மருத்துவப் பேட்டி - ஜலதோசம்: வரும் முன் காப்போம்
- டாக்டர். ஜெயவேலன், ஐ.ஐ.டி.
எதெதற்கோ தடுப்பு ஊசி கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஜலதோஷத்துக்கு மட்டும் தீர்வே இல்லையா? என்று நீங்கள் பொருமித்தீர்த்திருக்கலாம். ஜலதோஷத்திற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சுலபமல்ல. காரணம், எட்டு வேறுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த இருநூறுவகை வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தடுப்பதற்கும் சரி, குணமாவதற்கும் சரி, வைட்டமின் சி ஜலதோஷத்துக்கு மிகவும் ஏற்றது என்பது ஓரளவு உண்மை. அதற்காக வைட்டமின் சி மாத்திரைகளை எக்கச்சக்கமாக விழுங்கித் தள்ள வேண்டாம். இந்தச் சத்துக்களில் பெரும்பகுதி சிறுநீர் வழியாக வெளியேறிவிடுகிறது. தவிர, அதிக வைட்டமின் சி மாத்திரைகள் சிலசமயம் சிறுநீரகக் கற்கள் உண்டாவதற்கும் காரணமாக அமையலாம்.
புகைப்பவர்கள், குறைந்தது மழை சீஸனிலாவது, அதை நிறுத்திக்கொள்வது நல்லது. நமது மூச்சுக்குழாயில் சீலியா எனப்படும் மிக மெல்லிய ரோமங்கள் உண்டு. தொற்று நோய்க்கு எதிராகப் போராடுவதில் இவற்றுக்கு முக்கிய பங்குண்டு. சிகரெட் பழக்கம் இந்த ரோமங்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன. நாமே சிகரெட் பிடித்தால் தான் என்றில்லை. மற்றவர்கள் விடும் புகையை சுவாசித்தாலும் இந்தப் பாதிப்பு உண்டு.
நல்ல காற்றோட்டமான சூழ்நிலையில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் கிருமிகள் நிறைந்த அசுத்தக் காற்று மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சுற்றி ஜலதோஷத்துக்கு வழிவகுக்கும்.
கைகளை அடிக்கடி கழுவுங்கள். அதுவும் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தால் இதை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜலதோஷம் பிடித்த ஒருவர் பயன்படுத்திய பேனா, தொலைபேசி ஆகியவற்றைக் கூட அவருடைய ஜலதோஷம் நீங்கும் வரையில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று கேட்டால், வேறு வழியில்லாதபட்சத்தில், கைக்குட்டையைப் பயன்படுத்தி அவற்றை உபயோகிக்கப் பாருங்கள்.
ஜாலியாக இருங்கள். ஜலதோஷக் கிருமிகள் உங்களோடு டூ விட்டுவிட வாய்ப்புண்டு. மற்றவர்களைவிட மனஇறுக்கத்தோடு இருப்பவர்களை ஜலதோஷக் கிருமிகள் தாக்கும் வாய்ப்பு நூறு சதவிகிதம் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜலதோசம்: வரும் முன் காப்போம் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - கிருமிகள், வைட்டமின், ஜலதோஷத்துக்கு