முன்னுரை - பதினெண் புராணங்கள்
புராணங்கள் என்ற பெயர் பழைமையானவை என்ற பொருளிலேயே இங்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் கலாச்சாரம் என்பது அந்நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலை, உணவு முறை, எண்ண ஓட்டங்கள், அவர்களின் குறிக்கோள்கள், அவர்கள் வாழ்க்கையில் கொண்ட விழுப்பொருள்கள் (Valuesin life) என்பவற்றின் ஒட்டுமொத்த தொகுதியே ஆகும். இந்தக் கலாச்சாரத்தை அறிய அந்த இனத்தின் வரலாறு, இலக்கியம் என்பவை பேருதவி புரிகின்றன. ஒரு குறிப்பிட்ட நூற்றாண்டில் தோன்றிய வரலாறு அந்த மக்கள் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வெளியிடுகின்றது. ஆனால் இலக்கியம் என்பது அந்த நிகழ்ச்சிகளுக்கு அடித்தள மாகவும், பின்னணியாகவும் உள்ள அந்த மக்களின் எண்ண ஒட்டங்கள், கருதுகோள்கள் (concepts), குறிக்கோள்கள் (aims), விழுப்பொருள்கள் என்பவற்றை விளக்க உதவுவதாகும்.
ஒரு நூற்றாண்டில் தோன்றிய இலக்கியம், அது தோன்றிய காலத்தை மட்டும் குறிக்காமல் அந்த இனத்தின் பல நூற்றாண்டு முந்தைய வாழ்வு முறையையும் படம் பிடித்துக் காட்டுகின்றது. அத்தகைய இலக்கியங்களுள் புராணமும் ஒன்றாகும்.
மேநாட்டார் மித்தாலஜி (Mythology) என்ற சொல்லால் ஒரு இனத்தின் மிகப் பழைய இலக்கியங்களைக் குறிப்பிடுவர். இதற்கு நேரான தமிழ்ச் சொல்லாக செவிவழி இலக்கியம் என்ற தொடரைப் பயன்படுத்தலாம். இத்தகைய மித்தாலஜி இலக்கியத்தை அதிகமாகப் பெற்றுள்ளது கிரேக்க மொழியாகும். சிறந்த நாகரிகங்கள் என்று இன்று கூறப்படும் கிரேக்க, உரோமானிய, எகிப்திய, மெஸ்பட்டோமிய, சுமேரிய நாகரிகங்கள் அனைத்துமே இவ்வகை இலக்கியத்தைப் பெரிதும், சிறிதுமாகப் பெற்றுள்ளன. பெரும்பாலும் தெய்வங்கள் பற்றியும், உலகத் தோற்றம் பற்றியும், அம் மக்களின் வீரவாழ்வு பற்றியும் பேசும் இயல்புடையன இவை. இவற்றை வரலாறு என்று நினைத்து ஆராய்வதில் பயனில்லை. வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்தால் இவற்றில் பெரும்பாலானவை அடிபட்டுப் போய்விடும். இத்துணை அறிவு வளர்ந்துவிட்ட இக்காலத்தில் கூடச் சமுதாய வரலாற்று ஆய்வாளர்கள் இந்த மித்தாலஜி இலக்கியங்களை ஏற்றுக் கொள்கின்றனர். இவற்றை அறிவு கொண்டு ஆராய்வதைவிட அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வது சார்புடையதாகும். இன்றைய நடைமுறை வாழ்வில் நாம் சிலவற்றை நியாயமானவை என்றும், இதுதான் முறை என்றும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறுதியிட்டு வைத்துள்ளோம். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் தொகுத்து வைத்துள்ள கதைப் பகுதிகளில் இன்று நாம் வகுத்துள்ள சட்டதிட்டங்களை ஏற்றிப் பார்ப்பது பொருத்த மற்ற செயலாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அந்த, இலக்கியம், பற்றியும், என்றும், மித்தாலஜி, தோன்றிய, வரலாறு, மக்களின், இனத்தின்