கு ஊர்களில் வாழ்ந்த பிராமணர்களைக் கொணர்ந்து குடியேற்றினான்; நாகர்களின் இடுக்கண் நீங்க நாக வழிபடும் நாகர்கட்குக் கோயில்களும் ஏற்படுத்தினான். அச் செயல்களால் நாகர் துன்பம் குறைந்தது; அதனை யறிந்த பழைய பிராமணர்கள் தங்களைப் பழந் துளுவரென்றும் துளு பிராமணர்களென்றும் கூறிக்கொண்டு திரும்பி வந்தனர். பரசுராமன் அவர்கட்கு நாகரது இடுக்கண் பற்றறத் தொலையும் பொருட்டு மந்திரங்கள் கற்பித்துக் கோயில் களிற் பணிபுரியுமாறு ஏற்பாடு செய்தான். மருமக்கள் தாய முறையை முதற்கண் ஏற்படுத்தியவனும் பரசுராமனே என்பர்.
சில காலத்துக்குப் பின் அப் பிராமணர்கட் கிடையே மனப்புழுக்கமும் பூசலுமுண்டாக, நான்கு பேரூரில் வாழ்ந்த பிராமணர்களை வருவித்து ஊர்க்கொருவராக நால்வரைத் தேர்ந்து அவர்களை அரசியலை நடத்துமாறு பரசுராமன் ஏற்படுத்திச் சென்றான். நால்வருள் ஒருவன் தலைவனாதல் வேண்டும் மெனவும், அவனும் மூன்று ஆண்டுக்கு மேல் தலைமை தாங்குதல் கூடாதெந்றும் அவர்கள் தங்களுக்குள் வகைமை செய்து கொண்டனர். அரசியலுக்கு ஆறிலொன்று கடமையாக வரையறுக்கப்பட்டது.
காலம் செல்லச் செல்ல வேலியே பயிரை மேயத் தலைப்பட்ட தென்றாற்போல் இத் தலைவர்கள் மக்கட்கு இன்னல் விளைக்கலுற்றனர். இக் கொடுமை நீங்க வேண்டி அந்தப் பிராமணர்கள் தங்கட்கு அரசியல் தலைவனாகிறவன் தங்கள் நாட்டவனாக இருத்தல் கூடாதென்று துணிந்தனர். கோபுரம் என்னும் இடத்திலிருந்து ஒருவனைத் தேர்ந்து கேய பெருமாள் என்று சிறப்புப் பெயர் நல்கித் தங்கட்குப் பன்னிரண்டாண்டு வேந்தனாக இருக்குமாறு ஏற்பாடு செய்தனர். அவனுக்கு முடிசூட்டும் போது சேரமான் பெருமாள் என்று பெயர் கூறப்படும். கேய பெருமாட்டுப் பின் சோழன் பெருமாளும் அவற்குப்பின் பாண்டி நாட்டுக் குலசேகரனான பாண்டிப் பெருமாளும் ஆட்சி செய்தனர்.
கேய பெருமாள் கொடுங்கோளூரிலிருந்து பன்னிரண்டாண்டு ஆட்சி செய்தான்; தலையூரில் கோட்டை யொன்றையும் அவன் கட்டினான். பின் வந்த சோழப் பெருமாள் பத்தாண்டு இரு திங்களும் இருந்துவிட்டுப் பழையபடியே சோழநாடு சென்று சேர்ந்தான்; அவன் சோழக்கரையில் கோட்டை யொன்றைக் கட்டினான். பாண்டிப் பெருமாள் பரம்பா என்னுமிடத்தே முடி சூட்டிக்கொண்டு ஒன்பதாண்டு அரசு புரிந்துவிட்டுப் பாண்டு நாடு சென்றான். அவற்குப்பின் சோழப் பெருமாள் ஒருவன் வந்து பன்னிரண்டாண்டும் பாண்டிப் பெருமாள் ஒருவன் பன்னிரண்டாண்டும் ஆட்சி செய்து விட்டு நீங்கினர். இதற்கிடையே கலியுகம் பிறந்து பல ஆண்டுகள் கழிந்தன. கலியின் கொடுமை எழுவது கண்ட கேரள நாட்டு வேதியர்கள் “பூருவ தேசத்துப் பாணப் பெருமாள் என்ற ஒருவனைக் கொணர்ந்து கேரள நாட்டுக்கு வேந்தனாக்கினர். அவ் வேந்தன் புத்த சமயத்தை மேற்கொண்டான். புத்தர் கட்கும் வைதிக வேதியர்கட்கும் சமயச் சொற் போர் நடந்தது; முடிவில் புத்தர்கள் தோற்றனர்; வேந்தன் வைதிக சமயத்தை மேற்கொண்டு புத்தர்களை நாட்டினின்று வெருட்டிவிட்டான்; எனினும், நான்கு ஆண்டுகட்குப் பின் அவன் மெக்காவுக்குச் சென்றொழிந்தான்.
