8. அக்னி புராணம் - பதினெண் புராணங்கள்
அக்னியால் வசிட்ட முனிவருக்கு உபதேசிக்கப் பட்டது இப்புராணம். ஆனால் புராணத்தினுள் சுதா முனிவர் சௌனகர் மற்றும் ரிஷிகளுக்கும் சொல்லியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாகம், அக்னியின் பெருமை, விஷ்ணு அவதாரங்கள், சிவபெருமானை நோக்கிச் செய்யும் ஞானபூஜை, பிரபஞ்ச லட்சணம், தர்மசாஸ்திரம், அரசியல், பொருளாதாரம், வானியல், சாமுத்ரிகா லட்சணம், ராஜநீதி, ஆயுர்வேதம், வாஸ்துவித்யா, தாந்திரீக வித்தைகள், மந்திர சாஸ்திரங்கள், தனுர்வேதம், நாட்டிய சாஸ்திரம், காவிய சாஸ்திரம், புராண சாஸ்திரம் முதலானவை பேசப் பட்டுள்ளன. 8000 கிரந்தங்களை உடையது.
நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய ரிஷிகள் கூடியிருந்தனர். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த சுதா அங்கு வந்து சேர்ந்தார். மற்ற முனிவர்கள் சுதாவைப் பார்த்து, 'மனிதர்களுக்குப் பிரம்மஞானத்தைத் தருவது எது? மிகச் சிறந்த பொருள் எது?’ என்று வினவினார்.
சுதா சொல்லத் தொடங்கினார்: “நான் ஒருமுறை சுகர், பைலா மற்றும் பல முனிவர்களோடு சேர்ந்து வத்ரிகா ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு வியாச முனிவரைச் சந்தித்தேன். நீங்கள் கேட்கும் இதே கேள்விகளை வியாச முனிவரிடம் கேட்டேன். அக்னி பகவானிடமிருந்து வசிட்டர் தாம் கேட்டதை வியாச முனிவருக்குச் சொல்ல, வியாச முனிவர் எங்களுக்குச் சொன்னதை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மிகச் சிறந்தது என்பது விஷ்ணுவே ஆகும். அக்னி புராணம் மிகச் சிறந்தது என்பதற்குக் காரணம், பரப் பிரம்மத்தின் சாரத்தை நன்கு எடுத்துக் கூறுகிறது. ஆகவே, வியாசர் மூலம் நான் அறிந்த அக்னி புராணத்தை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
அவதாரங்கள்
அவதாரம் என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? விஷ்ணு பல சமயங்களில் இந்த பூலோகத்திற்கு வந்து மனிதர்களாகவும், பிறவாகவும் தோன்றுகிறார். இதைத்தான் அவதாரங்கள் என்று சொல்லுகிறோம். ஏன் இப்படி விஷ்ணு அவதாரங்கள் எடுக்க வேண்டும்? உலகத்தில் துன்பம் விளைவிப்பவர்கள், கொடியவர்கள் ஆகியவர்களை அழித்து, நல்லவர்களையும், தர்மத்தையும் நிலைநாட்டவே அவதாரங்கள் தோன்றுகின்றன.
விஷ்ணு இதுவரை எடுத்தவை ஒன்பது அவதாரங்கள் ஆகும். பத்தாவது அவதாரம் எதிர்காலத்தில் தோன்றப் போவதாகும். விஷ்ணு இதுவரை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணன், புத்தன் ஆகிய அவதாரங்கள் எடுத்துள்ளார். இனி வரப் போவது கல்கி அவதாரம் ஆகும்.
1. மச்ச அவதாரம்
அக்னி, வசிட்டரிடம் அவதாரங்கள் பற்றிச் சொல்லிய தாவது: வைவஸ்வத மனு வத்ரிகா ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். கிருத்தமாலா என்ற நதிக்குச் சென்று, தூய்மைப் படுத்திக்கொண்டு அர்க்கியம் செய்வதற்காக இரண்டு கைகளிலும் நீரை எடுத்துக் கொண்டார். கைக்குள் இருந்த தண்ணிரில் ஒரு சிறிய மீன் இருந்தது. ஆற்றுக்குள் போட வேண்டும் என்று மனு நினைத்தவுடன், அந்த மீன் பேசத் தொடங்கியது: “சிறிய மீனாகிய என்னை மறுபடியும் ஆற்றில் விட்டு விடாதே! பெரிய மீன்களும், முதலைகளும் என்னை விழுங்கிவிடும். என்னை ஒரு தனி இடத்தில் வைத்து வளர்ப்பாயாக’ என்று கூறியது. இதைக் கேட்ட மனு, அந்த மீனை ஒரு பாத்திரத்தில் வைக்க உடனே அந்த மீன் பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. வேறு எதிலும் அதனை வைக்க முடியாது என்று கருதிய மனு, ஒரு குளத்தில் சென்று மீனை விட்டார். உடனே மீன் மேலும் பெரிதாக வளர்ந்து குளத்தை விடப் பெரிதானது. இறுதியாகக் கடலில் கொண்டு விட்ட பொழுது அது மேலும் பெரிதாக வளர்ந்து மிகப் பெரிய அளவாக இருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
8. அக்னி புராணம் - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவதாரங்கள், விஷ்ணு, அவதாரம், வியாச, மீன், அக்னி, என்னை, பெரிதாக, வளர்ந்து, அந்த, சாஸ்திரம், ஆகும், மிகச், சுதா