மருத்துவப் பேட்டி - முதியோர் மருத்துவ திட்டங்கள்

- பேராசிரியர் டாக்டர்.எஸ்.கே. ராஜன்
உலக மக்கள் தொகையில் முதியோரின் எண்ணிக்கை, சதவிகிதம் பற்றி பல புள்ளி விவரங்கள் உள்ளன. இந்தியாவின் மக்கள் தொகை நூறு கோடியைத் தொட்டுவிட்டது. சீனாவிலும், இந்தியாவிலும் சேர்த்து உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை அடங்குகிறது. இதில் 6 சதவிகிதம் 65 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கொண்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் கடந்த இருபது வருடங்களில் அதிகரித்துள்ளது. இதனால் 60 வயதுக்கு மேல் வாழ்வோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. 50 வருடங்களுக்கு முன் 39 வருடங்களாக இருந்து எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் என்று 63 ஆக கூடியதற்கு பெருகிவரும் மருத்துவ வசதிகள், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவையே காரணம்.
முதியோர் நலப்பிரிவு: மருத்துவத் துறையில் முதியோர் மருத்துவப்பிரிவு வளர்ந்து வரும் ஒரு பகுதியாகும். இதை முதலில் ஐரோப்பாவிலும் பின்பு அமெரிக்காவிலும் காலூன்றிய இந்தப்பிரிவு கடந்த இருபது வருடங்களில் வெகுவாக வளர்ந்து இந்த நூற்றாண்டின் மருத்துவ வளர்ச்சியில் மிகப்பெரிய உந்து சக்தியாக உருவெடுத்துள்ளது. இது இன்றைய கால கட்டத்தில் நிகழ வேண்டிய கட்டாயம் என்ன?
1. மக்கள் தொகையின் வயது வாரியான விகிதாசார அடிப்படையில் மெல்ல மெல்ல முதியோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே உள்ளது.
2. முதியோரும் சமுதாயத்தில் ஒரு அங்கம், அவர்களுடைய உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முதியோரின் மருத்துவத்தின் குறிக்கோள் வரையறுக்கப்பட்டது. அது 1. வயது முதிர்தல் பற்றியான ஆராய்ச்சியும், மருத்துவ முறைகள் செய்தல், 2. முதியவர்களின் நோய்களை அறிதல், தடுத்தல் மற்றும் நீக்கல், 3. உடல்நலம் பேணுவதில் முதியோருக்கு ஏற்படும் சமுதாய பொருளாதார சிக்கல்களை களைதல்.
எந்தத்துறையில் இருக்கும் மருத்துவரும், வயது முதிர்ந்தவுடன் செலவழிக்கும் நேரம் கூடிக்கொண்டே இருப்பதால், இந்தத்துறையை அனைத்து மருத்துவத் துறையினரும் அறிதல் அவசியமாகும். முதியோருக்கான தனி மருத்துவர்கள் முதலில் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்துவிட்டு பின்பு முதியோர் மருத்துவ பட்டப்படிப்பு அல்லது பயிற்சி முகாம்களில் பயில்கிறார்கள்.
முதியநோயாளி: முதியோர் மருத்துவத்தின் பயன் வயதையும், வாழ்நாளையும் நீட்டிப்பது மட்டுமல்ல. வாழும் நாட்கள் முழுவதும் வலியில்லா கவலையற்ற வாழ்க்கையை முதியவர்கள் வாழ வேண்டும் என்பதே முக்கியமாகும். ஆகவே நோய் வரும்முன் காப்பது, வந்தபின்னர் போக்குவது ஆகிய இரண்டுமே முக்கியமாகும். முதியவர்கள் பெரும்பாலும். 1. பல நோய்களுடன் வருகிறார்கள். 2. பெரும்பாலானவை நாள்பட்ட நோய்களாகும். 3. கண்டுபிடிக்கச் சிரமமான வகையில் உள்ள நோய்கள். 4.வெளியே தெரியாத நோய்கள். 5.மூளைத்திறன் குறைவதால் உள்ள பிரச்சினைகள் மற்றும் 6.சமூகப் பொருளாதார பிரச்சினைகளுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆகவே, ஒரு முதிய நோயாளியை கவனிக்க பல்வேறு துறை வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த வல்லுநர்கள் அனைவரும் முதியோர் நல மருத்துவர் மூலமாகவே ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்.
