3. விஷ்ணு புராணம் - பதினெண் புராணங்கள்
பதினெண் புராணங்களுள் இப்புராணம் மிகவும் முக்கியமானதென்று வைணவர்கள் கூறுவர். இந்தப் புராணத்திலும், பின்னர் வரும் பாகவத புராணத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் வரலாறு மிக விரிவாகப் பேசப் படுகிறது. ஆதிசங்கர பகவத் பாதாள் தம்முடைய மஹாபாஷ்யத்தில் விஷ்ணு புராணத்தில் இருந்து பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார். ஆதி சங்கரர் காலம் 8ஆம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர்கள் கண்ட முடிவாகும். எனவே இந்தப் புராணம் அவரது காலத்துக்கு முன்னரே அதாவது 5, 6ஆம் நூற்றாண்டு களில் மக்களிடையே நன்கு பரவி இருக்க வேண்டும். 5, 6ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது என்ற காரணத்தால் இந்திய நாகரிகம், பண்பாடு என்பவற்றின் கருவூலம் இப்புராணங்கள் என்ற கருத்துக்குத் தடை ஏதுமில்லை.
இப்பொழுது கிடைக்கின்ற முறையில் இப்புராணம் 6,000 பாடல்களைக் கொண்டதாகும். இப்புராணம் வியாச பகவானின் மகனாகிய பராசர முனிவரால் சொல்லப்பட்டதாகும். மைத்ரேயி முனிவர் பராசர முனிவரிடம் பாரத நாட்டுத் தோற்றம் பற்றிக் கேட்க, பராசரர் விடை சொல்வதுபோல் அமைந்துள்ளது இப் புராணம்.
இப்புராணம் ஆறு பகுதிகளாகவும், 126 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நாலாவது பகுதி மட்டும் உரைநடையில் உள்ளது. இந்நாட்டுப் பழங்கால மன்னர்களின் வம்சாவளி பற்றிக் கூறுவதாகும் அது.
ஒரு புராணத்திற்குரிய ஐந்து பண்புகளும் விஷ்ணு புராணத்தில் முழுவதுமாக அமைந்துள்ளன. முதற் பகுதி- பிரபஞ்சம் தோற்றம் பற்றியதாகும். இரண்டாம் பகுதி- இந்நாட்டுப் புவியியல் பற்றியும், வானியல் பற்றியும் கூறுவது மூன்றாவது பகுதி- மன்வந்திரங்கள், யுகங்கள் பற்றிய விளக்கமாகும். இதனுடன் இந்நாட்டின் சமுதாய அமைப்பு, நால்வகை வர்ணம் ஆகியவை பற்றியும் பேசப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் சூரிய, சந்திர வம்ச மன்னர்கள் பற்றிய பட்டியல் தரப்பட்டுள்ளது. ஐந்தாவது பகுதியில் கிருஷ்ணனுடைய வரலாற்றுப் பகுதியும் குப்த மன்னர்கள் பற்றிய செய்தியும் பேசப்பட்டுள்ளது.
ஆறாவது பகுதி கலியுகத்தில் மக்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிறது.
பராசர முனிவரைப் பார்க்க ஒருமுறை மைத்ரேய முனிவர் வந்தார். மைத்ரேயர் பராசரரைப் பார்த்து, 'படைப்பு எப்படித் தொடங்கிற்று என்பதைத் தாங்கள் சொல்ல வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டார். பராசரர் பதில் கூறத் துவங்கினார். தொடக்கத்தில் எங்கும் நீரே நிரம்பி இருந்தது. அதில் ஒரு பெரிய முட்டை இருந்து கொண்டிருந்தது. முட்டையினுள் இந்த உலகத்தில் நாம் காண்கிற சர, அசரப் பொருள்கள் எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன. அவற்றோடு சேர்ந்து விஷ்ணுவும் அதனுள் இருந்தார். வெளியே ஆகாயம், காற்று முதலிய ஐந்தும் இருந்தன. பூமி நீருக்கடியில் பாதாள லோகத்தோடு சேர்ந்து இருந்தது. பூமியை மேலே கொண்டுவர விரும்பிய விஷ்ணு வராக வடிவம் எடுத்துப் பாதாளத்திற்குச் சென்றார். அங்கிருந்த பூமி தன்னை விடுவிக்குமாறு அவரை வேண்டிக் கொண்டது. பூமியை எடுத்துத் தனது இரண்டு தந்தங்களின் நடுவே வைத்துக் கொண்டு மேலே வந்த விஷ்ணு, பூமியை நீரில் மிதக்க விட்டார். நீரில் மிதந்து கொண்டிருந்த காரணத்தால் நாராயணன் என்ற பெயர் பெற்ற விஷ்ணு, பிரம்மன் வடிவைத் தாங்கி உலகத்து உயிர்களை எல்லாம் படைக்கத் தொடங்கினார். முதலில் படைக்கப்பட்டவர்கள் அவர் வாயிலிருந்து வந்த தேவர்களும், தொடையிலிருந்து வந்த அசுரர்களும், விலாவிலிருந்து வந்த பிறர்களும் ஆவர். படைக்கப்பட்ட யட்சர்கள் படைத்தவனாகிய பிரம்மனையே தின்ன முற்பட்டனர். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என்று ராட்சதர்கள் தடுத்தனர். இதன்பிறகு பிரம்மனின் தலையில் இருந்து விழுந்த ரோமத்தில் கந்தர்வர்கள் உண்டாகினர். பிரம்மனின் நெஞ்சிலிருந்து செம்மறி ஆடுகளும், வாயிலிருந்து வெள்ளாடுகளும், வயிற்றி லிருந்து கால்நடைகளும், பாதத்திலிருந்து யானை, குதிரை, மான், ஒட்டகம் ஆகியவையும் உண்டாயின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
3. விஷ்ணு புராணம் - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இப்புராணம், பகுதி, விஷ்ணு, வந்த, பூமியை, பற்றிய, பற்றியும், பராசர, இருந்து