பின்பு துளுவன் பெருமாள் என்றொருவன் வட நாட்டினின்றும் போந்து கேரள நாட்டு அரசை மேற் கொண்டான்; தனது ஆட்சிக்குட்பட்ட நாட்டுக்கு துளு நாடு என்று பெயரிட்டான்; அத் துளுவன் ஆறாண்டு ஆட்சி செய்துவிட்டு இறந்தான். அவனை யடுத்து இந்திரப் பெருமாள் என்பவன் வேந்தனாகிக் கொடுங்கோளூரிலிருந்து பன்னீராண்டு ஆட்சி புரிந்துவிட்டுப் “பூருவ தேசம்” போய்ச் சேர்ந்தான். அவற்குப்பின் ஆரிய புரத்து ஆரியப் பெருமாள் என்பவன்
வேந்தனானான். அவன் கேரள நாட்டை ஐந்து ஆண்டுகளே ஆட்சி செய்தான். அவன் தான் கேரள நாட்டை “துளுராஜ்யம், கூபக ராஜ்யம், கேரள ராஜ்யம், மூஷிக ராஜ்யம்” என நான்காக வகுத்த முதலரசன். அவனுக்குப் பின் கந்தன் பெருமாள் என்பவன் “பூருவ தேசத்திலிருந்து வந்து நான்காண்டுகள் ஆட்சி செய்தான். கைநெற்றி யென்னுமிடத்தே அவன் ஒரு கோட்டையைக் கட்டினான். கோட்டிப் பெருமாள் ஓராண்டும், மாடப் பெருமாள் பதினோராண்டும், அவன் தம்பி ஏழிப் பெருமாள் பன்னீராண்டும் ஆட்சி செய்தனர். பின்பு கொம்பன் பெருமாள் தோன்றித் தான் இருந்த மூன்றரை யாண்டு நெய்த்தரா ஆற்றங்கரையில் ஒரு குடிலில் இருந்தொழிந்தான். விசயன் பெருமாள் விசயன் கொல்லம் என்ற கோட்டையையமைத்துப் பன்னீராண்டு ஆட்சி செய்தான். அரனுக்குப் பின் வந்த வல்லப் பெருமாள் சிவலிங்கமொன்று கண்டு நெய்த்தர ஆற்றங்கரையில் அதற்கொரு கோயிலும் கோட்டையும் கட்டிப் பதினோராண்டிருந்தான். அரிச்சந்திர பெருமாள் பரளி மலையில் ஒரு கோட்டையை யமைத்து, அங்கே, தான் தனித்திருந்து ஒருவரும் அறியா வகையில் மறைந்து போனான். அவனையடுத்து வந்த மல்லன் பெருமாள் பன்னிரண்டாண்டு ஆட்சி செய்தான்.
இப் பெருமாட்குப் பின் வந்த வேந்தன், பாண்டிப் பெருமாளான குலசேகரப் பெருமாள் எனப்படுவன். இவன் வெளிநாட்டிலிருந்து வேத ஆசிரியர் இருவரைக் கொணர்ந்து திருக்கண்ணபுரம் என்னுமிடத்தே கல்லூரி யொன்று நிறுவி வேதியர்கட்குக் கல்வி வழங்கினான். அவன் பதினெட்டியாண்டு அரசுபுரிந்திருந்து திருவஞ்சைக்களத்தினின்றும் உடலோடே துறக்கம் புகுந்தான்.
- ↑ 7. பரசுராமன் நாடுபெற்ற இச் செய்தியைச் சேக்கிழாரும் மலைநாட்டைக் கூறுமிடத்து, “பாசுபெறு மாதவ முனிவன் பரசுராமன் பெறு நாடு” (விறன்மிண்டர். 1.) என்று குறிப்பது ஈண்டு நினைவு கூரத் தக்கது. இன்றும் அந் நாட்டு வேதியர் சங்கல்பம் கூறுமிடத்து, “பரசுராம க்ஷேத்ரே” என்று சொல்வது வழக்கமாகவுளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரநாட்டின் தொன்மை - History of Chera - சேர மன்னர் வரலாறு - பெருமாள், ஆட்சி, அவன், பின், செய்தான், கேரள, வந்த, பரசுராமன், பாண்டிப், கட்டினான், வேந்தன், தான், என்பவன், “பூருவ, செய்தனர், நான்கு, நாட்டை, கொணர்ந்து, ஒருவன், பன்னிரண்டாண்டு, அவற்குப்பின்