மருத்துவப் பேட்டி - குடல் அடைப்புக்கான அறிகுறி; பாதிப்பு
- டாக்டர். ச. சம்பத்குமார்
குடலின் உட்புறம் புதிய சதைவளர்வு காரணமாகவோ, குடலின் செயலிழப்பு காரணமாகவோ குடலின் வழியாக உணவுப் பொருட்கள் மேற்கொண்டு போக இயலாமல் ஒரு இடத்தில் தடைபட்டு நிற்பதை தீவிரக் குடல் அடைப்பு நோய் என்கிறோம்.
காரணங்கள்
1. குடலின் உட்புறக்கூடு நெருங்கிச் சுருங்கி விடுவதால் குடல் அடைப்பு ஏற்படுகிறது. குடலினுள் கல் உற்பத்தியானால் குடல் அடைப்பு ஏற்படும். பித்தக்கல், குடலின் உட்புறம் தங்கி தன்னைச் சுற்றி வேதியியல் படிவுகளை ஏற்படுத்திக் கொண்டாலும் குடல் அடைப்பு ஏற்படலாம். பெரிய சீரணிக்க இயலாத மரத்துண்டு, கல், உலோகத்துண்டு, கண்ணாடி போன்றவற்றைத் தவறுதலாக விழுங்கிவிட்டாலும், குடல் அடைப்பு ஏற்படலாம். குடற்கற்கள் உற்பத்தியானாலும் குடல் அடைப்பு ஏற்படும். பிறந்த சிசுக்களின் குடலில் இருந்து கருப்பாக வெளியாகும் முதல் மலம் கெட்டிப்பட்டு வெளியாகாமல் இருந்தாலும் குடல் அடைப்பு நிகழலாம். நாக்குப் பூச்சிகள் பந்து போல உருட்டிக் கொண்டு குடலின் உட்புறத்தை அடைத்துவிடுவதாலும் தீவிர குடல் அடைப்பு நிகழலாம்.
2. பிறவியிலேயே குடலின் உட்புற வளைவு ஏதாவது ஒரு இடத்தில் வட்டவடிவமாக அமையாமல் சுருங்கி இருந்தாலும் குடல் அடைப்பு ஏற்படும். குடலின் உட்புறம் புதிய சதை வளர்வுகள் அல்லது சவ்வுக் கட்டிகள் தோன்றினாலும் குடல் அடைப்பு நிகழலாம். குடல் தசைகள் சுருங்கினாலும் குடலின் உட்புறக்கூடு சுருங்கி அடைப்பு ஏற்படலாம்.
3. குழல் வடிவக்குடலின் மேற்புறமும், கீழ்புறமும் இணைந்து ஒட்டுகை ஏற்பட்டு குடல் முறுக்கம் ஏற்பட்டாலும் குடல் அடைப்பு ஏற்படலாம். குடல் பிதுக்கம் ஏற்பட்டாலும் குடல் அடைப்பு ஏற்படும்.
4. சிறுகுடலில் தான் 80% குடல் அடைப்பு நிகழ்கிறது.
5. பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் அடைப்பிற்கு குடல் சரியாக வளர்ச்சி பெறாதது, கருமல அடைப்பு அல்லது குடல் முறுக்கம் ஆகியவற்றில் ஒன்று காரணமாகலாம்.
6. குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் தடைக்கு, குடலின் உட்புற மடிப்பு காரணமாக அமையலாம். அல்லது முறுக்கிக் கொண்டு இருக்கும் குடல் இறக்கம் காரணமாக இருக்கலாம்.
நோய்க் குறிகள்
1. குடல் அடைப்பின் காரணமாக செரிமானம் ஆகாத உணவு வாந்தியாகும். வயிற்றுவலி இருக்கும். மலச்சிக்கல் ஏற்படும்.
2. வயிற்றுவலி விட்டுவிட்டு வரும். பெருமளவு காற்று பிரிந்த உடன் வலி குறையும்.
3. பெருங்கடலின் கடைசிப் பகுதியில் தடை இருந்தால் வாந்தி இருக்காது.
4. பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் காற்று கூட வெளியே போகாத அளவிற்கு மலச்சிக்கல் ஏற்படும்.
5. முன் சிறு குடலின் கடைசிப் பகுதியில் தடை இருந்தால் வயிற்றின் மேற்புறம் உப்பிக் கொண்டு மென்மையாக இருக்கும். பெருங்குடல் வாயில் அடைப்பு இருந்தால் நடுவயிறு உப்பிக் கொண்டு மென்மையாக இருக்கும். பெருங்குடலின் நடுப்பகுதியில் உள்ள குறுக்குக் குடலில் தடை இருந்தால் வயிறு முழுவதும் உப்பிக் கொண்டு இருக்கும்.
