மருத்துவப் பேட்டி - வலியில்லா பிரசவம்...

- Dr. தமிழிசை சௌந்தர்ராஜன் MBBs., DGO
இன்றைய நாட்களில் நார்மல் டெலிவரி என்பது அரிதாகி வருவது எதனால்?
நீங்கள் குறிப்பிட்டு கேட்பது மாதிரி நார்மல் டெலிவரி என்பது அரிதாகி அளவுக்கு அதிகமான அளவில் சிசேரியன் பிரசவம் மட்டுமே நிகழ்கிறது என்று சொல்வது உண்மையல்ல. இரண்டு வகையான பிரசவமும் நிகழ்கிறது. முன்பு சிசேரியன் என்பது குறைவாக இருந்தது... இப்போது கொஞ்சம் கூடுதலாகி இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். எல்லா பிரசவமும் சிசேரியன்தான் என்று சொல்வதற்கில்லை. முன்பு நம் முன்னோர்கள் உடலை வருத்தி நிறைய வேலைகளை செய்து வந்தார்கள். பெரும்பாலானவர்கள் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார்கள். பிரசவத்தை தாங்குகின்ற பலமிக்கவர்களாகவும் இருந்தார்கள். எனவே அந்நாட்களில் நார்மல் டெலிவரி என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. எனினும் பிரசவத்தில் தாய் இறப்பது குழந்தை இறப்பது என்பதும் அப்போதுதான் இருந்தது. இன்றைய நாட்களில் பிரசவத்தில் இறப்பது என்பது மிக மிக அரிதான ஒன்றாகி விட்டதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டும்.
சரி.... சிசேரியன் என்பது எந்த தருணங்களில் தவிர்க்க முடியாததாக மேற் கொள்ளப்படுகிறது? திட்டமிட்டே சிசேரியன் செய்யப்படுகிறதா?
உண்மையில் எந்த மகப்பேறு மருத்துவரும் திட்டமிட்டு பணத்திற்காக சிசேரியன் செய்வது கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இக்கட்டான சூழ்நிலையில்தான் ஒரு மகப்பேறு மருத்துவர் சிசேரியன் செய்ய முன்வருவார். இது என்ன இக்கட்டான தருணங்கள்?
உதாரணமாக - அம்மாவிடமிருந்து குழந்தைக்கு உணவு செல்லும் நஞ்சுக் கொடி (பிளசண்டா) கர்ப்பப்பையின் மேல்பகுதியில் இருக்க வேண்டும். அதற்கு மாறாக கர்ப்பப்பையின் வாயிலில் இருந்தால் கர்ப்பப்பை விரிய விரிய... பிரசவத்தின்போது முதலில் குழந்தை வருவதற்கு முன்னர் நஞ்சுக் கொடி வந்து விடும். இதனால் குழந்தை இறந்து விடும். இது மாதிரியான தருணங்களில்தான் ஸ்கேன் எடுத்துப் பார்த்து சிசேரியன் தான் குழந்தையை காப்பாற்றும் வழி என்பதனால் சிசேரியனை மேற்கொள்வார்கள். தாயின் வயிற்றில் குழந்தையை சுற்றியிருக்கும் பனிக்குட நீர் சில சமயம் வற்றிவிடலாம். இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படலாம். இதனை முன்கூட்டியே ஸ்கேன் எடுத்துப்பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை காப்பாற்றி விடுவார்கள். அந்தக்கால பெண்கள் மாதிரி இன்றைய பெண்கள் அதிகம் வேலைகள் செய்வதில்லை. மேலும் இன்றைய பெண்களில் சிலருக்கு இடுப்பு எலும்புகள் குறுகலாக இருக்கிறது. இவர்களுக்கு குழந்தை நார்மல் டெலிவரியில் பிறக்க இயலாத போது சிசேரியன் தேவைப்படும். இன்னும் சிலருக்கு தாயின் கருவில் குழந்தை குறுக்காக இருந்தாலும் சிசேரியன் தேவைப்படும். கருவில் இருக்கிற குழந்தையின் வளர்ச்சி சீராக இல்லாமல் போனாலும் நார்மல் டெலிவரி உகந்த தில்லை. இதனாலும் சிசேரியன் தேவைப்படும். இதுபோலவே வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருக்கின்ற தருணங்களிலும் சிசேரியன் தேவைப்படும்.
