மருத்துவப் பேட்டி - காலராவை தவிர்க்க...
- டாக்டர். ஜெயவேலன், ஐ.ஐ.டி.
முன்னேறிய நாடுகள் காலராவால் பாதிக்கப்படுவது அபூர்வம். இந்திய துணைக்கண்டத்திலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் தான் இது அதிகமாக பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
காலராவால் உயிரிழந்தவர்கள் உண்டு. அதே சமயம் அதைத் தடுக்கவும் முடியும் என்பது சந்தோஷமான செய்தி.
காலரா என்பது ஒரு வகை பாக்டீரியாவால் உண்டாகும் நோய். காலராவினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர பேதி, வாந்தி என்று தொடங்கி உடலில் உள்ள திரவங்கள் எல்லாம் வெகுவேகமாக வெளியேறிவிடுகின்றன. சரியான சிகிச்சையைச் செய்யாவிட்டால் மரணத்துக்கும் தயாராக வேண்டியதுதான்.
சிகிச்சை இருக்கட்டும். தடுப்பது எப்படி?
அசுத்தமான இடங்களில் உணவு சாப்பிட வேண்டாம். எப்போதும் கொதிக்கவைத்த தண்ணீரையே பருகவேண்டும். தேனீர் அல்லது காபி என்றால் ஓ.கே. குளிர்பானங்கள் அருந்த வேண்டுமென்றால் அதில் ஐஸ் போட்டுக் குடிக்க வேண்டாம். காரணம், அந்த ஐஸில் கூட இந்த பாக்டீரியா வஞ்சத்தோடு காத்துக் கொண்டிருக்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்குப் பழங்கள் நல்லதுதான். ஆனால் தெருவில் உரித்து அல்லது அரிந்து விற்கப்படும் பழங்கள் வேண்டாமே. நீங்களே உரித்துச் சாப்பிடும் பழங்களுக்கு மட்டுமே அனுமதி என்று வைத்துவிடுங்கள்.
நான்கு நாட்கள் வெளியூர் போனால் சாப்பாடு என்பது கொஞ்சம் முன்னே பின்னேதானே இருக்க முடியும் என்கிறீர்களா? நியாயம்தான். ஆனால் வெளியிடங்களில் சாப்பிடும் போது சூடான உணவை மட்டுமே சாப்பிடுங்கள். கேரட், வெள்ளரி, முள்ளங்கி, வெங்காயம் போன்ற காய்கறிகள் சாலட் நல்லது என்பார்கள். ஆனால் இந்த வெஜிடபிள் சாலட்டை ஒரு போதும் வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம். அவற்றை சரியாகக் கழுவியிருக்கவில்லையென்றால் சத்தமில்லாமல் பாக்டீரியாக்களும் சேர்ந்து நம் வயிற்றுக்குள் போய்விடும்.
நீங்களும் உங்கள் குழந்தைகளுமாக ஒரு விஷயத்தில் உறுதியாக இருங்கள். தெருவில் விற்கப்படும் எந்தவகை உணவுப்பொருட்களையும் உட்கொள்ள வேண்டாம். அது காலராவுக்கு நீட்டப்படும் அழைப்பிதழாக இருக்க வாய்ப்பு உண்டு.
இதெல்லாம் எதற்கு? காலராவுக்கு தடுப்பூசி இல்லையா? இருக்கிறது. ஆனால் அது நீண்ட காலத்துக்கு காலராவுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று கூறமுடியவில்லை. மேலும் சிறப்பான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை மேலே கூறிய ஆலோசனைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலராவை தவிர்க்க... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - வேண்டாம், காலராவுக்கு, என்பது