முதியோருக்கான மருத்துவத் திட்டங்கள்: முதியோர் நல மருத்துவத்திற்கான ஒரு சோதனைத்திட்டம் 1992-ல் நினியார்க் மாநகரில் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் பல மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் செவிலியரும் பயிற்சி பெற்றனர். ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு பெருவெற்றி பெற்ற இந்த திட்டத்தை இந்தியாவில் உள்ள சூழ்நிலைக்கேற்ப வடிவமைத்து ஒரு முன் மாதிரி திட்டமாக பயன்படுத்தலாம்.
இந்திய முதியோர் மருத்துவ திட்டம்:- ஒரு தொலை நோக்குப் பார்வை: "முதியோருக்கான தீவிர மருத்துவத் திட்டம்" அல்லது "முதியவர்களுக்கான மருத்துவ தேவைகள் ஆய்வு மையம்" போன்ற ஒரு பெயரின் கீழ் இந்த திட்டம் பெரிய அளவில் செயல்படுத்துவது அவசியம். அதில் 1.உள் நோயாளி பிரிவு, 2.வெளி நோயாளிபிரிவு, 3.ஆராய்ச்சி பிரிவு. 4.பயிற்சி பிரிவு. 5.நீண்டகால மேலாண்மை பிரிவு என்று பகுதிவாரி யாக பிரித்துக் கொண்டால் எளிதாக இருக்கும்.
இடம்: கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனையே மிகச்சரியான இடமாக விளங்கும். இங்குதான் வருங்காலத்திற்கான இளைய மருத் துவர்கள் பலரையும் முதியவர்கள் மீது ஈடுபாட்டுடன் உருவாக்குதல் சாத்தியம். பொது மருத்துத்துறையின் கீழ் இயங்கும் தனிப்பிரிவாக அந்தஸ்து அளிக்கலாம். மேன்மேலும் வளர்ச்சி அடைந்த பின்னர் இத் திட்டத்தை பிற மருத்துவமனைகளும் பின்பற்றுமாறு கூறலாம். நோயாளிகளுக்கான வயது வரம்பும், தகுதியும்:இந்தியாவைப் பொறுத்தவரையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை முதியோர்-மருத் துவம் பெறத் தகுதியானவர்களாக கருதலாம். இது இன்றைய சூழ்நிலை களைக் கருத்தில் கொண்டு கூறப்பட்டது. வருங் காலத்தில் வாழ்நாள் இன்னும் நீடித்து, சமுதாயம் இன்னும் பலம் பெறும் வேளையில் இந்த வரம்பை இன்னும் அதிகப்படுத்தி அமெரிக்காவைப் போல 65 வரை கொண்டுசெல்லலாம்.
நாள்பட்ட நோய், தீவிர நோய்கள் என எல்லா நோயாளிகளும் அனுமதிக்கப்படலாம். பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அறுவை பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும்.
உள் நோயாளி திட்டம்: 25 முதல் 40 படுக்கைகளுடன் இந்த திட்டம் ஆரம்பிக்க வேண்டும். மருத்துவ மனையின் சூழ்நிலை முதியவர் களுக்கு ஏற்றதாக அமைதல் அவசியம். உதாரணமாக,
நல்ல காற்றோட்டத்துடன் கூடிய விசாலமான அறைகள், லேசான நிறத்தில் வர்ணம் பூசப்பட வேண்டும். கண்களைக் கூசச் செய்யாத வெளிச்சம், தகவல் மையம், குடும்பத்தினருடன் கழிக்க விசாலமான அறை, வழுக்காத குளியலறைகள், வசதியான நாற்காலியும் படுக்கையும் போன்ற வசதிகள் அத்தியாவசிய மாகும். நோயாளிகள் எப்பொழுதும் தனித்தே விடப்படக்கூடாது. ஆதரவான செவிலியர்கள் மிக மிக முக்கியம்.
கண் மருத்துவம், தோல், எலும்பு முறிவு சிகிச்சை, மனநல மருத்துவர், இதய சிறப்பு மருத்துவர் போன்றபல வல்லுநர்களும் முதியோர் நல மருத்துவரின் மூலமாக நோயாளிகளை கவனித்துக் கொள்ளுதல் வேண்டும். இங்கே மிக முக்கியமான ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். இந்தத் துறையில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் காரிய தரிசிகள் என அனைவரும் ஈடுபாட்டுடனும், மன நிறைவுடனும் இப்பணியில் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் அதன் அர்த்தம் நிறைவுபெறும்.