குடலில் எந்த இடத்தில் தடை இருக்கிறது என்பதை எக்ஸ்ரே எடுத்துத்தான் காண இயலும். பொதுவாக, தடையிருக்கும் பகுதிக்கு மேற்புறம் வயிற்றின் மீது தொட்டுப்பார்த்தால் மேற்புறம் மென்மையாகத் தோன்றும்.
மருந்து
1. பெல்லடோனா: வயிற்றின் இடதுபுறம், துணிபட்டால் கூட தாங்க இயலாத வலி, தும்மினாலும் இருமினாலும் கூட சுருக்சுருக் எனக் குத்தும். கொஞ்சம் அசைந்தாலும் வலி தாங்க இயலாது இருக்கும் குறிகளுக்கு ஏற்ற மருந்து.
2. கோலோசிந்திஸ்: வயிற்றில் வெட்டும் வலி, அதன் காரணமாக வயிற்றின் மீது எதையாவது வைத்துக் கொண்டு முன்புறமாக இரண்டாக மடிந்து கொள்ளும் நிலைக்கு ஏற்றது.
3. மெர்க்கோர்: உப்பிக் கொண்டிருக்கும் வயிறு பெருங்குடலின் பகுதியாகிய குறுக்குக் குடலில் ஏற்பட்டுள்ள தடை அல்லது பெருங்குடலின் வாய்ப்புறத்தில் தடை காரணமாக ஏற்பட்டுள்ள வலிக்கு ஏற்றது.
4. நிக்ஸ்வாமிகா: குடல் முறுக்கிக் கொண்டதனால் ஏற்பட்ட குடல் அடைப்புக்கு ஏற்றது.
5. ஓபியம்: குடல் அடைப்பு காரணமாக ஏற்படும் நாட்பட்ட மலச்சிக்கலுக்கு ஏற்றது.
6. பிளம்பம் - மெட்: வயிற்றின் பகுதியிலிருந்து உடலின் பல பாகத்திற்கும் பரவிச் செல்லும் முடக்குவலி மற்றும் வயிற்றை முள்ளந் தண்டுடன் உட்புறம் இழுத்துப் பிணைத்தது போன்ற உணர்வுக்கு ஏற்றது.
இந்த நோய் மிகத் தீவிரப் பின் விளைவுகளை உண்டாக்கக்கூடியது. குடல் முறுக்கிக் கொண்டுள்ளதா, குடற் புற்று ஏற்பட்டுள்ளதா, குடல் சுருங்கிவிட்டதா அல்லது பிதுங்கி விட்டதா, எதனால் தடையேற்பட்டது என்பதை மிக விரைவில் கண்டுபிடித்து அதற்கேற்ப மருத்துவம் பார்க்க வேண்டும். மருத்துவரின் சமயோசித புத்திக்கும், திறமைக்கும், சவாலாக இந்த நோய் அமைந்துவிடுகிறது. மிக விரைவில் சரியான முடிவெடுத்து சரியான மருத்துவம் பார்க்க வேண்டும். மருத்துவம் தேவையா அல்லது அறுத்துவம் (ஆபரேசன்) தேவையா என்பதை குடலியல் நிபுணர் தான் தீர்மானிக்க வேண்டும். கடுமை குறைவான குடல் அடைப்புகளும் உண்டு.
கடுமை கூடுதலான குடல் அடைப்புகளும் உண்டு. பெரும்பான்மையான சிக்கல்களுக்கும் குழந்தைகட்கும் நடுத்தர வயதினருக்கும் ஏற்படும் குடல் அடைப்புகளில் பெல்லடோனா மற்றம் நிக்ஸ்வாமிகா கைகண்ட பலன்களை அளித்துள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடல் அடைப்புக்கான அறிகுறி; பாதிப்பு - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - குடல், அடைப்பு, குடலின், ஏற்படும், கொண்டு, அல்லது, இருக்கும், காரணமாக, ஏற்றது, வயிற்றின், உட்புறம், உப்பிக், இருந்தால், குடலில், பெருங்குடலின், ஏற்படலாம், என்பதை, வேண்டும், மருத்துவம், மேற்புறம், பகுதியில், சுருங்கி, நிகழலாம், நோய், இடத்தில், முறுக்கிக், கடைசிப்