மருத்துவப் பேட்டி - காதை கொஞ்சம் கொடுங்க...!
- மருத்துவ நிபுணர் டாக்டர் ரவி ராமலிங்கம்
பிறவி காது கேளாமை எதனால் ஏற்படுகிறது டாக்டர்?
தாயின் வயிற்றில் குழந்தையாக இருக்கும் போது நமக்கு ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் மீசில்ஸ் என்றழைக்கப்படுகின்ற தட்டம்மை, மூளை காய்ச்சல் மற்றும் கருவுற்று இருக்கும் பெண்களின் வயிற்றில் ஏற்படுகின்ற காயங்கள் போன்றவை எல்லாம் பிறவி காது கேளாமைக்கு வித்திடலாம். சில குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் கணவன் - மனைவி இருவருக்குமிடையே ரத்தப் பொருத்தம் இல்லாவிட்டாலும் பிறவி காது கேளாமை ஏற்படும்.
நன்றாக கேட்டுக் கொண்டிருந்த காது திடீர் என்று சிலருக்கு கேட்காமல் போவது ஏன்?
குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மம்ஸ் என்றழைக்கப்படும் பொன்னுக்கு வீங்கி, காச நோய் போன்றவை பாதியில் காது கேளாமைக்கு காரணமாக அமையலாம். மேற்சொன்ன பாதிப்புகளின் போது ஸ்ட்ரப் டோமைஸின் மருந்தை அதிக அளவில் எடுத்து கொள்வதனாலும்கூட பாதியில் காது கேளாமை ஏற்படலாம். அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டு அது காதுகளில் பரவி நீர் கோர்த்துக் கொண்டு காதில் சீழ் வடிவதினாலும் கூட பாதியில் காது கேளாமை ஏற்படலாம்.
காதில் வருகிற மீனியர்ஸ் பாதிப்பு என்பது என்ன?
காது நோய்களுள் முக்கியமானது மீனியர்ஸ் நோய். உட்காதில் வரும் இது மீனியர்ஸ் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டதால் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. இந்நோயால் மயக்கமும், நிலை தடுமாற்றமும் ஏற்படும். முதலில் மூளையால் தான் மயக்கம் ஏற்படுகிறது என்று மருத்துவ உலகம் எண்ணிக்கொண்டு இருந்தது. மீனியர்ஸின் ஆய்வின்போது மயக்க நோயாளி ஒருவர் இறந்துவிட்டார். பிணப் பரிசோதனையின் போது நோயாளியின் உட்காதில் நோய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர்தான் அவரது இறப்புக்கு காரணம் காதுநோய் என்பது தெரிய வந்தது. அதிலிருந்துதான் வியப்பூட்டும் விதத்தில் உட்காதின் செயல்பாடுகளையும், அதன் பாதிப்பால் ஏற்படும் நோய் களையும் ஆய்வு செய்ய ஆரம்பித்தார். காதுகேளாமை, காது இரைச்சல், மயக்கம் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் மீனியர்ஸ் நோய்
மீனியர்ஸ் நோய் உண்டாவதற்கான காரணங்கள் என்ன?
1. உடலில் அதிகளவு சோடியம் உப்பு சேருவதாலும் உண்டாகிறது.
2. வைட்டமின் சத்துக்குறைவாலும் இது வரக்காரணமாகலாம்.
3. மனிதரின் உணர்ச்சி தான் மீனியர்ஸ”க்கு முதற்காரணம். பெண்களுக்கு மாத விலக்கு மாறுதலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
4. ஒவ்வாமையும், நாளமில்லா சுரப்பிகளின் கட்டுப்பாடு மாறுவதாலும் இந்த நோய் ஒருவரைத் தாக்கலாம்.
உள்காது பாதிப்பு ஏற்படுவது எதனால்?
உள்காதினுள் - அதிகமான நீர் சுரப்பு ஏற்படுகிறது. சுரந்த நீர் சரியாக வடியாமல் தேங்குகிறது. அவ்வாறு நீர் தேங்கும்போது உள்காதின் நல்ல நிலையில் உள்ள நுண் உறுப்புகளை அழுத்துகிறது. அதனால் அவை செயலிழந்து விடுகின்றன. ஆதலால், உள் காதில் நோய் ஏற்படுகிறது. இப்படி காதில் நீர் அதிகமாக தேங்கும் போது ஒரு நிலையில் உள்காது சவ்வு உடைந்துவிடுகிறது. நோயிலிருந்து விடுதலை ஏற்பட்டாலும் நோயினால் ஏற்பட்ட காது மந்தம் நீங்குவது இல்லை.
