6. நாரத புராணம் - பதினெண் புராணங்கள்
இப்புராணம் 2 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி நாரதருக்குக் கூறப்பட்டதாகும். 2ஆம் பகுதி மாந்தாதா என்ற மாமன்னனுக்குக் கூறப்பட்டதாகும்.
முதற்பகுதியில் வர்ணாஸ்ரம தர்மம், ஆசாரம், சிரத்தை பிராயசித்தம் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. மேலும் வேத அங்கங்கள் ஆறு பற்றியும், சர்வதர்ஷன சங்கரகம் என்ற பெயருள்ள தத்துவங்களின் தொகுப்புப் பற்றியும் கூறுகிறது. அன்றியும் இராமன், கிருஷ்ணன், சிவன், காளி அனுமன் ஆகியவர்களின் மந்திரங்கள் பற்றியும் பேசுகிறது.
இரண்டாவது பகுதி ருக்மாங்கதன் வரலாறு, பாஞ்சராத்ரா ஆகம அடிப்படையில் வைணவர்கள் மேற்கெள்ள வேண்டிய அனுஷ்டானங்கள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது.
பல்வேறு சாத்திரங்களின் உட்பொருளைக் கூறுவதால் இந்தப் புராணம் மிக முக்கியமானதாகும். புராணங்களின் வளர்ச்சி, வரலாற்றை அறிவதற்கும், இப்புராணம் பயன்படுகிறது. மற்ற புராணங்களின் பாடல்களின் சுருக்கமான வரலாற்றை இப்புராணம் விரித்துரைக்கிறது. இதனால் அந்தந்தப் புராணங்களில் எவ்வளவு இடைச்செருகல்கள் பிற்காலத்தில் புகுந்துள்ளன என்பதை அறிய இப்புராணம் உதவுகிறது. நாரத, அக்னி, கருட புராணங்கள் மூன்றும் ஒரு களஞ்சியம் போல் பற்பல விஷயங்களையும் அறிய உதவுகின்றன. பல்வேறு சடங்குகளைச் செய்யும் முறை இப்புராணங்களில் விரித்துப் பேசப்படுகிறது. இப் புராணம் விஷ்ணுவே சிவம் என்றும், சக்தி என்றும் பேசுவதால் குறுகிய நோக்கம் உள்ள சமய நூல் அன்று என்று தெளிய உதவுகிறது.
நாரதர் பிரம்மனின் மனத்தில் பிறந்த மகனாவார். ஒயாது நாராயணனின் பெருமையைப் பாடிக்கொண்டு உலகம் சுற்றுபவராகப் பேசப்படுகிறார். கீர்த்தனைகள் என்று இன்று வழங்கப்படும் பாடல் முறையை முதலில் தோற்றுவித்தவர் நாரதரே ஆவார். எல்லா தெய்வங்கள் பற்றியும் அவர் தோற்றம், இயல்பு செயல்கள் என்பவை பற்றிக் கீர்த்தனை வடிவில் நாரதர் பாடுவதாகப் பல பாடல்கள் உள்ளன. கீர்த்தனை என்பது ஒரு தனி மனிதனின் இசைக் கச்சேரியாகும். இதன் பயன் சொல்லப்பட்ட விஷயங்கள் பொது மக்களை ஈர்க்கும் வகையில் அமைவதாகும். நாரத புராணத்தில் உள்ள கீர்த்தனைகள் பிற்காலத்தில் பவ கீர்த்தனைக்காரர் களை உருவாக்கிற்று. எழுத்தறிவில்லாதவர்கள் கூடக் கீர்த்தனைகளை இயற்றவும், செவி வழியாகக் கேட்ட கீர்த்தனைகளைப் பாடவும் பழகி இருந்தனர். கிராமம் கிராமமாகச் சென்று இறைவன் புகழ்பாடும் கிர்த்தனை களைப் பாடிப் பொதுமக்களைக் கவர்ந்தனர். இப்படிப் பாடும் இவர்களில் தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்தவர்களாகக் கூடப் பலர் இருந்தனர். இவ்வாறு பாடும் இவர்களுக்கு நாரதர்கள் என்ற பெயர் வழங்கிற்று. இதில் ஒரு வியப்பென்னவென்றால், நாரதர்கள் என்ற பெயருடன் இவர்கள் பாடும்பொழுது பிராமணர்கள் உள்பட பலரும் இவர்களை வணங்கி வரவேற்றனர். வியாசர் வால்மீகி, சுகர் ஆகிய மகான்களைப் பற்றிப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பு இந்த நாரதர்களிடையே இருந்து வந்தது. ஆதிநாரதர், வேதங்கள் முதலானவற்றின் உட்பொருளை எல்லாம் கீர்த்தனை வடிவில் வெளியிட்டதுடன் இறையன்பு, இறைபக்தி முதலியவற்றை மக்கள் மனத்தில் தோற்றுவிக்கும் பெரிய ஆசிரியராக இருந்தார். நாரத பாஞ்சராத்திரம் என்ற நூல் இறைவனுக்கு செய்யும் தொண்டைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அத்தகைய நூலின் ஆசிரியர் நாரதர் என்று சொல்லப்படுகிறது. உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பெருமுயற்சி செய்து தாங்கள் விரும்பும் பொருளை அடைய விரும்புகிறார்கள். இந்த முயற்சியின் பயன், 'பொருளை அடைவது என்றே பலரும் கருதினர். நாரத பாஞ்சராத்திரம் அடைகின்ற பயனைப் பற்றிக் கவலைப்படாமல் இறைவனிடத்து அன்பு செலுத்துவதையே பெரிதாகக் கூறுகிறது. பொருளை அடைய விரும்பி முயற்சி செய்பவர்கள் அந்த முயற்சிக்குப் பலன் கிட்டாதபோது பெரும் வருத்தமும், ஏமாற்றமும் அடைகிறார்கள், முயற்சியையே கூட விட்டு விடுகிறார்கள். இதன் எதிராக பலனைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்களைச் செய்தால், ஏமாற்றத்திற்கு வழியே இல்லை. மனமகிழ்ச்சியும் குறையப் போவதில்லை. இதனையே நாரதர் உபதேசிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
6. நாரத புராணம் - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இப்புராணம், நாரதர், பற்றியும், நாரத, பேசுகிறது, பொருளை, கீர்த்தனை, பகுதி, உள்ள