ஸ்கேன் எடுப்பது ஆபத்தானதா? சில மருத்துவர்கள் அடிக்கடி ஸ்கேன் எடுக்க சொல்கிறார்களே.... இதை தவிர்க்க முடியாதா?
மகப்பேறு மருத்துவத்தில் தவிர்க்க முடியாத நல்ல அம்சமாகவே ஸ்கேனை கருத வேண்டும். இதற்கு மாறாக மக்கள் மத்தியில் இன்னமும் ஸ்கேன் பற்றி பல்வேறு மருத்துவ மூடநம்பிக்கை உள்ளது. ஸ்கேன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை படியுங்கள். உங்களுக்கு உண்மை புரியும். காதுக்கு கேட்க முடியாத நுண்ணிய ஒலியலைகளை (அல்ட்ரா சவுண்ட்) கொண்டுதான் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதில் ஒளிக்கதிர்கள் (ரேடியேஷன்) பயன்படுத்தப்படுவதில்லை. எனவே ஸ்கேன் செய்வதினால் எந்த ஆபத்தும் வருவதற்கில்லை. இன்று ஸ்கேன் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. முன்பு அதாவது-ஸ்கேன் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பு வயிற்று வலி என்று ஒருவர் துடித்தால் வயிற்றில் என்ன கோளாறு என்று தெரிந்து கொள்ள வயிற்றை ஆபரேஷன் செய்து பார்ப்பார்கள். இதற்கு எமர்ஜென்ஸி லேப்ராட்டமி என்று பெயர். இந்த தேவையற்ற ஆபரேஷன்கள் எல்லாம் ஸ்கேன் வந்த பிறகு முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிட்டது. இன்னொரு உதாரணம்-கிட்னி பாதிப்பு என்று வருகிறபோது கிட்னி நிரந்தரமாக பாதித்துள்ளதா? தற்காலிகமாக பாதித்துள்ளதா? என்பதை கண்டறிந்து குணப்படுத்த ஸ்கேன் பெரிதும் பயன்படுகிறது. தற்காலிகம் என்றால் கிட்னி வீங்கியிருப்பது ஸ்கேனில் தெரியும். நிரந்தர பாதிப்பு என்றால் கிட்னி சுருங்கியிருப்பது ஸ்கேன் காட்டிக் கொடுத்து விடும். இதனால் பொருத்தமான சிகிச்சையை உரிய நேரத்தில் செய்ய நேரிடும். நோயாளிக்கு நிறைய நன்மை செய்கிற எந்தவிதத்திலும் தீமையோ, துன்பமோ தராத சோதனை தான் ஸ்கேன் ஆகும். இன்று சாதாரண ஸ்கேன் என்கின்ற நிலைமை மாறி இன்டர் வென்ஷ்னல் சோனாலஜி என்கின்ற அளவிற்கு அதிநவீன ஸ்கேன் எல்லாம் வந்து விட்டது.
இன்டர்வென்ஷ்னல் சோனாலஜி என்கின்ற அதிநவீன ஸ்கேனின் நன்மைகள் என்ன?
தாயின் ரத்தம் ஆர்.ஹெச். நெகட்டிவாக இருந்து குழந்தைக்கு ரத்த வகை ஆர்.ஹெச் பாஸிட்டிவாக இருந்தால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்க நேரிடலாம். இதனை ஸ்கேன் எடுத்து பார்ப்பதன் மூலம் கண்டறிந்து குழந்தைக்கு வெளியிலிருந்து ரத்தம் கொடுத்து, குழந்தையின் ரத்த சோகையை குணப்படுத்தி குழந்தையை காப்பாற்றி விடலாம். இன்னும் சில குழந்தைக்கு சிறுநீர் வரும் பாதையில் அடைப்பு இருக்கலாம் இதனால் சிறுநீரகம் வீங்கிவிடும். இதனை ஸ்கேன் மூலம் கண்டறிந்து அடைப்பை நீக்கி விடலாம். சில குடும்பத்தில் பரம்பரையாக சில குறைபாடு இருக்கலாம். அதுபோன்ற சூழ் நிலையில் தொப்புள் கொடியிலிருந்து ரத்தம் எடுத்து இரத்த சோதனை செய்து குழந்தை சீராக இருந்தால் பெற்றுக் கொள்ளலாம் இல்லையெனில் தவிர்த்து விடலாம்.