மீனியர்ஸ் நோய்க்கு என்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?
இவர்களுக்கு மத்திய நரம்பு மண்டலத்தை சோதனை செய்ய வேண்டும். ஏனெனில் காது, மூளை நரம்பின் கட்டிகள் மீனியர்ஸ் போன்று தோன்றலாம். காதினுள் குளிர்ந்த நீரை பீச்சும் போது உள்காது நீர் தட்ப வெப்பநிலை மாற்றத்தால் உள்ளேயே சுற்றத் தொடங்குகிறது. இதனால் விழிக்கோள அசைவு ஏற்படும். திடீரென காதினுள் குளிர்ந்த நீரோ, வெந் நீரோ படுவதால்கூட இந்த நிலை ஏற்படலாம். உணர்வு நரம்பு கேளாத் தன்மையை காட்டும் மற்றும் ஒலியின் திறனைக் கூட்டும்போது செவிட்டுத் தன்மையின் அசைவு அதே விகிதத்தில் கூடுவது இல்லை. ஏனெனில் எஞ்சியுள்ள ஒன்று இரண்டு உள்காதின் இறுதி உறுப்புகள் திறமையான ஒலியி னால் தூண்டப்பட்டு அதிக இரைச்சல் உள்ள நிலையில் நன்றாக காது கேட்க ஏதுவாகிறது. இதனால்தான் மீனியர்ஸ் நோய் உள்ளவர்கள் அதிக இரைச்சல் உள்ள இடத்தில் நன்றாக காது கேட்க ஏதுவாகிறது.
மீனியர்ஸ் நோய்க்கு என்ன சிகிச்சை டாக்டர்?
நோயாளிக்கு மயக்கமாக இருந்தால் தூக்க மருந்து கொடுத்து ஓய்வு கொள்ள சொல்லலாம். தலையை ஆட்டாமல் வைத்து இருந்தால் நோயின் தீவிரத்தன்மை குறைந்துவிடும். மேலும் உள்காதை மந்தப்படுத்தும் மருந்துகளை கொடுத்தல் வேண்டும். உள்காதின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நீர்போக்கி மருந்துகளை கொடுக்க வேண்டும். இவர்கள் உப்பும், நீரும் குறைவாக உட்கொள்ள வேண்டும்.
மயக்கத்தின் காரணமாக ஓயாத தொல்லையும், காது கேட்க வில்லை எனில் ஸ்டெப்டோமைசின் ஊசியை போட்டு காதின் இச்செயலை இழக்க செய்யலாம். உள்காதின் அறுவையின் மூலம் மயக்கத்தை ஏற்படுத்தும் நரம்பை மட்டும் துண்டித்து விடலாம். அதற்கு லேசர் அறுவை கலன் தேவைப்படும். சிறு ஆபரேஷன் மூலம் காதில் நீர் சேருமிடத்தில் ஒரு வழிகாலை ஏற்படுத்தினால் மீனியர்ஸ் நோய் சரியாகிவிடும்.
காது மந்தமாக கேட்க என்ன காரணம்?
நடுச்செவிக்கும், தொண்டைக்கும் பாலமாக அமையும் ஈஸ்ட் டேசியன் குழாய் மூலமாக சளி கிருமியோ அல்லது சளியோடு சேர்ந்து அழற்சியோ தொண்டையிலிருந்து நடுச்செவியை அடை யும். அங்கே அழற்சியால் நீர்க் கோவை ஏற்பட்டு அதிர் வலை கள் தடைபடுவதால் காது மந்தம் ஏற்படுகின்றது. இது நமது தொண்டையில் இயல்பாக அமைந்திருக்கும் டான்சில் சதையும், அடினாய்டு சதையும் நாள்பட்ட அழற்சியால் தாக்கப்பட்டாலும் நடுச் செவி நீர்க்கோவை ஏற்பட்டு காது மந்தம் ஏற்படும். இந்த பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் படிப்பிலும் மந்தமாகவே இருக்கும்.