வெளிநோயாளிகள் திட்டம்: வாரம் ஒரு நாள் வெளிநோயாளிகளுக்கு ஒதுக்கலாம். பின்பு இதனை விரிவுபடுத்தி தினந்தோறும் காலை குறிப்பிட்ட நேரம் வரை வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். இதன்மூலம் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டியவர்களின் எண்ணிக்கை கணிசமாகக்குறைந்து சிகிச்சையின் தரம் மேம்படும்.
உள்நோயாளி பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு இரண்டிலுமே மிகவும் உன்னிப்பாக தகவல்களை பதிவு செய்தல் அவசியம். பிற்காலத்தில் தேவைப்படும் தகவல் பரி மாற்றத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இது மட்டுமின்றி வேறெங்கும் நோயாளி மாற்றப்படும் பொழுதும் இந்த ஆவணங்கள் பயனுள்ளவையாக இருக்கும்.
சிறப்பு மருத்துவர்: இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் முதியோர் மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்ற மருத்துவர்கள் மிகவும் சொற்பமே. ஆனாலும் பல ஆண்டுகளாக பொதுமருத்துவத்தில் பணியாற்றி அனுபவம் வாய்ந்த பழுத்த மருத்துவர்கள் தங்கள் வாழ்நாளில் பல முதியோர்களுக்கு சிகிச்சை அளித்து, வேண்டிய அளவிற்கு பயிற்சி பெற்றவர்களாக விளங்கு கின்றார்கள். இவர்கள்தான் முதியோர் மருத்துவப் பிரிவின் இயக்குநராக பணிபுரிய வேண்டும். இவர் களுடைய வழிகாட்டுதலின் பேரில் பல இளைய மருத்துவர்கள் தகுதி வாய்ந்த முதியோர்-சிறப்பு மருத்துவர்களாகும் வாய்ப்பு உள்ளது.
பிற மருத்துவர்கள்: உதவி மருத்துவர்கள் தவிர பிற துறைகளில் வல்லுநர்களும், முதியோர் மருத்துவ இயக்குநரின் கீழ் ஒருங்கிணைந்து பணி செய்தல் அவசியம். நரம்பியல், இதய இயல், சிறுநீரக இயல், புற்றுநோயியல், குடல் மருத்துவம், கண் மருத்துவம் போன்றவர்களின் செயல்பாடு மிகவும் அவசியமாகும். முதியோர்களை பொறுத்தவரை மிகமிக முக்கியமான மற்றும் அவசியம் நிறைந்த துறை மனநல மருத்துவத் துறை யாகும். முதியோர் மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்ற மனநல மருத்துவர்கள் ஒவ்வொரு முதியோர் நல மருத்துவமனைக்கும் மிகவும் அவசியமாகும்.
எதிர்காலம்: இந்தத்துறையைப் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரிவு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். முதியோர் மருத்துவர்களை தேடி மக்களை வரவழைக்க இத்துறையைப் பற்றிய செய்திகளை பத்திரிகைகள், தொலைக்காட்சி, பொதுவிழாக்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்வது அவசியம். குழந்தை நல மருத்துவம் படிப்படியாக வளர்ந்ததைப் போல முதியோர் நல மருத்துவமும் வளர்வதற்கான காரணங்கள் பலவும் சாதகமாக உள்ளன என்று அசார்டு எனும் அறிஞர் கூறுகிறார்.
"முதியோர் நல வாழ்வு சார்ந்த மருத்துவமுறைகள் மற்றும் திட்டங்கள் 21-ம் நூற்றாண்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஆகவே அதற்கு ஏற்றவாறு நாம் பொதுமருத்துவத் துறையை தயார்படுத்திக் கொண்டு புதிய செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்".
எதிர்காலம் ஒளிமயமானது. அதனை சேர்ந்து எதிர்கொள்ள வாருங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதியோர் மருத்துவ திட்டங்கள் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - முதியோர், அவசியம், மருத்துவர்கள், மருத்துவ, வேண்டும், பிரிவு, மிகவும், பயிற்சி, திட்டம், சிகிச்சை, மருத்துவத், சிறப்பு, மக்கள், மருத்துவர், வயது, மருத்துவம், இருக்கும், எண்ணிக்கை, நோயாளி, கீழ், ", கொண்டு, நோயாளிகள், இன்னும், மனநல, வெளி, உள்ள, அவசியமாகும், முதியோருக்கான, செய்தல், வேண்டியது, பின்பு, இன்றைய, முதியோரின், மருத்துவத்தில், நோய்கள், துறை, வாழ்நாள், ஆகவே, முதியவர்கள், பெற்ற