மூளை வளர்ச்சி குறைந்த குழந்தையை கர்ப்பத்திலேயே ஸ்கேன் மூலம் கண்டறிய முடியுமா?
முதலில் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை பிறக்க காரணத்தை கண்டு கொள்ளுங்கள். டவுன் ஸிண்ட்ரோம் என்கின்ற மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை பிறக்க மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். அல்லது பிரசவத்தில் சிக்கல், குழந்தை வெளிவர தாமதமாவது, பிறந்தவுடன் குழந்தை அழாமல் இருப்பது, கால தாமதமான திருமணம், பரம்பரை போன்ற காரணங்களாலும் டவுன் ஸிண்ட்ரோம் குழந்தை பிறக்கலாம். ரத்த குரோமோசோம்களில் இருக்கும் மரபணு குறைபாடு ஸ்கேனில் தெரிவதில்லை. எனவேதான் டவுன் ஸிண்ட்ரோம் குழந்தைகளை கர்ப்பத்திலேயே கண்டறிந்து அதன் பிறப்பை தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. சில சமயம் அரிதாக சில தாய்மார்களுக்கு ஸ்கேனில் -டவுன் ஸிண்ட்ரோமாக இருக்கலாமோ என்கின்ற சந்தேகத்தை உண்டுபண்ணுகிற அறிகுறிகள் தெரியலாம். அதாவது குழந்தையின் கழுத்து பாகம் தடிமனாக இருப்பது போல தோன்றும். சந்தேக அறிகுறி தெரிந்தால் உடனே தொப்புள் கொடியிலிருந்து ரத்தம் எடுத்துப்பார்த்து சோதித்து விடலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் டவுன் ஸிண்ட்ரோம் ஸ்கேனில் தெரிவதில்லை என்பதுதான் உண்மை.
வலியில்லாத பிரசவம் சாத்தியமா?
சாத்தியமட்டுமல்ல அது நடைமுறைக்கும் வந்துவிட்டது. இன்றைய நாட்களில் எல்லா பணிகளையும் மிக எளிதாக வலிக்காமல் செய்து முடிக்கத்தான் மக்கள் ஆசைபடுகிறார்கள். மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிற பிரசவமும் எளிதாக இருந்தால் நல்லது என்று மக்கள் நினைப்பதை நிறைவேற்றுவது மாதிரி மருத்துவ விஞ்ஞானம் இன்றைக்கு வலியில்லாத பிரசவத்தை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டது. பிரசவத்தின்போது முதுகு தண்டிலிருந்து சில நரம்புகள் கர்ப்பப்பைக்கு போய், கர்ப்பப்பையின் சுருங்கி விரிகின்ற போது ஏற்படும் வலியை மூளைக்கு தெரிவிக்கும். இந்த நரம்புகளின் வலி உணர்வை மட்டும் எபிடூரல் அனஸ்தீஸியா என்பது மூலம் உணர்விழக்க வைத்து வலியில்லாமல் பிரசவிக்கும் முறையை இன்றைய மருத்துவ விஞ்ஞானம் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இன்றைய நாட்களில் தமிழகத்தில் சில பெரிய மருத்துவ மனைகளில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நார்மல் டெலிவரிதான். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. பக்க விளைவுகளும் இல்லை. ஒரே ஒரு விஷயம் பின்னாட்களில் தாய்மையின் வலியை பெண்கள் உணருவதற்கும், அதன் முக்கியத்துவத்தினை மனதில் கொள்வதற்கும் வாய்ப்பிருக்காது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வலியில்லா பிரசவம்... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - ஸ்கேன், சிசேரியன், குழந்தை, என்பது, இன்றைய, நார்மல், இதனால், குழந்தையை, டவுன், செய்து, என்கின்ற, குழந்தைக்கு, ரத்தம், நாட்களில், இருந்தால், மருத்துவ, கிட்னி, கண்டறிந்து, தேவைப்படும், ஸ்கேனில், மூலம், முன்பு, ஸிண்ட்ரோம், டெலிவரி, தவிர்க்க, எந்த, விடலாம், வளர்ச்சி, மக்கள், இருக்கலாம், மூளை, குறைந்த, ரத்த, தாயின், மகப்பேறு, என்பதை, வேண்டும், இறப்பது, பிரசவமும், பிரசவத்தில், என்ன, கர்ப்பப்பையின், பெண்கள், பிறக்க, இதனை, வயிற்றில், விடும், மாதிரி, குழந்தையின்