சத்தமான இடங்களில் வசிப்பவர்களுக்கு என்ன ஆலோசனை களை தருகிறீர்கள்?
நாம் வாழ்கின்ற காலக் கட்டம் சத்தங்கள் நிறைந்த காலக் கட்டம். தொழிற் சாலைகள், போக்குவரத்து வாகனங்களின் சத்தங்கள், ஆலை சங்கொலிகள், ரேடியோ, தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற சத்தத்திலிருந்து நமது காதை பாதுகாத்துக் கொள்ள நாம் அரும்பாடு பட வேண்டியிருக்கின்றது. உதாரணத்திற்கு தொழிற் சாலைகளில் பணிபுரிவோர்கள் சாதாரணமாக தொடர்ந்து எட்டுமணி நேரத்திற்கு குறைவாக 90 டெஸிபல் வரை உள்ள சத்தத்தை கேட்கலாம். சந்தர்ப்பவசமாக 100 டெஸிபல் உள்ள சத்தத்தை கேட்க வேண்டி வந்தால் இரண்டு மணி நேரத் திற்கு மேல் தொடர்ந்து கேட்கக் கூடாது. இதற்கு மேல் 115 டெஸிபல் சத்தத்தை கேட்கும்படியாக இருந்தால் 15 நிமிடம் வரை கேட்கலாம்.
அதற்கு மேலாக கண்டிப்பாக கேட்கக்கூடாது. தொடர்ந்து அதிக சத்தத்தில் பணிபுரிய வேண்டியிருந்தால் காது அடைப்பான்களை பொருத்திக் கொள்வது நல்லது.
காதை அடிக்கடி குடையலாமா?
காதை சுத்தப்படுத்தவேண்டும் என்கிற தேவையே இல்லை. ஒரு சிலர் எப்போதும் காதை குடைந்து கொண்டே இருப்பார்கள். காதை நீங்களே சுத்தப்படுத்தவேண்டிய அவசியமே கிடையாது. நம்முடைய உடம்பில் சேருகின்ற செக்ரியேஷன் என்கிற மிச்சங்கள்தான் வேக்ஸ் மெழுகு மாதிரியாக மாறுகிறது. இந்த மெழுகை சுத்தப்படுத்த வேண்டியதில்லை.
வயதானவர்களுக்கு காதின் கேட்கும் உணர்வு சற்றே குறைவாக இருப்பது போல இருப்பது ஏன்?
காதில் உணர்வு குறைவு ஏற்படுவதும் ஒரு காது பிரச்சினை யாகும். இது வயது அதிகரிப்பதனால் ஏற்படுகிற பாதிப்பாகும். 75 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு முதுமையில் இந்த பாதிப்பு ஏற்படலாம். பெண்களைவிட ஆண்கள்தான் இத்தகைய காது கேட்கும் உணர்வு குறைபாட்டை அடைகிறார்கள். காதில் உள் பகுதியில் ஏற்படும் சேதம், ஒலி அலைகளை மாற்றித் தரும் நரம்புகளில் ஏற்படும் சேதத்தைத்தான் உணர்வு குறைபாடு என்கிறோம். இதனை சரி செய்வது முடியாது. ஆனால் காதில் அழுக்கு, காதில் புண், கட்டி, காதில் அந்நியப் பொருட்கள் சிக்கியிருத்தல் போன்ற காரணங்களால் காது கேட்கும் திறன் குறைந்திருந்தால் அதனை தகுந்த சோதனைகளை கையாண்டு அதற்குரிய சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதை கொஞ்சம் கொடுங்க...! - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - காது, காதில், நோய், மீனியர்ஸ், நீர், ஏற்படும், என்ன, உள்ள, உணர்வு, கேட்க, போது, காதை, வேண்டும், கேளாமை, உள்காதின், ஏற்படுகிறது, ஏற்படலாம், காய்ச்சல், அதிக, இல்லை, மூலம், சத்தத்தை, கேட்கும், டெஸிபல், தொடர்ந்து, குறைவாக, மந்தம், இருந்தால், பாதிப்பு, நன்றாக, பாதியில், ஏற்படுகின்ற, இருக்கும், பிறவி, காரணமாக, ஏற்பட்டு, உள்காது, இரைச்சல், செய்ய, டாக்டர், நிலையில்