4. வாயு புராணம் - பதினெண் புராணங்கள்
வாயு புராணம், சிவ புராணம் என்றும் கூறப்பெறும். மிகப் பழைமையான புராணங்களில் இதுவும் ஒன்று. இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. பதினெட்டு மகா புராணங்களில் இதுவும் ஒன்று. இந்தப் புராணமும் நட்சத்திரங்களை எண்ணுவதில் கிருத்திகையில் ஆரம்பித்து, பரணியில் முடிகிறது. கி.மு. 550 இல் இருந்த கார்காவின் காலத்திலிருந்து, அஸ்வினியை முதலாக வைத்து எண்ணும் பழக்கம் ஏற்பட்டதால், இப்புராணம் அதற்கு முற்பட்டது என நினைக்க இடமுண்டு. புராணங் களுக்குரிய ஐந்து பொருள்களைப் பற்றி இதுவும் பேசுகிறது.
இப்புராணத்தில் காணப்படுகின்ற பல பாடல்கள் மார்க்கண்டேய புராணத்திலும் காணப்படுகின்றன. ஸ்காந்தம் இதில் 24,000 பாடல்கள் உள்ளன என்று கூறினாலும், இப்பொழுது நமக்குக் கிடைக்கும் வாயு புராணத்தில் 12,000 பாடல்களே உள்ளன. இது நான்கு பெரும் பாகங்களையும், 112 அதிகாரங்களையும் கொண்டது.
பாசுபத யோகம் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. இப்புராணத்தில், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் தெய்வங்கள் என்றாலும் சிவனே இருவருக்கும் மேலான தெய்வம் என்றும், அச் சிவனே எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளார் என்றும், விஷ்ணுவாகிய தானும், பிரம்மனும் சிவனிடத்தில் இருந்தே தோன்றினர் என்றும் விஷ்ணு பிரம்மனுக்குக் கூறுவதாக இப்புராணம் கூறுகிறது. மனித குலத்தின் நன்மைக்காகவே சிவன் உள்ளர் என்றும், சிவன் என்ற பெயருக்கு மங்களம், நன்மை செய்பவர் என்ற பொருளுண்டு என்றும் இப்புராணம் பேசுகிறது.
நைமிசாரண்ய வனத்தில் கூடியிருந்த முனிவர்கள் லோமஹர்ஷனரைச் சந்தித்து, "முனிவரே! வேதவியாசரிடத்தில் நேரிடையாக புராணங்களைக் கற்கும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். இதுவரை தாங்கள் பலவற்றைச் சொல்லியும், மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆசையும், பலவற்றைத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணமும் எங்களை வாட்டுகிறது. சிவனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று அவர்கள் கேட்டவுடன், லோமஹர்ஷனர் எனக்குத் தெரிந்த அனைத்தையும், ஒன்றையும் மறைக்காமல் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்' என்று சொல்லிவிட்டுப் பின்வருமாறு பேசத் துவங்கினார். வெகு காலத்திற்கு முன்னர் பிரம்மனின் புத்திரனாகிய நாரதர் தம் தந்தையைப் பார்த்து, சிவ பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பிரம்மன், நாரதருக்குக் கூறியதை இப்பொழுது அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன்.
பிரபஞ்சத் தோற்றத்தின்போது எங்கும் நீரே நிறைந் திருந்தது. அதில் விஷ்ணு படுத்துறங்கிக் கொண்டிருந்தார். அவர் தொப்புளில் இருந்து பொன்னிறத்துடன் ஜொலிக்கும் தாமரைத் தண்டு ஒன்று மிக உயர்ந்து நின்றது. ஆயிரக் கணக்கான இதழ்களை உடைய அத் தாமரையில் பிரம்மன் இருந்தான். அந்த பிரம்மன் தான் யார், எங்கிருக்கிறோம், ஏன் இங்கு இருக்கிறோம் என்ற சந்தேகங்களுடன் சுற்று முற்றும் பார்த்து ஆராயத் தொடங்கினான். மெதுவாக அத் தாமரைத் தண்டைப் பிடித்துக் கீழே இறங்கிய பிரம்மன் அதைச் சுற்றி நூறு ஆண்டுகள் தேடினான். தாமரைத் தண்டின் தொடக்கத்தைக் காணமுடியவில்லை. இப்பொழுது தான் பிறந்த தாமரைப் பூவில் தான் பிறந்த நடுப்பகுதியைத் தேட முயன்றான். நூறு ஆண்டுகள் தேடியும் தான் புறப்பட்ட இடத்தை அடைய முடியவில்லை. களைத்துப் போன பிரம்மன் ஒரு இடத்தில் தங்கி ஒய்வெடுத்துக் கொண்டான். அப்பொழுது “பிரம்மனே! தவம் செய்” என்று ஒரு குரல் கேட்டது. யார் அக்குரலுக்குரியவர் என்று தெரியாவிட்டாலும் பிரம்மன் 12 ஆண்டுகள் தவம் செய்தான். தவம் முடிந்தவுடன் விஷ்ணு எதிரே நின்றார். விஷ்ணுவைப் பார்த்த பிரம்மன் நீ யார்? என்று கேட்டான். உடனே விஷ்ணு “என் கைகளைப் பார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்திக் கொண்டிருக்கும் என்னைத் தெரிய வில்லையா? நான்தான் விஷ்ணு. என்னுடைய உடம்பிலிருந்து தான் நீ தோன்றினாய்’ என்றார். அந்த வார்த்தைகளை நம்பாத பிரம்மன் விஷ்ணுவுடன் சண்டை போடத் துவங்கினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
4. வாயு புராணம் - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிரம்மன், என்றும், தான், விஷ்ணு, இப்புராணம், தாமரைத், யார், தவம், ஆண்டுகள், இப்பொழுது, இதுவும், புராணம், ஒன்று, பாடல்கள், பேசுகிறது, தெரிந்து